Header Ads



மகனை பார்க்கச்சென்ற தந்தை சுட்டு வீழ்தப்பட்டமை பற்றிய மேலதிக தகவல் வெளியாகியது

பாடசாலைக்குள் சுகவீனமுற்றுள்ள தனது பிள்ளையைப் பார்க்கச்சென்ற தந்தையொருவர், அப்பாடசாலையின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று, காலி மாவட்டத்தின் அக்மீமன உபநந்த வித்தியாலயத்தில், நேற்று (04) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இராணுவ வீரரின் துப்பாக்கிச் சூட்டின்போது, குறித்த தந்தையின் அடிவயிற்றுப் பகுதியில் சூடு பட்டதில், அந்தத் துப்பாக்கி ரவை, இடுப்பு வழியே வெளியேறியுள்ள நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று, பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டால் அவரது இரத்த நாளங்கள் பாரியளவில் காயமடைந்து, இரத்தப் போக்கு அதிகளவில் இடம்பெற்ற நிலையிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதென, பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி ஜானகி வருஷா ஹென்னதி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ வீரர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று நண்பகல் 12.45 மணியளவில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர், கடற்படையின் பாண்ட் வாத்தியக் குழுவின் முன்னாள் உறுப்பினர் என்று, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போதே, அந்தத் தந்தை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

குறித்த கனிஷ்ட வித்தியாலயத்தில், இராணுவ வீரர்கள் இருவர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாடசாலையின் ஒரு வாயிற் கதவினூடாக, பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட மேற்படி தந்தையைச் சோதனையிட, அந்த வாயிற் கதவில் நின்றிருந்த இராணுவ வீரர் முற்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த இராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறிக்க அந்தத் தந்தை முற்பட்டதாகவும் இதன்போது ஏற்பட்ட இழுபறியிலேயே, துப்பாக்கி வெடித்ததில் அவர் காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தனது பிள்ளை சுகவீனமுற்றிருந்ததாக, பாடசாலையிலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து, பதற்றத்துடன் பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட போதே, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த 39 வயதான மேற்படி தந்தை, காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரான இராணுவ வீரரைக் கைதுசெய்துள்ள அக்மீமன பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. துப்பாக்கி யைப் பறிக்க அந்த தந்தை முற்பட்டார் என்பது நிச்சியமாக படுபொய்,கட்டுக்கதை என்பது பிறகு தெரியவரும். அவசரகாலசட்டம் அமல் இருப்பது பொதுமக்களுக்கு வெடிவைக்க நல்ல சந்தர்ப்பம், அதைமூடிவிட ஒரு சதி.அவ்வளவுதான்.அவசர காலச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு இது பயன்பட்டால் அதுவே பெரியவிஷயம்.

    ReplyDelete

Powered by Blogger.