August 29, 2019

இந்த 2 முஸ்லிம் குடும்பங்களுக்கும் உதவப்போவது யார்...?

(நிராஷா பியவதனி, சபீர் முஹமட்)

தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புகளைப் பேணியதுடன், அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்பி அவற்றுக்கு ஆரவு வழங்கியதாக கூறப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் தமது உண்மை நிலையை வெளிக்கொண்டுவர சட்ட உதவியை நாடும் சம்பவமொன்ன்று ஹொரவப் பொத்தானையில் பதிவாகியுள்ளது.

இவர்களுள் ஒருவர் அப்துல் மஜீத் நியாஸ் மற்றயவர் அவரது சகோதரர் அப்துல் மஜீத் நிஸார.  இருவரும் ஹொரவப்பொத்தானை முக்கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 2019 ஏப்ரல் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மே மாதம் 1 ஆம் திகதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

'அவர் பிரதேசத்தில் எல்லோரும் அறிந்த சமூகசேவையாளர். அவருக்கு நலன்புரி வேலைகளைச் செய்வதற்கு பணம் வந்தது உண்மை. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் ஏழை மக்களுக்கு வீடு வாசல் கட்டிக்கொடுத்துஇ  தண்ணீர் வசதியற்றவர்களுக்கு கிணறு கட்டிக்கொடுத்து, வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு கல்விச்செலவினைப் பெற்றுக்கொடுத்து, தந்தையல்லது தாயிழந்து சிறுவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவி வந்துள்ளார். முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இதே உதவிளைச் செய்துள்ளார். ஹொரவப்பொத்தானை மற்றும் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலைகளுக்கு கிணறு கட்டிக்கொடுத்துள்ளார். நீர் வசதி செய்து கொடுத்துள்ளார். பிரதேச பள்ளிவாசல்களுக்கு உதவியுள்ளார். ஆனால், இன்று அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நாளாந்த  வாழ்கைச் செலவுக்கு ஏனையவர்களின் தயவை நாடவேண்டி நிலையில் நாம் உள்ளோம்' என நியாஸ் மௌலவியின் மனைவி; குறிப்பிட்டார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவித்த போது, 'சொந்தப் பிள்ளைகளுக்கு நகை நட்டுகளைக் கூட வாங்காமல் நான் கஷ்டப்பட்டு சேனைப்பயிர் செய்து உழைத்த பணத்தைக் கூட யாராவது கேட்டு வந்தால் அப்படியே கொடுத்து விடுவார். நான் கேட்டால் நமக்கு அல்லாஹ் தருவான் என்பார' என அவர் எனக் குறிப்பிட்டார்.

அவ்வாறாயின் நியாஸ் மௌலவியின் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? உண்மையில் அவருக்கு பணம் கொடுத்தது யார்? அவற்றுக்கு அவர் என்ன செய்தார்? எனப் பல்வேறு கேள்விகள் எழமுடியும்.
'சேனைப்பயிர் மற்றும் வேளாண்மை மாத்திரமே செய்து பிழைத்து வந்தார். சஹ்ரானுடன் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவனை தொலைபேசியைப் பயன்படுத்தி இணைத்தளத்தில் பார்க்கவும் தெரியாது. என்னிடம் சின்ன போன் ஒன்றே உள்ளது. லெப்டெப் மற்றும் கொம்பியூட்டர்களையும் எமக்குப் பார்க்கத் தெரியாது. வீட்டில் சீடி பிளேயர் ஒன்று கடந்த ஐந்து வருடங்களாகப் பயன்படுத்தாமல் உள்ளது. வீட்டை பலமுறை சோத்தித்தார்கள் எதனையும் கண்டு பிடிக்கவில்லை. வழக்குச் செலவுக்கும் நாளாந்த செலவுக்கும் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது' என்றார் நியாஸ் மௌலவியின் சகோதரன் நிசார். அவ்வாறெனில் நிசார் என்ன குற்றம் செய்தார்? ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

