August 04, 2019

சிந்திக்கவேண்டிய அவசர நிலைக்கு, தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம்

முஸ்லிம் சமூகம் மீண்டுமொரு தடவை சிந்திக்கவேண்டிய அவசர நிலைக்கு செல்வாயான்று கொழும்பில் நடந்துமுடிந்த அமைதி, சமாதானம் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு அமைந்துவிட்டதை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் பௌத்த தரப்பினரால் முன்வைக்கப்பட்ட இஸ்லாம் குறித்தும் குர்ஆன் தொடர்பிலும் பிழையான அர்த்தம் கற்பிக்கக்கூடிய விதத்தில் செயற்பாடுகள் அமைந்துள்ளதை நன்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.  

இலங்கை முஸ்லிம்கள் மீதும் குர்ஆன் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பௌத்த துறவியுமான ஓமல்பே சோபிததேரர் தெரிவித்த கருத்துக்களால் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த முஸ்லிம்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. குர்ஆனிய வசனங்கள் தொடர்பில் அவர் தவறான அர்த்தங்களை கற்பிக்க முனைந்ததை இங்கு அவதானிக்க முடிந்தது.  

சகவாழ்வுக்கும், சமாதானத்துக்குமாக கூட்டப்பட்ட ஒரு தேசிய மாநாட்டில் ஒரு மதத்தின் மீது மற்றொரு மதம் சார்ந்தவர் குற்றச்சாட்டு சுமத்த முற்படுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றி நாம் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அதுவும் நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உலக முஸ்லிம் லீகின் கரீம் அல்லிஸா, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்விமுப்தி உட்பட பல மதங்களையும் சேர்ந்த பெருந்தொகையினர் மத்தியில் தெரிவிக்கப்பட்ட ஓமல்பே தேரரின் கூற்றுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.  

ஓமல்பே சோபித்த தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சமாதானத்தை ஏற்படுத்த அனைத்து இன மக்களும் ஐக்கியமாக ஒன்றுபோல் வாழவேண்டும். சிங்கள, தமிழ் கத்தோலிக்க மக்கள் அதன் பிரகாரம் செயற்படுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் வித்தியாசமாகவே செயற்படுகின்றனர். குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம், அவர்களின் ஆடை, உணவு போன்றவற்றில் தனித்துவமாகவே செயற்படுகின்றனர். இவ்வாறு சென்றால் எதிர்காலத்தில் தனி அரசாங்கம் தனி நாடு என்ற நிலைக்கே இது இட்டுச் செல்லும். அத்துடன் அல்குர்ஆனில் சில வசனங்கள் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.  

அவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.  

ஓமல்பே சோபித்த தேரரின் இந்த உரையைத் தொடர்ந்து உரையாற்ற வந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவரது குற்றச்சாட்டுக்களுக்கு மேடையிலேயே பதிலளித்தார்.  

அவர் அங்கு தெரிவிக்கையில், இஸ்லாம் ஒருபோதும் அடிப்படைவாதம், இனவாதத்தை அனுமதித்ததில்லை. நல்லிணக்கத்தையே இஸ்லாம் போதிக்கின்றது. அத்துடன் ஓமல்பே சோபித்த தேரர் அல்குர் ஆனின் வசனங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பிழையானவையாகும். அவ்வாறான சில வசனங்கள் சில அல்குர் ஆன் இறக்கப்பட்ட யுத்த காலத்துடன் தொடர்புபட்டவையாகும்.  

அது தொடர்பில் நாங்கள் சிங்கள மொழியில் புத்தகம் ஒன்றை எழுதிவெளியிட்டிருக்கின்றோம். அதனால் குர்ஆன் வசனங்கள் தொடர்பில் தெளிவின்மை இருந்தால் அதுதொடர்பில் எம்மிடம் கேட்டிருந்தால் தெளிவுபடுத்தியிருப்போம் என்றார்.  

ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரது பதில் இந்த இடத்துக்கு பொருத்துவதாக காணப்பட்டாலும் முஸ்லிம் சமூகம் கடந்த காலத்தில் நிறையவே தவறவிட்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிட முடியாது. முஸ்லிம் சமூகம் தொடர்பில் பெரும்பான்மை சமூகம் நீண்டகாலமாகவே சந்தேகத்தை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்த சந்தேகம் மக்கள் மத்தியில் இனவாதம் வலுவடைவதற்கு காரணமாக அமைத்துவிட்டது.  

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான செயல் பெரும்பான்மை மக்களின் சந்தேகம் உண்மை என்பதை நிரூபித்துவிட்டது. 150க்கும் குறைவானதொரு குழு செய்த இந்த மிலேச்சத்தனமான செயல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும், ஏன் இஸ்லாத்தையும் கூட வெறுப்புணர்வுடன் பார்க்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.  

