Header Ads



2020 ஜனாதிபதி தேர்தலும், JVP யும் - முஸ்லிம்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?

- ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் -

ஜனாதிபதி தேர்தலுக்கான வேற்பாளர்களை மொட்டு கட்சியும் JVP யும் அறிவித்துவிட்டன. ஏனைய இரண்டு பிரதான கட்சிகளான UNP மற்றும் SLFP ஆகியன இதுவரை தங்களது வேட்பாளர்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் சஜித் பிரேமதாச தன்னை UNP சார்பான வேட்பாளராக சுய அறிமுகம் செய்து கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில் JVP யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகம் செய்யும் கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் அதன் தலைவர் அனுர திஸாநாயக்காவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் கலம் இருந்ததை விட சூடானது. அதைத் தொடர்ந்து மக்கள் தங்களது ஆதரவையும் உற்சாகமான வரவேற்ப்பையும் ஒரு படி மேலாக JVP க்கு வழங்க முன்வந்தனர்.

கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு JVP ஆற்றிய பங்களிப்புகளை மக்கள் நான்கே அறிந்து வைத்துள்ளனர். குறிப்பாக ஆட்சி மாற்றங்களுக்கு தாங்கள் காரணமாயிருந்தோம் என்பதற்காக குறித்த ஆட்சியில் நடைபெறும் அத்தனை முறைகேடுகளையும் அவர்கள் அனுமதித்து செயற்பட்டதே இல்லை. இது இவர்களது தூய அரசியல் நிலைப்பாட்டை காட்டி நின்றது.

இவர்களது இந்த நிலைப்பாடு இலங்கை மக்கள் மத்தியில் அக்கட்சி குறித்த நல்லதொரு அபிப்பிராயத்தை வளர்த்திருக்கிறது என்றே கூறவேண்டும். இதை உண்மைப்படுத்துவதாகவே சென்ற 18-08-2019 காலிமுகத்திடலுக்கு அணிதிரண்டு வந்திருந்த அதன் ஆதரவாளர்களின் உணர்ச்சி பூர்வ வருகை மீண்டுமொருமுறை பறைசாட்டியிருக்க வேண்டும்.

அனுரா திசாநாயக்க JVP யின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்து அக்கட்சி பாரிய வளர்ச்சியை அடையாவிட்டாலும் கட்சி குறித்து ஒரு நல்லபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறார். அதன் ஆதரவாளர்கள் வட்டம் மத்த்திரம் இன்னும் ஏன் ஆமை வேகத்தில் செல்கிறது என்பது பற்றி அதன் தலைமைகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

இந்த பின்னணியில் வரவிருக்கிற தேர்தல் JVP அணியினருக்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று அல்லது அதை விட  இலங்கை மக்களுக்கு வரலாற்று முக்கியமிக்க ஒரு தேர்தலாக அமையப்போகிறது என்பது மட்டும் நிச்சியம்.

இன்றுள்ள களநிலவரங்களை பார்க்கின்றபோது சுமார் 70 வருடங்களாக மாரி மாரி ஆட்சி செய்த இரு பிரதான காட்சிகளையும் வெறுப்புடன் நோக்குகின்ற நிலையில், JVP மிக புத்திசாதுர்யமாக காய்நகர்தினால் மிக இலகுவான வெற்றியை அடைந்து கொள்ளமுடியுமாயிருக்கும்.

மொட்டு சின்ன கட்சியை பொறுத்தளவில் மக்களிடம் செல்வாக்கிருந்தாலும் அவர்களது கடந்த கால செயல்பாடுகளில் மக்கள் பெற்ற அனுபவமும் அக்கட்சியின் பெரும்பாலான பிரதானிகள் குறித்தும் மக்கள் திருப்தி அடையும் நிலையில் இல்லை என்பதும் பெரும்பாலானவர்களின் மனோநிலையாக இருக்கிறது.

UNP யின் எதிர்பார்க்கப்படுகிற ஜனாதிபதி வேற்பாளரான சஜித்தின் செயல்பாடுகளுக்கு மக்களின் அங்கீகாரமிருந்தாலும் ஒரு நாட்டை ஆளுகின்ற தகைமை இருக்கிறதா என்பது படித்த சமூகத்தின் முன்னுள்ள அச்சம் கலந்த வினாவாக இருக்கிறது.

தந்தை பயணித்த பாதையிலே தானும் பயணித்து நாட்டை முன்னேற்றுவதாக அடிக்கடி கோஷமிடும் இவர் செயல்பாட்டிலும் அதையே நிறுவிக்கொண்டுமிருக்கிறார். அவரது தந்தை வாழ்ந்த 1980 களோடு 2020 ஒப்பிடுவது அவரது அரசியல் சாணக்கியத்தை புரியவைக்கப் போதுமானதாகும். இதுவரை நடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் இவ்வாறான ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்றே சிந்திக்கின்ற ஒரு தலைவர் என்பதை புரிந்து கொள்ள பெருத்த அரசியல் ஞானம் ஒன்றும் தேவை இல்லை.