மாவனெல்ல ஹெம்மாத்தகம பிரதேசத்தில் வசித்துவந்த எம்.எஸ்.எம். ஜிப்ரி என்பவரிடம் இருந்து நியாஸ் மௌலவிக்கு அடிக்கடி பணம் வந்துள்ளது என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எம்.எஸ்.எம். ஜிப்ரி என்பரும் நலன்புரி வேலைகளுக்காக பணம் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜிப்றி என்பவர் குறிப்பிட்டகாலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட நியாஸ் மௌலவி இன்னும் சிறையில் இருக்கின்றார். அதேநேரம், குறிப்பிட்ட பணத்தை, தனது மனைவி குறிப்பிட்டது போன்று கடந்த பல ஆண்டுகளாக நலன்புரி வேலைகளில் அவர் பயன்படுத்தியுள்ளார். 
அதிக பணத்தை வைத்திருந்தார் என்பதோ  சமூக சேவைகளில் மூலம் வருமான் ஈட்டினார் என்பதோ அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. மாறாக, முக்கரவௌ கிராமத்தில் ஒரு தவ்ஹித்  மத்ரசாவை நடத்தி வந்ததாகவும், கதிஜா பின்  குவைலித் எனும் புதிய பள்ளி ஒன்றை நிர்மாணித்ததாகவும் அடிப்படை வாதத்தைப் போதித்து வந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகின்றது. அதேநேரம், ஒரு அப்பல் கைப்பேசி மற்றும் 46 இறுவெட்டுக்கள் உட்பட 36 இறப்பர் முத்திரைகள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது பற்றி; மேற்கொண்ட புலனாய்வின் போது குறிப்பிட்ட மத்ரசா சில போது கடனிலும் சிலவேளைகளில் நன்கொடைகளிலும் சிலநேரம் உள்ளூர் வெளிநாட்டு தலைவர்களின் உதவியுடனும் இயங்கிவந்ததை தெரிய வந்துள்ளது. அதேநேரம், பணம் சம்பாதிக்கும் இடமாகவோ, பயங்கரவதத்தை போதிக்கும் இடமாகவோ குறித்த மதரசா அமைந்தமைக்கான எந்த ஆரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. 

36 இறப்பர் முத்திரைகள் பற்றி வினவியபோது  -- கடந்த 10 வருடங்களாக  மத்ரசா, பள்ளிவாசல், நன்கொடை நிறுவனம் என்பவற்றில் பயன்படுத்தப்பட்ட பழைய, புதிய இறப்பர் முத்திரைகளையே பொலீசார் கைப்பற்றியதாக நியாஸ் மௌலவியின் உறவினர்கள் உறுதியாகக் குறிப்பிட்டனர்.
கதிஜா பின்  குவைலித் எனும் பள்ளிவாசல் பற்றிக் கேட்டபோது குறித்த பள்ளிவாசல் சவூதிப் பெண்மணியொருவர் தனது உறவினரின் பெயரால் அதனைக் கட்டிக் கொடுத்ததாகவும் அவரது நாட்டு தூதரகத்தின் உதவியுடன்தான் நிதி வழங்கிய ஆவணங்களை வழங்க அவர் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். என்றாலும், நியாஸ் மௌலவி வெளியில் வராத வரையில் இதனை உறுதிப்படுத்தவோ சட்டத்தின் முன்கொண்டு செல்லவோ அவரது குடும்பத்தினர் முடியாத நிலையில் உள்ளனர். 
இதேநேரம், அரசாங்கம் இரசாயனப் பகுப்பாய்வு நிறுவனத்திடம் மேலதிக பரிசோதனைகளுக்காக வழங்கப்பட்ட அவரது கைப்பேசி, மடிக்கணினி மற்றும் ஆவணங்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இதுவரை வெளிவரல்லை. இந்த விடயத்தில் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டுவர குறைந்த பட்சம் முஸ்லிம் சட்டத்தரணிகளாவது உதவவேண்டுமென அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

சாதாரன தவ்ஹித் இயக்க சிந்தனைகளின் பிரகாரம் செயற்பட்டு வந்த இவர் தேசிய தவ்ஹித் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக குற்றப் பத்திரிகை சுட்டிக்காட்டவில்லை. 

