Header Ads



உலமா சபை - முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று சந்திப்பு - இறுதி முடிவு எட்டப்படுமா..?

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை  இன்று -29- நடைபெறுகிறது. 

சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களுக்கான வரைபை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும். திருத்தங்கள் தொடர்பில் உலமா சபையுடன் கடந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். 

"சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று உலமா சபையினரைச் சந்தித்து இறுதி நிலைப்பாட்டுக்கு வரவுள்ளனர்" என்றார்.

நாம் எதிர்பார்த்துள்ள சகல திருத்தங்களையும் மேற்கொள்ள அர்ப்பணிப்புடன் இருப்பதுடன், இந்தச் சந்திப்பு பொதுவான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் கூறினார்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவது தொடர்பில் நீண்டகாலமாக சர்ச்சை நீடித்து வருவதோடு இது தொடர்பில் நீதி அமைச்சிற்கு இரண்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. பாயிஸ் முஸ்தபா மற்றும் நீதியரசர் சலீம் மர்சூப் ஆகியோர் தலைமையிலான குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் உடன்பாடொன்றை எட்டுவதற்காக உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, அமைச்சர் ஹலீம்,முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பைசர் முஸ்தபா அடங்கலான குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுத்து நீதி அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

திருமண வயது, மணப்பெண்ணின் சம்மதம், பெண் காதி நீதவான் உட்பட பல விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருந்தது

இதே வேளை, ஜூலை 11ஆம் திகதி இணக்கம் காணப்பட்ட பரிந்துரைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கக் கூடாது என பெண்கள் குழுக்களின் கூட்டணி கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி வலியுறுத்தியிருந்தது. பரிந்துரைகளின் அடிப்படையில் உண்மையான மற்றும் நீடித்திருக்கக் கூடிய மறுசீரமைப்புக்களைச் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அக்கூட்டணி கோரியிருந்தது.

சட்டங்கள் மனிதனால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் தேவைக்கு ஏற்ற வகையில் திருத்தங்களைக் கொண்டுவருவது கட்டாயமானது என முஸ்லிம் தனிப்பட்ட சட்ட மறுசீரமைப்பு குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

1 comment:

Powered by Blogger.