Header Ads



மைத்திரி குழுவினர் நடுவீதியில் கைவிடப்பட்டுள்ளனர் - சுதந்திரக் கட்சியையும் அழித்துவிட்டனர்

தேசிய அரசை உடைத்துக்கொண்டு வெளியேறி ராஜபக்ச அணியுடன் கைகோர்த்த மைத்திரி குழுவினர் இன்று நடுவீதியில் கைவிடப்பட்டுள்ளனர்.” என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“மீண்டும் ஜனாதிபதிக் கதிரைக்கு ஆசைப்பட்டே ‘2018 ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றியிருந்தார். ஆனால், அந்த அரசியல் சூழ்ச்சியை 52 நாட்களில் நாம் முறியடித்தோம்.

மைத்திரியையும் அவரின் சகாக்களையும் நடுவீதியில் அந்தரிக்க விட்டுவிட்டு ராஜபக்ச அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் அனைத்துத் தேர்தல்களிலும் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர்.

இது மைத்திரி குழுவினருக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசை வீழ்த்தி ராஜபக்ச அரசைக் கொண்டுவர முயன்ற மைத்திரி குழுவினர், தாம் இன்று நடுவீதியில் நிற்பதையிட்டு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பண்டாரநாயக்க குடும்பத்தினரால் கட்டிப் பாதுகாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இந்த மைத்திரி குழுவினர் அழித்துவிட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணி மாபெரும் வெற்றிகளைப் பெறுவதுடன், மைத்திரி குழுவுக்கும், ராஜபக்ச அணிக்கும் தக்க பாடத்தையும் புகட்டும்” – என்றார்.

No comments

Powered by Blogger.