Header Ads



புலிகளும் போதைப்பொருள் கடத்தினர், மேலதிக தகவல் வழங்கப்பட்டிருந்தால், தாக்குதல்களை தடுத்திருக்க முடியும் - லத்தீப்

விடுதலைப் புலிகள் கூட போதைபொருள் கடத்தல்களைச் செய்துள்ளனர் என விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திலகா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாட்டில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற தெரிவு குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் ஏப்ரல் 10ஆம் திகதியே கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்திருந்தோம்.

அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் ஏப்ரல் 9ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாமென அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அனுப்பியிருந்த கடிதத்துக்கு அமைய ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிலுள்ள விசேட அதிரடிப்படையின் பிரிவு, பிரதமர் பாதுகாப்பு பிரிவிலுள்ள விசேட அதிரடிப்படைப் பிரிவு, பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவிலுள்ள விசேட அதிரடிப்படைப் பிரிவுகளிடம் பாதுகாப்பை உஷார் படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் மற்றும் அவர்கள் பற்றிய அமைப்புக்கள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் ஏற்கனவே தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தபோதும் அவை எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை.

குண்டுத் தாக்குதல்கள் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தன. வாராந்தம் நடைபெறும் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்படுவதில்லை.

தம்மையும் அழைக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஏப்ரல் 20ஆம் திகதி அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் என்னைத் தொடர்பு கொண்டிருந்தார்.

ஏப்ரல் 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் பரீட்சார்த்தமாக வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கேட்பதற்காக அவர் என்னைஅழைத்திருந்தார். நான் அப்போது வெளிநாட்டில் இருந்தேன்.

நாடு திரும்பியதும் அழைப்பை ஏற்படுத்துவதாகக் கூறினேன். 19ஆம் திகதி நான் நாடு திரும்பினேன். நாடு திரும்பியதும் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு அழைப்பை ஏற்படுத்தி நாடு திரும்பிய விடயத்தை அறிவித்தேன்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலுள்ள விசேட அதிடிப்படையின் அலுவலகத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று, எனக்குக் கிடைத்த தகவல்களை அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தினேன்” என்றார்.

பயங்கரவாதம், போதைப்பொருட் கடத்தல், ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.

விடுதலைப் புலிகள் கூட போதைபொருள் கடத்தல்களைச் செய்துள்ளனர். திலகா என்ற விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாட்டில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

2 comments:

  1. பிராபாகரன் ஒரு drugs king போதை பொருள் கடத்தல் மன்னன்

    ReplyDelete
  2. இந்த கதாபாத்திரத்துக்கு வசனகர்த்தா யாரு. போலீஸ் வேலைய பாருங்க மாமா. கண்டவன் எல்லாம் அரசியலுக்குள் வந்தால் எல்லாமே சிக்கல் தான். அதுநீங்காக இருந்தாலும் சரி அல்லது பௌத்த தேரர்களாக இருந்தாலும் சரி.

    ReplyDelete

Powered by Blogger.