Header Ads



கல்முனைப் பிரச்சினை தீர்ந்தபின் இராஜாங்க அமைச்சுகளை பொறுப்பேற்போம், எங்களது வேண்டுகோளில் ஹக்கீம் அமைச்சை பொறுப்பேற்றார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை பொறுப்பேற்றார். நாங்கள் யாரும் கட்சியிலிருந்து பிரிந்துசெல்லவில்லை. சமூகத்தின் பிரச்சினைகளை சாதுரியமாக கையளாக்கூடிய ஒருவர் அமைச்சரவையில் இருக்கவேண்டியது காலத்தின் தேவையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார். 

ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கல்முனை விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று (29) அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றது. சுமார் மூன்று மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஓர் இணக்கப்பாட்டுடன் கூடிய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சம்மதமும் பெறப்பட்டது. 

கடைசியாக, கல்முனை நிர்வாக அலகு பிரச்சினையை தீர்ப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள், தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு கூறினோம். அந்த பின்னணியில்தான் அவர் அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் சாதுரியமாக கையளாக்கூடிய அமைச்சர் என்றால் ரவூப் ஹக்கீம் மாத்திரம்தான் இருக்கிறார். அவர் அமைச்சரவையில் இல்லாத சந்தர்ப்பத்தில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதை கண்டுகொண்டோம். இந்த சூழ்நிலையில் ரவூப் ஹக்கீமை அமைச்சரவைக்கு அனுப்பவேண்டியது எங்களது கடைமை. 

மாகாண சபை தேர்தல் சம்பந்தமான பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. அத்துடன் முஸ்லிம் விவாக, விவகாரத்து சட்டமூலமும் அமைச்சரவைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கல்முனை விவகாரம் தொடர்பிலும் பேசுவதற்கு ரவூப் ஹக்கீம் கட்டாயம் அமைச்சரவையில் இருக்கவேண்டிய தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. 

ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் இல்லாதபோது, சில அமைச்சர்கள் எங்களுக்கு சாதகமில்லாத வகையில் பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு எந்த அமைச்சரும் அங்கு இருக்கவில்லை. இதனால்தான் அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு நாங்கள் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தோம். 

கல்முனைப் பிரச்சினை தீர்ந்த பின்னர் நாங்கள் இராஜாங்க அமைச்சுகளை பொறுப்பேற்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். கல்முனை விவகாரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய பின்னர், சாய்ந்தமருதுக்கு தனியொரு சபையும் கல்முனை மூன்று சபைகளாகவும் பிரிக்கப்படும். அத்துடன் கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இதன்மூலம், கல்முனை பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகம் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிட்டவுள்ளது. இதன்மூலம் இரு சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.