Header Ads



சஜித்தின் அமைச்சில் 1.2 பில்லியன் ரூபா மோசடி - கேள்வியெழுப்பிய ரவி, குழுவை நியமித்த ரணில்

மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றுள்ள 1.2 பில்லியன் ரூபா மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து மின்சாரம் மற்றும் சக்திவலு அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று -27- இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு முயற்சித்துவரும் சஜித் பிரேமதாஸவின் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பின் கீழேயே மத்திய கலாசார நிதியம் காணப்பட்டது. 

இந்நிலையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களில் ஒருவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவே, மத்திய கலாசார நிதியத்திலிருந்து 1.2 பில்லியன் ரூபா நிதி காணாமல்போயிருப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதமரால் அவரது செயலளார் சமன் ஏகநாயக தலைமையில் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.