Header Ads



கிரிக்கெட் ‘அம்பயர்’ ஆக என்ன தகுதிகள் தேவை...?


இளைஞர்கள் பெரும்பாலானவர்களின் சுவாசமாக இருக்கிறது கிரிக்கெட்.

டெண்டுல்கர், டோனி, கோலி என்று உத்வேகம் தரும் ஒரு வீரரை மனதில் முன்னோடியாக ஏற்றுக்கொண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும் இளைஞர்கள், கிரிக்கெட் துறையில் சாதிக்க நீண்ட காத்திருப்பில் இருந்து காலத்தை விரையம் செய்வது உண்டு. கிரிக்கெட் துறையில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளராகத்தான் சோபிக்க வேண்டுமென்பதில்லை. அம்பயர் (நடுவர்), பயிற்சியாளர், புள்ளி கணக்காளர், வர்ணனையாளர், ஆடுகள பாதுகாப்பாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், நிர்வாக அதிகாரிகள் என ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் அம்பயர் பணிக்கு மதிப்பும், தேவையும் அதிகமாக இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராக இருக்க என்ன படிக்க வேண்டும்? என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதோ உங்களுக்காக...

எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் நடுவர்கள் அவசியம். ஏராளமான போட்டிகளின் நடுவர்கள் ரெப்ரி என அழைக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டி நடுவர்கள் அம்பயர் என அழைக்கப்படுகிறார்கள்.

அம்பயரின் பணி எளிதானதல்ல. தவறான முடிவுகளை அறிவித்தால் கடும் விமர்சனங்களையும், விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு இலலாமல் அம்பயரிங் செய்ய முடியாது. தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராக வேண்டுமானால் குறைந்தபட்சம் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடிய வீரர்களால்தான் அந்த பணிக்கு செல்ல முடியும்.
நீங்கள் கிரிக்கெட் அம்பயராக விரும்பினால் முதலில் இங்கே குறிப்பிடும் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டின் 42 விதிமுறைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எத்தனை முறைகளில் வீரர்களை விக்கெட் இழப்பு செய்ய முடியும், எது விதிமுறை, எது விதிமுறை மீறல் என்பதையெல்லாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

நடுவர் பணி செய்ய பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக அவசியமாகும். அத்துடன் விளையாட்டு ரசிப்புத்தன்மையும் வேண்டும்.

உற்று நோக்கும் திறனும், துரித முடிவெடுக்கும் திறனும் அவசியம்.

அடிப்படைப் பண்புகளான இவற்றைப் பெற்றிருப்பவர்கள்தான், நடுவருக்கான அடுத்தகட்ட தகுதிக்கு ஆயத்தமாக முடியும். அம்பயராக விரும்புபவர்கள் கிரிக்கெட் விளையாடுவதுடன், மாநில கிரிக்கெட் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது நடுவருக்கான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். தேர்வுகள், ‘தியரி’யாக எழுதி விவரிக்கும் வகையிலும், செய்முறை கொண்டதாகவும் இருக்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மும்பையில் கிரிக்கெட் அம்பயரிங் முதுநிலை எம்.சி.ஏ. படிப்பில் சேரலாம்.

அதேபோல இந்திய கிரிக்கெட் கவுன்சில் (BCCI) அமைப்பும், அம்பயருக்கான தேர்வை நடத்துகிறது. இரு நிலைகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இரண்டிலும் தேர்ச்சி பெறுபவர்களின் பெயர் ‘அம்பயர் பேனல்’ அமைப்பில் இடம் பெறும். இவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் நடுவராக பணியாற்ற தகுதி படைத்தவர்கள் ஆவர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அம்பயர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளுக்கும் நடுவராக பணி செய்ய முடியும். 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு சர்வதேச நடுவர்களுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி களுக்கு ஒரு ஆட்டம் ஒன்றிற்கு நடுவருக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. சர்வதேச போட்டியில் நடுவராக இருப்பவருக்கு ஒரு போட்டிக்கு 800 டாலர்கள் (சுமார் 55 ஆயிரம் ரூபாய்) சம்பளம் வழங்கப்படுகிறது.

மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்புகள், தனியார் கிரிக்கெட் அகாடமிகளிலும் நடுவர் பணிக்கு கவுரவமான சம்பளம் மற்றும் மதிப்பு வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான உள்ளூர் போட்டிகளில்கூட பதிவு பெற்ற நடுவர்கள் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

கிரிக்கெட் துறையை தேர்வு செய்யும் இளைஞர்கள் நடுவராகவும் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள முடியும்!

No comments

Powered by Blogger.