Header Ads



குண்டுதாரியான சஹ்ரானின் மகளை, பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்க கோரிக்கை


கடந்த ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில், பிரதான குண்டுதாரியான சஹ்ரானின் மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் என்பவர் 20 இலட்சம் ரூபாவை அனுப்பியதாகக் கூறப்படும் பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கணக்குத் தொடர்பான அறிக்கையை அனுப்புமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கை சம்பந்தமான அறிக்கையை இரகசியப் பொலிஸாருக்கு அனுப்புமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் ரங்க திசாநாயக்க குறிப்பிட்ட வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.

குண்டுதாரி இந்தப் பணத்தை எம்.முபாஹில் என்பவரின் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த மாதம் 21ம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மஜிஸ்திரேட் நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சஹ்ரானின் நான்கு வயது மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தைக் கேட்டுள்ளது.  தற்போது இந்த சிறுமி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்.

மேலும், இது தொடர்பில் சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைகள் சட்டத்திற்கு அமைய எதிர்காலத்தில் பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.  சஹ்ரானின் மனைவி உட்பட அந்த சிறுமியுடன் உள்ள மேலும் பலர் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

1 comment:

  1. குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளும் நல்ல இதயமுள்ளவர்கள்தானே!

    ReplyDelete

Powered by Blogger.