இவ்வாறான ஒரு பின்னணியில் JVP யினர் எதிர்வரக்கூடிய காலங்களில் கண்டிப்பாக சில அரசியல் முன்னெடுப்புக்களை செய்தாகவேண்டும். இதுவரை நிகழ்ந்தேறிய ஆட்சிகளில் நாட்டிற்கு பொதுவாகவும் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாகவும் குறிப்பிடத்தக்க எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை. மாறாக, தேச துரோகங்களும் அழிவுகளுமே நடந்தேறியுள்ளன.

JVP யினர் தங்களது கொள்கை பிரகடனத்தை, நாட்டின் அரசியல் யாப்பிற்கு முரண்படாத வகையில் வெளியிடவேண்டும். கம்யூனிச சிந்தனையுடனான தங்களது நிலைப்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரபட்டு சமூக மயப்படுத்தப்பட வேண்டும். (கம்யூனிசம் தோன்றிய மண்ணிலே அது விரட்டியடிக்கப்பட்டு, தோல்வி கண்ட வரலாறு இலங்கை JVP யினருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.) பொதுஉடைமை கொள்கை தனிநபர் முன்னேற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் முரணானது என்பது மாத்திரமல்ல, மனித உரிமை மீறலும் கூட. இவைகள் அது உருவாக்கப்பட்ட சமூகத்தாலே தோற்கடிக்கப்பட்டுமுள்ளன.

மத உரிமையும், சுதந்திரமும் இலங்கை போன்ற பல்லின சமூகத்தை கொண்ட ஒரு நாட்டில் பிரதான அம்சமாகும். இன்று மதத்தை பின்பற்றும் உரிமையும் மதஸ்தாபனங்களது புனிதத் தன்மையும் கேள்விக்கு குறிக்கப்பட்டுள்ளது. இவை குறித்தும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை சொல்லியாக வேண்டும். மதங்களை பின்பற்றுவது அவரவர் பிரத்தியேக உரிமை என்பதை பல தடவைகள் JVP யினர் அடித்துக் கூறியிருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளாக இவை மீண்டும் முன்வைக்கப்படுவது அவர்களுக்கு வலுசேர்க்கும்.

யார் என்ன சொன்னாலும் இங்குள்ள மிகப்பிரதானமான வாக்கு வங்கி பெளத்தர்கள் வசமே இருக்கின்றது.  அரச உத்தியோகத்தையும், விவசாயத்தையும்  மாத்திரம் வாழ்வாதாரமாக கொண்டிருந்தவர்கள் இன்று நாட்டின் அணைத்து துறையினையும் தங்கள் கைவசம் வைத்துள்ளனர். எனவே இவர்கள் விடயத்தில் ஒரு தெளிவான அரசியல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும் அது சிங்கள சமூகத்திடம் சமூகமயமாக்கப்படவும் வேண்டும்.

சிறுபான்மை சமூகம் குறிப்பாகவும் முஸ்லீம் சமூகம் கடந்த இரண்டு தசாப்தங்களாக எந்தவிதமான உறுதியான, நிலையான அரசியல் கொள்கை ஒன்றை பின்பற்றாத சமூகமாவே இருக்கிறது. அதற்கு குறித்த காலப்பகுதியில் முஸ்லீம் சமூகம் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கிற இழப்புகளும் காரணமாக இருக்கலாம்.

சுதந்திர இலங்கைக்கு முன்னரும் அதற்கு பின்னருமான இன்றைய காலம்வரை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு விசுவாசமானவர்களாக செயல்பட்டாலும், அவர்கள் மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கப்படுவதும் ஒரு காரணமே.

எனவே இவ்வாறான மனநிலை கொண்ட முஸ்லிம்கள் எந்த ஒரு அரசியல் காட்சியிலும் நம்பிக்கையற்று ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்ற இந்த வேளையில், முஸ்லிமகளில் கணிசமானோர் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் JVP வேற்பாளரை ஆதரிக்கவும், தங்களது வாக்கினை அளிக்கவும் உத்தேசித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதுவரை கிடைக்கப்பெறாத நீதியும், சமஉரிமையும் JVP ஆட்சியிலாவது கிடைக்கப்பெறும் என்ற ஒரு நப்பாசையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. அவர்களது அண்மைய செயல்பாடுகளை பார்க்கின்ற போது அது நிறைவேறவும் கூடும் என யூகிக்க முடிகிறது..

எது எவ்வாறு இருந்தாலும் JVP யினருக்கு அளிக்கும் வாக்குகள் அர்த்தமற்றதாகப் போகும் என்ற ஒரு செய்தியையும் இதே தருணத்தில் சமூகமயப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. இது உண்மையில் JVP யினரின் அரசியல் வளர்ச்சியிலும், அண்மையில் நடைபெற்ற ஒன்று கூடலின் பின்னர் ஏற்பட்ட அச்சத்தினாலும் வளர்ந்திருக்கின்ற ஒரு மரண பயமே என்று கூற முடியும்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம் JVP யினருக்கு பெரும்பான்மை பலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாது போகும் என்பதே. பெரும்பான்மை பலம் என்பது அதிர்ஷ்டம் மூலம் பெறப்படுவதொன்றல்ல. அது எமது வாக்கு பலத்திலே தங்கியுள்ளது.