இந்த நிலையில், நியாஸ் மௌலவி கடந்த மூன்று மாதங்களாக சிறையில் இருப்பதால் அவரது நலன் புரிக் கணக்கு வழக்குகளை ஆவணப்படுத்தி சட்டத்தரணிகளுக்கோ நீதி மன்றத்திற்கோ வழங்குவதற்கு குடும்பத்தினரால் முயாத நிலை உருவாகியுள்ளது.  இரசாயணப் பகுப்பாய்வு நிறுவனத்திடம் உள்ள அவரது கைப் பேசி மற்றும் கணணி பற்றிய சோதனை அறிக்கைக்கு என்ன நடந்துள்ளது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவரிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பலர்  சாட்சியமளிக்க விரும்பினாலும் இந்த நிலையில் அதுவும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. 

இந்நிலையில் இரண்டு விடயங்கள் மிகவும் மனதை உறுத்துதுவதாக அமைகின்றன. ஒன்று நியாஸ் மௌலவியின் குடும்பம் சமகாலத்தில் எதிர் நோக்கும்  சமூகப் பொருளாதார நிலை. இரண்டாவது அவரின் சகோதரன் கைது நிசார் செய்யப்பட்ட நிலை.

'இலட்சக் கணக்கில் காசு வந்ததாக நம்பும் பலர் இன்று நாங்கள் முகங்கொடுத்துள்ள நிலையை உணரமாட்டார்கள். வீட்டில் அன்றாட செலவினங்களுக்கு எமது சகோதரியும் மச்சானும் உதவுகின்றனர். பணவசதியில்லாத நிலையில்  மகள் பாடசாலைக்கும் மகன் யாழ் பல்கலைக் கழகத்திற்கும் போக முடியாது என்கின்றனர். பிள்ளைகளை  சக நண்பர்கள் குற்றக் கண் கொண்டு பார்ப்பதால் அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளக் கூச்சப்படுகின்றனர். சட்டத்தரணிகளுக்கு பணம் வழங்கவும் முடியா நிலை உருவாகியுள்ளது. நான் சேனை செய்தாவது பிள்ளைகளை காப்பாற்றுவேண். ஆனால், எங்களுக்கு நிதியை பெற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. எமது இந்த நிலையிலிருந்து விட யாரிடம் உதவி கோருவது என்றும் தெரியவில்லை. ஆனால், பண உதவியை விட, நீதியைப் பெற்றுக் கொள்ள யாராவது உதவ வேண்டும். எமக்கு பணம் வேண்டாம். எம்மை குடும்பத்தினர் கவனித்துக் கொள்வார்கள். ஆனால், நாங்க எவ்வாறு நீதியை விரைவாகப் பெறுவது என்றுதான் தெரியவில்லை' என்றார், நியாஸ் மௌலவியின் மனைவி.

