Header Ads



ஒக்டோபர் 1ஆம் திகதிக்குள், அரசியல் அரங்கில் பல்வேறு விடயங்கள் இடம்பெறலாம்

ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்னும் 44 நாள்கள் உள்ள நிலையில், அரசியல் அரங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று, மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனையில் இன்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் இன்று ஜனாதிபதி வேட்பாளர்களே அதிகம் உள்ளனர் என்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்குள், ஜனாதிபதி வேட்பாளர்களைக் களமிறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கலாம் என்று தெரிவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலே காலங்கடத்தப்பட்டு வருவதாகவும் எல்லைநிர்ணய அறிக்கை முன்வைக்கப்படாத நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான இயலுமைத் தொடர்பில், வியாக்கியானமொன்றைக் கேட்டு, ஜனாதிபதியால் உயர்நீதிமன்றத்துக்கு பொருள்கோடல் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த மனு மீதான விசாரணை 23,24,26 ஆம் திகதிகளில் இடம்பெற்று விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் முதலில் நடக்குமாயின், ஜனாதிபதி பதவிக்கான காலம் எப்போது ஆரம்பிக்கிறது எப்போது முடிவடைகிறது என்பதே இங்கு அடுத்துள்ள கேள்விகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1ஆம் திகதிக்குள் அரசியல் அரங்கில் பல்வேறு விடயங்கள் இடம்பெறலாம் என்றும் நாம் எதிர்பார்க்காத ஒருவர் கூட ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.