முஸ்லிம்களில் சிலர் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம் (இறைவனிடத்தில் பாதிசொல்லியாக வேண்டும்) என்ற ரீதியில் JVP யினருக்கு வாக்களிக்கும் விடயத்தில் பேசுகின்றனர். வாக்களித்தல் ஓர் அமானிதம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

எனினும் ஏன் ஜேவிபி விடயத்தில் மாத்திரம் இவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது  மாத்திரம் புரியவில்லை.  இதுவரை நடந்த, நடந்துகொண்டிருக்கிற அணைத்து ஆட்சிகளிலும் முஸ்லீம் சமூகம் இழப்புகளையே அதிகம் சந்தித்திருக்கிறது. இவர்கள் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முஸ்லிம்களின் வாக்குகளே பிரதான காரணமாகவும் இருந்திருக்கிறது.

அன்றிருந்த கால சூழ்நிலையை கருத்திற்கொண்டு அவ்வப்போது தீர்மானகள் நிறைவேற்றப்பட்டு ஆட்சி மாற்றத்திற்கு வழிசமைத்திருப்போம். எனினும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறவிடுவதா என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய இறுதித் தருணமே இது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அதே வேலை JVP யினர் முஸ்லிம்களது விடயத்திலும், முஸ்லிம்களது உடைமைகள் தாக்கியழிக்கப்பட்ட போதும், முஸ்லிம்களது அடிப்படை உரிமைகள் நீக்கப்பட வேண்டும் என்று இனவாதிகளால்  கோஷங்கள் எழுப்பப்பட்ட போதும் நடந்து கொண்ட விதம் அவர்கள் ஜனநாயகக் காவலர்களாகவும், நீதமாகவும் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது.

இன்று சாதாரண அரச ஊழியர் முதல் உயர் அதிகாரி வரை இலஞ்ச ஊழலால் நிறைந்திருக்கின்ற அரசை கடுமையாக விமர்சிப்பவர்களாக மாத்திரம் இல்லாமல், எந்தவிதமான இலஞ்ச ஊழலுக்கும் சிக்காமல் இருப்பதும் அக்கட்சி மீது நம்பிக்கை வைக்கப் போதுமானதாகும்.

இது தவிரவும் அவர்களது நேர்மையான பல செயல்பாடுகள், அரச துறைகளில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் சிறுபான்மை சமூகத்திற்கு சாதாரணத்தை பெற்றுத் தரும் என்றும் நம்பலாம்.

வேறு சிலரோ JVP க்கு வாக்களிப்பதால் வாக்குகள் சிதறுண்டு மொட்டு கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்ற நியாயமான ஒரு அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

சுதந்திர கட்சி வாக்குகளை பொறுத்தளவில் நாளடைவில் அதுவும் துண்டாடப்படக் கூடிய சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன. கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிப்பதில் JVP யின் பங்கு குறிப்பாக அனுர திசாநாயக்க முன்கொண்ட போராட்டம் மிகைதுச் சொல்லப்படவேண்டியதாயிருந்தது.

வருகின்ற தேர்தலில் தன்னுடைய நேர் எதிரியாக ராஜபக்ஷ குடும்பத்தினரே இருக்கப்போவதால், இதிலும் அனுர திசாநாயக்கவினால் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு வரலாற்றில் மறக்க முடியாத அரசியல் பாடமொன்றை கற்றுக்கொடுப்பர் என்பதில் சந்தேகமில்லை.

அத்தோடு இந்த நாட்டை ஊழல், சுரண்டல், ஏகாதிபத்தியம், குடும்ப அரசியல் ஆகியவற்றிலிருந்து காக்க கிடைக்கின்ற இறுதி சந்தர்பமாகவே எதிர்வரக் கூடிய தேர்தல் அமையப் போகிறது. எனவே இரவில் விழுந்த அதே குழியில் பகலில் விழுகின்ற நிலை ஏற்படக் கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். 

அரசியலில் யாரையும் எப்போதும் தொடர்ந்து நம்ப முடியாது என்பது யதார்த்தமாக இருந்தாலும், இதுவரை நம்பியே ஏமார்ந்து போன சமூகமாக தொடர்ந்தும் இருக்காமல் எல்லோரும் ஒருமித்து நல்ல மாற்றம் ஒன்றை கொண்டுவருவதே காலத்தின் தேவையாகும்

3 comments:

  1. Best thing you are a welcome

    ReplyDelete
  2. Dear Muslim, we need change JVP better than other politics, muslim leaser do the agreement with JVP try to bring them as president

    ReplyDelete
  3. A top grade article. We need a change desperately.

    ReplyDelete

Powered by Blogger.