July 03, 2019

புலிகளின் அகோரப் பசிக்கு, இரையாகிய U.L. தாவூத் (அந்த நாளை எப்படி மறக்க முடியும்..?)

எங்களது தந்தையாரான மர்ஹூம், அஸ்ஸஹீத் U.L.தாவூத்(BA,SLEAS)அவர்களை கடத்திச்சென்று பாஷிச விடுதலைப்புலிகளின் அகோரப் பசிக்கு இரையாக்கிய தினமான இன்றைய இரவைப் போலவே அந்த நாளின் இரவை எப்படி மறக்க முடியும்.!

சமகாலத்தில், ஏறாவூர் அலிகாரின் அதிபராக, ஏறாவூர் கல்விக்கூடங்களின் கொத்தணியதிபராக, பள்ளிவாயல்கள்,வர்த்தக சம்மேளனத் தலைவராக, சமூகப்பணிகளின் முன்னோடியாக மட்டும் எங்களது தந்தை இருந்துவிட்டுச் செல்லவில்லையே!.

கல்விமானாகவும், முற்போக்குவாத சிந்தனைவாதியாகவும் திகழ்ந்ததுடன் இலக்கியத்துறையிலும், நாடறிந்த ஓர் எழுத்தாளராகவும், வானொலியில் நற்சிந்தனை நிகழ்ச்சியில் மக்களை நேர்வழிப்படுத்தவும், வாராந்த,மாதாந்த சஞ்சிகைகளில் ‘முற்றத்து மல்லிகை, "மறுவிலாதெழுந்த முழுமதி மாநபி" போன்ற சிறுகதை கவிதைத் தொகுதிகளை வெளியிட்டும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும் நேயர்களையும், மாணவர்களையும் தன்னகத்தே கொண்டுமிருந்த ஒரு மேதையுமல்லவா அவர்.

கூடவே கவிதைத்துறையில் ஒரு சிறந்த கவிஞராகவும் மதிக்கப்பட்ட ஓருவருமாவார் எங்களது தந்தை யூ.எல்.தாவூத்.

சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டவரான இவர்கள்,அகில இலங்கை Y.M.M.A இயக்கத்தின் ஏறாவூர் கிளையின் செயலாளராக இருந்த காலத்தில்,1960 களிலேயே இந்தியாவிலிருந்து சிறந்த பேச்சாளர்களை வரவழைத்து மூன்று தினங்கள் திருக்குர்ஆன் மாநாடு நடாத்தியதுடன் "திருக்குர்ஆன் கட்டுரைகள்"என்னும் நூலை வெளியிடுவதற்கும் உதவியாகவும் இருந்த ஓர் இறை நேசருமாவார்.

இத்தகையதொரு தார்மீகவாதியை கடத்தி, வதைப்படுத்தி, துடிதுடிக்க கொன்று எங்கோ ஒரு பத்தைக்காட்டுக்குள் புதைத்தும் விட்டனரே மத அனுஷ்டானம் என்னவென்றே தெரிந்திராத அந்த படுபாவிகள்!.

அதுவும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இப்படியொரு நிகழ்வு மனிதாபிமானமற்ற செயலென தெரிந்திராத அரக்கர்கள்தானா கிழக்கில் இனவெறியும் இரத்தவெறியும் பிடித்த கருனா மற்றும் கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்தினர். இவர்களது இன்றைய அரசியலில் இனங்களுக்கிடையே நல்லதையா காண முடியும் எங்கிறீர்கள்!

வருடத்தில் ஒரு தடவை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏற்பாடுகள் செய்து கொண்டாடி மகிழும் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள்..

அன்று ‘தான்’ புதிதாக கட்டிய வீட்டுக்கு, தனது தாய் குடியிருந்த வளவில் தான் பிறந்தகத்தின் நினைவாக கட்டிய வீட்டில் பெருநாள் தினத்திற்கு மறுநாள்புதுமனை புக ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது, 

இரவு 9.00 மணியளவில் கொலை வெறி கொண்ட புலிப்படையினர் வந்து ‘கரிகாலன் அழைத்து வரச்சொன்னதாக் கூறி கூட்டிக் கொண்டே சென்றார்களே.! #அதை #எப்படி #மறக்க #முடியும்.!

என்ன ஏதுவென சிந்திக்கும் பக்குவமில்லா பருவ வயதில் பின்தொடர்ந்து அவரது புதல்வர்களில் ஒருவனான நானும் சென்றபோது எங்கள் இருவருக்கும் அவர்கள் செய்த கொடுமைகளை காண்பதற்கு உங்களில் ஒருவரேனும் இருந்திருக்க வேண்டுமே ! என்னால் அதை எப்படி மறக்கமுடியும்!