நியாஸ் மௌலவியின் நண்பர்கள், ஊர் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள்  அவர் பற்றி யாரும் அறிந்திருக்காத தகவல்களை வெளிக்காட்டின. ஒரு ஆசிரிய நண்பர் 'எனக்கும் அவருக்கும் அரசியல் மற்றும் சமய நம்பிக்கையில் சில முரண்பாடுகள் உண்டு. சில நேரம் நாங்கள் மனம் விட்டுப் பேசுவதில்லை. ஆனால், எவ்வளவுதான்  பணம் வந்தாலும் அவர்    பல்வேறு சந்தர்ப்பங்களில் கைச்செலவுக்கு போதாத நிலையில் இருந்துள்ளார். அவர் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்றோ அல்லது நன்கொடைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முற்பட்டார் என்றோ யாரும் கூறினால் அதனை நம்பமாட்டேன்' என்றார்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட விடயங்களுக்கு அப்பால் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்த, குடும்பத்தினர் சட்ட நிபுணர்களின் உதவியை எதிர்பார்க்கின்றனர். சில சந்தேகங்களை தெளிவுபடுத்த அவர் வெளிவர வேண்டிய தேவை இருப்பதால் குறைந்த பட்சம் பிணை மனுக்கோரும் விடயத்தில் எவ்வாறு செயற்பட முடியும் என்ற வழிகாட்டல்கள் தேவையான நிலையில் உள்ளனர். $
நியாஸ் மௌலவி கைது செய்யப்பட்டபோது அவரிடம் அரபு மொழியில் மதரசா புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் சில இறுவட்டுக்களை இருந்துள்ளன. ஒரு அரபு மதரசாவை நடத்தும் ஒருவரிடம் அரபு மொழியிலான ஆவணங்கள் இருப்து அபூர்வமான ஒன்றல்ல.  எவ்வாறாயிலும், என்ன ஏது என்று தெரியாமல் பொலிஸ் வந்து பிரச்சினைப் படுத்தக்கூடும் என்ற பயத்தில் குடும்பத்தில் உள்ள சிறுவர்ள் அவற்றை சாச்சாவின் வீட்டில் வைத்துள்ளனர். 'அரபு மொழியில் எதைக் கண்டாலும் பொலிசார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தால் அவ்வாறு செய்ததாக நியாஸ் மௌலவியின் மனைவி குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, பொலிஸ் வந்து தேடியபோது அந்த அரபுமொழி ஆவணங்களை சிறுவர்களும் வீட்டில் உள்ளவர்களும் தாமாகவே எடுத்துக் கொடுத்துவிட்டனர். இதனை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என சந்தேகித்த பொலிஸ் அவற்றை வைத்திருந்த அல்லது கொண்டுவந்து சிறுவர்களை பொலிசுக்கு கொண்டு சென்றனர். 

அதேநேரம், சாச்சாவின் ஆவணங்களை ஒழித்த அல்லது இடம் மாற்றிய குற்றத்திற்காக  சிறுவர்களை பொலிஸ் கைது செய்ய ஆயத்தமாகினர். 

அப்போது யாதுமறியாக சிறுவர்களைக் கைது செய்ய வேண்டாம் என நியாஸ மௌலவியின் சகோதரன் நிசார் பொலிசாரிடம் கேட்டுள்ளார். பொலீசார் குறைந்தது ஒருவரையாவது கைது செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்ட போது, ' சேர் என்னைக் கைது செல்லுங்கள்  பிள்ளைகளை ஒன்றும்  செய்ய வேண்டாம்'  என்று கூற பொலிஸார் எந்தத் தப்பும் செய்யாத நிஸார் என்பவரை குற்றவாளியாக்கியுள்ளனர்.

தேவையில்லாத அச்சத்தின் விளைவாகவும் பொலிஸாரின் வீண் சந்தேகத்தின் காரணத்தாலும் விவசாயமும் கூலித் தொழிலும் செய்து நாளாந்த வாழ்க்கையை மிகவும் சிரமத்தின் மத்தியில் ஓட்டிவந்த நிஸார் என்பவர் இன்றுவரை சிறையில் உள்ளார். அடிப்படைவாதத்திற்கு அல்லது பயங்கரவாதத்திற்கு துணை நின்ற குற்றச்சாட்டில் உள்ளே இருக்கும் அவரது உண்மை நிலையை வெளியில் கொண்டுவர சட்டத்தரணிகளின் உதவி தேவைப்படுவதை அறிய முடிகின்றது.

இந்த அறிக்iயிடல், உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி சரியான வேளையில் கிடைக்க வேண்டும் என்ற ஒரே சமூக நோக்கை மாத்திரமே நான் இலக்காகக் கொண்டுள்ளது.  மேலதிக விசாரனைகளை பாதிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. நீதியின் மீது குடும்பத்தினரும் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர். 

1 கருத்துரைகள்:

முதலில் ஏன் இந்த வழிகெட்ட தெளஹீதில் இனைந்தீர்கள்

Post a comment