இதிலிருந்து விடுபடவேண்டுமானால் நாம் நிறையவே செய்யவேண்டியுள்ளது. அடிமட்டத்திலிருந்து சமாதான சகவாழ்வைக்கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். இவ்வாறானதொரு நிலையிலேயே மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலும், மரியாதைக்குரிய அஸ்செய்யித் அப்துல்காதர் மசூர்மௌலானாவும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தேசிய சமாதான சகாவாழ்வு மாநாட்டை ஏற்பாடு செய்தனர்.  

இம்மாநாடு தேசிய மாநாடு என்றபோதிலும் சர்வதேசத்தையும் உள்வாங்கிய நிலையிலேயே நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதனை இஸ்லாமிய மாநாடாக அடையாளப்படுத்த சில சக்திகள் முனைந்தன. இந்த மாநாட்டை தடைசெய்யுமாறு சிலர் ஜனாதிபதியிடம் கூட தூது போயுள்ளனர். ஆனால் இந்த மாநாட்டை பெறுமதியை உணர்ந்த ஜனாதிபதி மாநாட்டை தடுப்பதைவிட அதனை மேலும் வலுவடையக் கூடிய சக்திமிக்க மாநாடாக நடத்துவதற்கு உறுதிபூண்டார்.  

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவந்த ஜனாதிபதி 5மணிமுதல் 8.30மணிவரையிலான மூன்றரை மணிநேரம் அமர்ந்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்கதாகும்.  

இந்த மாநாட்டில் முக்கிய அதிதியாக கலந்துகொண்ட உலகமுஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத்பின் அப்துல் கரீம் அல்லியா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகும். இதனை கொழும்புப் பிரகடனமாகக் கூட வர்ணிக்கமுடியும்.  

அவர் தனதுரையின்போது பயங்கரவாதத்தை உலகளவில் ஒழிப்பதற்குப் பாடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அந்த உரையின் முக்கிய அம்சங்களை தொட்டுப்பார்த்தேயாக வேண்டியுள்ளது.  

வரலாற்றுப் புகழ்மிக்கதொரு மாநாட்டில் உங்களுடன் சேர்ந்து பங்கேற்கக் கிடைத்தமைக்காக பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். பயங்கரவாதம் எங்கிருந்து வந்தாலும், எந்த உருவத்தில் வந்தாலும் அதனை ஒருபோதும் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய காலச் சூழலில் மிக அவசியமானதொரு மாநாடாகவே இந்த மாநாட்டை நான் கருதுகின்றேன்.  

இலங்கையில் கிறிஸ்தவ மதவழிபாட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பயங்கரவாத தாக்குதல் மதஸ் தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் மத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அணுகுமுறையாகவே தெளிவாக உள்ளது. இத் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச்சில் முஸ்லிம் பள்ளிவாசலில் மத வழிபாட்டாளர்கள் மீது கொடுமையான துப்பாக்கி பிரயோக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் பென்சில்வேனியாவில் யூதர்கள் மீது இதே போன்றதொரு தாக்குதல் இடம்பெற்றது.  

மதங்களிடையே சமாதானம் பற்றிய இந்த முக்கிய மாநாடு மதங்களின் அடிப்படை உண்மையான அன்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை மதவழிபாட்டாளர்களிடையே உறுதி செய்ய துணைபுரிகிறது. எந்தவொரு மதமும் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக ஒரு போதும் விளங்குவதில்லை. உலகத்திற்கு அருட்கொடையாகவே உம்மை நாம் அங்கு அனுப்பி வைக்கிறோமென நபிமணி முஹம்மது (ஸல்) பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.  

பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையை மட்டும் பாதித்துவிடவில்லை. கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்கள் பரவலான கண்டனத்திற்கு உட்பட்டது. முஸ்லிம் மதத் தலைவர்களும் இத்தாக்குதல்களை கண்டித்திருந்தனர். இக் கண்டனங்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த போதாதது மட்டுமன்றி எந்த விதமான தீர்வையும் வழங்கப் போவதில்லை.  

இந்த கொழும்பு தேசிய மாநாடு தற்போதைய நிலைக்கு ஓர் உண்மையான அடிப்படைத் தீர்வை வழங்க வழிவகை செய்கிறது. முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் விடயத்தைக் கையாண்டு திறமையாக செயற்திறனுடன் தீய பயங்கரவாதத்தை அம்மாநாட்டில் பங்கேற்போர் எதிர்கொள்ள திரள வேண்டும்.  

