Header Ads



கல்முனை வைத்தியசாலையை வீடியோ, எடுத்த காத்தான்குடி நபர் கைது

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பு சுற்றுசூழலை காணொளியாக தொலைபேசியில் பதிந்து  சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று  (01) வைத்தியசாலையின் முகப்பிற்கு முன்னால் நபர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக வைத்தியசாலையை காணொளியாக (வீடியோ) பதிந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து அந்த நபரை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் அணுகி ஏன் வைத்தியசாலையை  காணொளி எடுக்கின்றீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்நபர் சந்தேகத்திற்கிடமாக பதிலளித்தமையினால் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்து சென்றனர்

உடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணொளி எடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் தான் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர் என முதலில் கூறியுள்ள போதிலும் தற்போது பொலிஸாரின் விசாரணையில் இருந்து அது பொய் என தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட  நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய எல்லையில் வசிக்கும் 40 வயதுடைய முஹம்மட் இஸ்மாயில் முகம்மட் ராபீதீன் என்பவராவார். அவர் ஏற்கனவே குறித்த வைத்தியசாலையில் கட்டட ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கட்டடம் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சி இருந்த பொருட்களை நிறுவன முகாமையாளருக்கு அடையாளம் காட்டுவதற்காக காணொளியை பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்ததாவது

எமது வைத்தியசாலையின் கட்டங்கள் சுற்றுசூழலை காத்தான்குடியிலிருந்து வந்திருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தது உண்மை. அவரை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது பொலிஸார் வாக்குமூலம் எடுத்துள்ளனர். 

இந்த நபர் எந்த நோக்கத்திற்காக காணொளி எடுத்தார் என்பது தெரியவில்லை. விசாரணை தற்போது தொடர்கின்றது. அந்த நபர் ஏற்கனவே தெரிவித்துள்ள படி கட்டட ஒப்பந்த காரராக எமது வைத்தியசாலையில் செயற்பட்டதை மறுக்கின்றேன்  என தெரிவித்தார்.

மேலும் குறித்த வைத்தியசாலையின்  பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக  கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.