Header Ads



99.9 வீதமான முஸ்லிம்களுக்கு பயங்கரவாதத்துடன், எந்த தொடர்பும் கிடையாது - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டதற்கு ஒன்றிணைந்த எதிரணி எம்.பிகள் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட்டு நிரபராதி என அறிவிக்கப்படாத நிலையில் அவர் அமைச்சுப் பதவி ஏற்றது தவறு என அவர்கள் குறிப்பிட்டனர். 

அவசரகாலச் சட்டத்தை ஒருமாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது.இங்கு உரையாற்றி மஹிந்தானந்த அலுத்கமகே, செஹான் சேமசிங்க, டீ.வி.சானக்க போன்றோர் இது தொடர்பி்ல் கருத்து தெரிவித்தனர். 

மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி உரையாற்றுகையில், ரிசாத் பதியுதீனுக்கு அரசாங்கம் மீண்டும் அமைச்சு பதவி வழங்கியது தவறு. அவர் குண்டு கொண்டுவந்ததாகவோ ஐ.எஸ்ஸிற்கு உதவியதாகவோ கூறவில்லை. ஆனால் அவர் மறைமுகமாக பயங்கரவாதத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டுள்ளது. 

சகல முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறவில்லை.99.9 வீதமானவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. ரவூப் ஹக்கீம். கபீர் ஹாசிம், ஹலீம் போன்றோருக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பிருப்பதாக நாம் குற்றம் சாட்ட மாட்டோம். பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

செஹான் சேமசிங்க எம்.பி கூறியதாவது, ரவூப் ஹக்கீம் குறித்து எமக்கு எதிர்ப்பு கிடையாது.அவர் விலகியதற்கும் நாம் எதிர்ப்பு வெளியிட்டோம். ரிசாத் பதியுதீன் அமைச்சு பொறுப்பு ஏற்றதை எதிர்க்கிறோம்.சுயாதீனமான விசாரணை நடைபெற்று நிரபராதி என அறிவிக்க முன்னர் அவர் பதவி ஏற்றுள்ளார்.

ரீ.வி.சானக்க எம்.பி கூறுகையில்,

அமைச்சர் ரிசாத் பதியுதீன்,டொக்டர் சாபி போன்றோர் நிரபராதிகளாகி விட்டனர். அவர்களுக்கெதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உரிய விசாரணை நடைபெறவில்லை என்றார். 

No comments

Powered by Blogger.