இலங்கையில் பன்னெடுங்காலமாக பயங்கரவாதமும் அமைதியின்மையும் நிலவி வந்தது. இந்த சூழலில் இந்த கொழும்பு பிரகடனம் பங்கேற்போரின் எதிர்பார்ப்புகளையும், இயல்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இடம்பெறுமென நம்பிக்கை கொள்வோம்.  

தீய சக்திகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் அப்பாற்பட்டு எமது இவ் உலகம் இறைவனின் ஆணைப்படி பாதுகாப்பாக அமையும். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அவர்களின் கொள்கையை அது எவ்வகையாக இருப்பினும் அதை புறந்தள்ள இறைவன் ஆணையிட்டுள்ளான். இம் மாநாடு நிலையான தொடர்ந்த ஒற்றுமையின் இயல்பை மதிப்பீடு செய்ய வழிவகை செய்யும். அடிப்படை பயங்கரவாத மற்றும் கடுமையான தீவிரவாத பிரச்சினைகளைத் தீர்க்க எங்களிடையே காணப்படும் குறைபாட்டை நாம் மறுப்பதற்கில்லை இருப்பினும் எமது தீர்மானத்தில் பற்றாக்குறை அல்லது தளர்வு காணப்பட்டால் அதுவே இந்நிலைக்கு விட்டுச் செல்லும்.  

கண்காணிக்கப்படாத வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன பகைமையான நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. கொள்கைகள் மற்றும் எதிர்வு கூறல்கள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டு இவை இயல்பாகவே காணப்படுகின்றன. இந்த சுதந்திரமான உலகில் கடுமையான தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பிற நாட்டிற்கு பரப்புவதற்கு சிலர் சாக்குப் போக்குகளை கையாண்டு வெளிப்படுத்துவார்கள். நாம் தற்போது இலங்கை மண்ணில் உள்ளோம். இலங்கை, பௌத்தர்களை அதிகமாகக் கொண்ட நாடாகும். இதனை ஒவ்வொருவரும் அன்பை பரிமாற்றல், பிறரை மதித்தல், அமைதியாக வாழ்தல் என்பனவற்றின் மூலம் புரிந்துக் கொள்ள வேண்டும்.  

இந்த பெறுமதிமிக்க உரையை புத்திஜீவிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.  மாநாட்டுக்கு முத்திரை பதித்ததொன்றாகவே இந்த உரையை கணிக்க முடிந்துள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் ஆற்றிய உரை கூட முக்கியத்துவம் மிக்கதாகவே நோக்கப்படவேண்டும். சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, பயங்கரவாதத்தையும் அடிப்படைவாதச் செயற்பாடுகளையும் முற்றாக ஒழிப்பதற்காக உறுதிபூண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.  

உண்மையிலேயே இந்த சமாதான சகவாழ்வுக்கான தேசிய மாநாடு காலத்தின் கட்டாயத் தேவையென்பது முக்கியமானதாகும்.

அத்துடன் ஏப்ரல் 21உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக முஸ்லிம் லீக் கவலையையும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருக்கும் அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரண நிதியாக கொடுப்பதற்கான அறிவிப்பையும் செயலாளர் நாயகம் மாநாட்டில் பகிரங்கமாக விடுத்தார்.  

மேல்மாகாண ஆளுநர் முஸம்மிலின் அயராத முயற்சியில் சமாதான சகவாழ்வு தேசிய மாநாடு நடந்து முடித்து விட்டது. இனி அடுத்து என்ன? ஓய்ந்து விடுவதா பயணத்தை முன்கொண்டு செல்வதா என்பதே முக்கியமானது. பத்தோடு பதினொன்றாக இந்த மாநாட்டிடையும் எடைபோடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.  

உலகளாவிய சமாதான, சகவாழ்வுக்கான ஆரம்பப்புள்ளியை தான் நாம் கொழும்பில் போட்டுள்ளோம் இனித் தான் பொறுப்புக்கள் குவித்து கிடக்கின்றன. நிறையவே காரியங்கள் உள்ளன. உறுதியுடன் இந்தப் பயணம் தொடரவேண்டும். அனைத்து இனமக்களுக்கும் ஒன்றாக கைகோர்த்துப் பயணிக்க வேண்டும்.

இனங்களின் ஒன்றுபட்ட முயற்சிமிக அவசியமானது. மக்கள் மனங்களை வென்றெடுப்பதே முதற் பணியாக இருக்கவேண்டும். நிச்சயமாக அது எம்மால் முடியும். உறுதியுடன் இந்தப் பயணத்தை தொடர்வோம்.    

எம். ஏ. எம். நிலாம்  

0 கருத்துரைகள்:

Post a Comment