Header Ads



பாலியல் லஞ்சம் கேட்கும் கடன், நிறுவனங்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள்

நுண்கடன் பற்றிய தெளிவு மக்களிடம் இல்லாத நிலையில் அந்த நிறுவனத்தினர் சிலர் கையெழுத்துக்களை வாங்கிப் பணத்தைக் கொடுக்கின்றனர். பின்னர் அந்தப் பணத்தை அடாத்தான முறையில் மீளப் பெறுகின்றனர் என கரவெட்டிப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாலியல் லஞ்சம் கோரும் செற்பாடுகளும் நடைபெறுகின்றதாகவும், எனவே, நுண்நிதிக்கடன் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் பொதுவான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கரவெட்டிப் பிரதேசத்தில் நுண்நிதி நிறுவனங்களால 16 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுள்ளன. இரண்டு குடும்பங்களில் தாய், தந்தை தலைமறைவாகியதால் அவர்களுடைய பிள்ளைகள் பாட்டி, அல்லது உறவினர்களுடன் வாழ்கின்றனர்.

உயிர் மாய்ப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த விடயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பொதுவான தீர்மானம் ஒன்று எடுத்தால்தான் சிறந்தது.

அண்மையில் நுண்நிதி நிறுவனங்களை அழைத்து கலந்துரையாடினோம். இந்த நிதி வழங்கல், கடன்வழங்கல் தொடர்பாக எந்தவொரு தெளிவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே, கிராம அலுவலகரின் அனுமதியின்றி எந்தக் கடன்களையும் வழங்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். தவறான கருத்துக்களை முன்வைத்து, பொய்யான காரணங்களைக் கூறித்தான் கடன்களை எடுக்கின்றார்கள்.

இந்த விடயங்கள் சீர்செய்யப்படவில்லை என்றால் நிச்சயமாக இந்த கடன்களைப் பெறும் குடும்பங்களுக்கிடையில் பாதிப்புக்கள் ஏற்படும். இப்போது 16 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுள்ளன.

அவர்கள் அனைவரும் 32 வயதுக்குட்பட்டவர்கள். இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் இந்த நுண்நிதிதான். நுண்நிதியை வழங்குவதில் தவறில்லை.

ஆனால், அதற்குச் சரியான விளக்கம், அல்லது ஆவணம், தெளிவுகள் வழங்கப்பட வேண்டும். கையெழுத்துக்களை வாங்கிவிட்டு காசை கொடுத்துவிட்டு போகின்றார்கள்.

சிலர் அடாத்தான முறையில் கடனைப் பெறுவதும், கடனுக்குப் பதிலாக பாலியல் இலஞ்சங்களைக் கோருவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது தொடர்பாகத் தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டும் என்றார்.

இதனையடுத்து அங்கு கருத்துத் தெரிவித்த யாழ். மாநகர முதல்வர் இ.ஆனோல்ட்,

வங்கிகளில் கடன் பெறச் சென்றால் இன்னுமோர் வங்கியில் கடன் பெற்றிருப்பின் இரண்டாவது கடனுக்கு அனுமதி மறுக்கப்படும். இதனால் அதிக நெருக்கடியில் இருந்து பயனாளி தப்பிக்கின்றார்.

ஆனால், நுண்நிதி நிறுவனங்களோ ஒருவர் ஏற்கனவே இரு இடத்தில் கடன் பெற்று 3ஆவது தடவை கடன் கோரினாலும் வழங்குகின்றனர். அதை எவ்வாறு மீளச் செலுத்துவார் என்பது தொடர்பில் ஆராய்வது கிடையாது.

இந்த நிறுவனங்கள் தமது பணத்தை எப்படியும் அறவிடுவோம், அதனால் எமக்குரிய இலாபம் கிடைக்கும் என்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.

இதனால் ஒரு பயனாளி ஓர் நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில் வேறு நிறுவனத்திலும் பெறுவாராயின், அதை அந்த நிறுவனம் கோர முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. Micro Financial Aid எனப்படும் நுண்நிதிக் கடன் உதவி நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன வளர்ச்சிக்காக வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதியினைப் பெற்று அதனைத் தகுதியுள்ள பயனாளிகளுக்கு “மீளச் செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனையில் வழங்குகின்றன. ஆயினும் இதில் பெற்ற கடனை (என்று வைத்துக் கொள்ளுங்களேன்) மீளச் செலுத்துவது என்பது மிக முக்கியமான நிபந்தனை அல்ல. அதற்குப் பதிலாக பயனாளிகள் தாம் பெற்ற உதவிப் பணத்தை எவ்வாறு எங்கு முதலீடு செய்கின்றனர்? அவர்களது திட்டம் என்ன? இவர்கள் உண்மையிலேயே ஏதாவது தொழில் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர்களா? இதன்மூலம் கிடைக்கக்கூடிய தொடர் வருமானத்தை தமது பிற்பட்ட வாழ்க்கையினை “ஏதோ” சிறப்பாக கொண்டு செல்வதற்கு பயன்படுத்தி வெற்றி அடைவார்களா? என்பதுதான் அவர்களது பிரதான நோக்கம். வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் நிதி அந்நாட்டிற்குத் திரும்பிச் செலுத்தப்படுவதில்லை. அதற்கு எந்த நிதி ஏற்பாடுகளும் இலங்கையில் இல்லை. இதனால் கிடைக்கக்கூடிய சகல வருமதிகளும் உள்ளுர் நிறுவனத்தையே இறுதியாகச் சென்றடையும். அவர்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அந்நிதி தொடர்ந்து உதவலவாம். பயனர்கள் பெற்ற கடனால் பயன் பெற்றால் அதனைத் திருப்பி செலுத்த வேண்டியது கடமை. நீதியான முறையில் அதனால் பயனாளிக்கு முழுவதுமாக நட்டம் ஏற்பட்டால் அதற்கு மன்னிப்பு உண்டு. பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் இதில் தலையிடமாட்டாது. வுhங்கிய கடனை செலுத்தும் விடயத்தில் யாருக்கும் எந்தவிதமான இலஞ்ஞமும் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. யாராவது பாலியல் இலஞ்ஞம் கேட்டால் பொலிஸில் முறையிடுங்கள். கேட்டவரகளின் முதுகு முள்ளைப் பெயர்த்து வீதிக்கு அனுப்பி வைப்பர்.

    ReplyDelete
  2. வட்டி அடிப்படையிலான கடன் திட்டங்கள் அணைத்து சமூகங்களையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது .

    ReplyDelete

Powered by Blogger.