பம்மியடியில் வைத்து எனது தந்தையை கொன்று புதைப்பதற்காய் அழைத்துச்செல்ல புலிகளின் வாகனத்துக்குள் திணிக்கப்படும் நிகழ்வின் போது நாங்கள் பட்ட ‘ஓலங்களையும் எங்களது் சாபங்களையும்’ இதை வாசிக்கும் உங்களில் எவரும் கேட்டிருக்கவும்மில்லை. எல்லாவற்றையும் சூழ்ந்து அவதானித்துக் கொண்டிருந்த இறைவனையும்,என்னையும் தவிர.

‘எனது மகனுக்காகவாவது என்னை விட்டு விடுங்களன்டா’ என எனது தந்தை என்னை அணைத்துக் கொண்டு கதறியழுததை அவரது தனயனான என்னால் எப்படி மறக்க முடியும்!

அத்துன்பகரமான நிகழ்வைப் போன்று எனது வாழ்நாளில் வேறு எந்தவொரு துன்பத்தையும் நானும் எனது தந்தையும் அடைந்திருக்கவும் மாட்டோமெனில் எப்படி அதை மறக்க முடியும்!

வெறி கொண்ட பூனைகளிடம் சிக்கிய குஞ்சு எலிகளைப் போன்று,

அக்கணம் எங்களது கூக்குரல்களும், மரண ஓலங்களும் புலிகளுக்கிடையே நாங்கள் துடிதுடித்த அக்காட்சிகளின் ஒவ்வொரு வினாடிகளும் எனது மூளையில் எங்கோ இப்பால்வெளியில் காணும் பெரிய தாரகை போன்று பதிந்தே கிடக்கின்றதெனில்,

அதை எனது வாழ் நாளில் எப்படித்தான் மறக்க முடியும்!

அத்துயரமிக்க சமயத்திலும் எனது தந்தையை அவர்கள் வாகனத்திற்குள்ளே ஏற்றுவதற்கு இடையூறு விளைவித்தனாக நானிருக்க, எனது தந்தையும் நானும் காற்று மண்டலமும் புகாதவாறு ஒருவரையொருவர் இறுக்க அணைத்துக் கொண்டு விடாப்பிடியாக கலகம் செய்து கொண்டிருக்க, ‘விரலில் இருந்து நகத்தை பிடுங்குவது போலவே’என்னை தந்தையிடமிருந்து பிரித்தெடுக்க 15 வயது சிறுவன் என்றும் என்னைப்பாராது புலிகளில் ஒருவன் அவனது ஏ கே 47னால் எனது தலையில் ஓங்கி அடித்த போது நான் தளர்வுற்று நிலத்தை நோக்கிச் சாய்ந்ததை எப்படி மறக்கமுடியும்!,

காட்டுமிராண்டிகளான புலிப் பொடியனுகள் துவக்குகளுடன் நிற்பதையும் கருத்திற்க் கொள்ளாது எனது தந்தையார் அவனை நோக்கி சிங்கம் போன்று கர்ஜனையுடன் வெறி கொண்டவராக “ டேய்... ராஷ்கல்... “ என அவனது சட்டையை பிடித்த காட்சி எனது மரணம் வரை மனதை விட்டும் நீங்காத அக்காண்விம்பத்தை எதைக் கொண்டு மறக்க முடியும்!

சாரனும் பெனியனுமாய் வீட்டிலிருந்த உங்களை சேட்டை அணியவும் சமயம் தராமல் இழுத்துக் கொண்டுபோய் உங்களது இரத்தத்தில் பசியாறிய புலிகளுக்கு உங்கள்மீது அப்படியென்னதான் தாகம்!

சமூகத்துக்காய் உங்களது குரல் ஓங்கியதைத் தவிர, கல்விமான்களை நீங்கள் உருவாக்கியதைத் தவிர, புலிகளின் அட்டூழியங்களை எதிர்த்ததைத் தவிர, நீங்கள் அவர்களுக்கு செய்த மாற்று அநீதிதான் என்ன!

கெஞ்சித்தும்,கிஞ்சித்தும் மசியாத அக்காட்டேரிகளின் இதயத்தை மன்னிக்கத்தான் முடிந்ததே தவிர எப்படி மறக்க முடியும்!

அவரது நாங்கு தனயர்களில் ஏ.எல் .படித்து முடித்திருந்த எனது தமயர்கள் இருவரையும் வைத்தியர்களாக படிக்க வைக்க பேரெண்ணம் கொண்டிருந்த எனது தந்தைக்கு ‘விதி’வேறொன்றையல்லவா எழுதி வைத்திருந்தது.

வைத்தியர்களாக இருந்து நோயாளர்களைக் காப்பாற்ற தனது மகன்களையும் உருவாக்க வேண்டுமென தந்தையார் எண்ணிக் கொண்டிருக்க, நாட்டை குடி கொண்டிருக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க உனது இரத்தத்தின் பங்களிப்பும் இருக்கட்டுமென விதி ஏற்கனவே எழுதி விட்டிருந்ததே எப்படி அதை மறக்க முடியும்!.

ஸ்டெதஸ்கோப்பை தொங்கவிடவிருந்தவர் தோலிலும் ‘டீனெஜர்’ காலத்தில் துள்ளித்திரிய வேண்டிய வயதான எனது தோலிலும் துவக்கையல்லவா தொங்க விட வேண்டுமென அவ்விதி எழுதியிருந்தது. எதைத்தான் மறக்க முடியும். !

என்றாலும், உங்களது அப்பேராவாவை உங்களது பேரன் பேத்திகள் இறை அருள்கொண்டு நிறைவேற்றுவார்கள் எமது அன்புத் தந்தையே !

“தனது இளம் மனைவியையும், நாங்கு இளம் சிரார்களையும் வதியும் வீடு தவிர சல்லிக்காசும் வைத்து விட்டு வராமல் என்னை கொல்லப் போகிறானுகளே இந்தப் படுபாவிகள்” என்ற உங்களது ஆதங்கம் எங்களது அகக் கண்களுக்கு புரியாமலா இருந்திருக்கும். ஒரு சிலகாலம் வறுமைப் பிடியில் சிக்கித் தவித்திருந்தாலும் உங்களது துனைவியார் எங்களை பட்டினி மட்டும் போடவேயில்லை. வீட்டில்தான் முருங்கை மரம் இருந்ததே! அதை எப்படி மறக்க முடியும்!

இன்று நாங்கள் சிறப்பாகவே இருக்கின்றோம். உங்களது எண்ணம் போலவே மிதமிஞ்சலை தவிர்த்தும் வருகின்றோம்! அல்லாஹ் என்றுமே போதுமானவன்.

நீ வருவாய் என கண்விழி மூடாமல் எதிர்பார்த்துக் காத்திருந்து நீங்கள் வராமல் விடவே, உள்ளம் குமுறலுக்குள்ளாகி திடீர் நோயுற்றவராக எங்களையெல்லாம் பரிதவிக்க விட்டு விட்டு உங்களைத் தேடி உங்களது துனைவியாரும் இறையடி சேர்ந்தார்களே, எப்படி அதை மறக்க முடியும்.!

வானவர்களே :. ‘பத்து வருடங்களுக்கு முன்னர் உமது இரத்தக்கறைக்கு காரணமாக இருந்தவர்களின் இரத்தத்தை படியவைப்பதற்கு உமது மரபணுவின் பங்குமிருந்தது என்ற இனிப்பான சேதியை’ எமது பிதாவிடம் இறைவனின் அனுமதி கொண்டு கூறிவிட்டுச் செல்லுங்கள்.

வாப்பா! வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்றீர்கள், ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்ய முடியாது என்றீர்கள், வேகம் மட்டும் போதாது கூடவே விவேகத்தையும் தேடி கற்றுக்கொள்ள வேண்டுமென்றீர்கள். இதில்தான் எத்துனை யதார்த்த நிலை.

!என்றும் நீங்கள் மட்டும்தான் எங்களுக்கும் எங்களது பிள்ளைகளுக்கும் ரோல் மொடல்....


‘அரசன் அன்றே கொல்வான் இறைவன் நின்றே கொல்வான்’ . இதில்தான் எவ்வளவு புரிதல்கள்.

" யா அல்லாஹ்,உள்ளங்களை புரட்டக்கூடியவனான உன்னிடம்" நேர்மையான உள்ளத்துடன் மரணிக்கச்செய்யும் பாக்கியத்தை தருவாயாக.., ஆம்மின்.

எங்களது சமூகத்தை சூழ்ச்சிகளால் வலை விரிக்கும்"அவர்களை"சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரனான , உன்னிடம் விரயமாக கேட்கின்றோம்..அவர்களது சூழ்ச்சிகளை அவர்களை நோக்கியே திருப்பியும் விடுவாயாக.

ஆம்மின்...... ...ஆம்மின்...............யாரப்பல் ஆலமீன்.!

- Nawas Dawood -

4 கருத்துரைகள்:

மறக்க முடியாதவைகள் தான் தமது சந்ததிகள் வாழ்வதற்கு மறக்க வேண்டியிருக்கிறது சகோதரரே.

அதனால்தான் பாசிச புலித் தலைவன் பிரபாகரனை ரானுவம் நாயை சுடுவது போல் சுட்டு கொன்ரார்கல்.அவன் குடும்பம் சின்னாபின்னாகி சீர்ழிந்து முகவரி தெரியாமால் அழிந்து போனது.

I am truly ashamed to be a Tamil. This has happened to many Tamils as well.

Post a Comment