Header Ads



அன்புள்ள தாயர்மார்களே, உங்கள் பிள்ளை - கணவன்மார் என்ன செய்கின்றார்கள் என பாருங்கள்

இந்த நாட்டிலுள்ள போதை வியாபாரிகளுக்கு அவசரமாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடத்தில் கேட்டுக் கொள்கின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலய மண்டபத்தில்  இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை ஒழிக்கப்பட வேண்டும் என்று அதிக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். இந்த நாட்டின் ஜனாதிபதி போதை வியாபாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நாட்டின் குடிமகனாவும், பாராளுமன்ற பிரதிநிதியாகவும் நூறு வீதம் வரவேற்கின்றேன். அவசரமாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு போதை வியாபாரிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எக்காரணம் கொண்டும் மாற்றி விடாது போதை வியாபாரிகளுக்கு உச்ச தண்டனையான தூக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மண்டாட்டமாக வேண்டிக் கொள்கின்றேன்.

சிறைச்சாலைகளில் 24000 பேருக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் 15000 பேருக்கு மேற்பட்ட கைதிகள் போதையேடு தொடர்புபட்டவர்களாக உள்ளனர். அதிலும் பெண்களும் இருக்கின்றார்கள். இவர்கள் போதையோடு தொடர்புபட்ட கைதிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் வாஸ்தவமான நிலைமை.

இந்த நாட்டில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் போதைக்கு அடிமையான சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றது. இவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு இறுக்கமான சட்டத்தினை கொண்டு வருவதன் மூலம் தான் இந்த குறைபாடுகளை நீக்க முடியுமே தவிர வேறு ஏதும் செய்ய முடியாது.

எனவே மரண தண்டனை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும். எமது பிரதேசத்தவர்களும் இருந்தாலும் இதில் பரவாயில்லை. மனித தர்மத்திற்கு அப்பால் நின்று இஸ்லாமிய சட்ட அடிப்படையில் பார்க்க போனாலும் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட இந்த சட்டம் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி இடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

மரண தண்டனை சட்டத்தினை நிறைவேற்றினால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது என்று பயந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

கடந்த காலங்களில் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டை இவ்வாறு தான் பயமுறுத்தினார்கள். எரிபொருள், கடன் உட்பட உதவிகள் தரமாட்டோம் என்றார்கள்.

தற்போது மரண தண்டனையை நிறைவேற்றும் பொழுது உதவிகள் வழங்க மாட்டோம் என்று காட்டுகின்ற நிகழ்ச்சி நிரலுக்கு நாட்டின் தலைவர்கள் அடங்கி விடக் கூடாது என்று வினயமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 90 பேருக்கு மேல் உள்ளனர். ஆனால் இந்த நாட்டில் சாதாரண சட்டத்தின் கீழ் 2489 பேர் கைது செய்யப்பட்டார்கள். சஹ்ரான் செய்த மாபெரும் சாதனை. சொர்க்கத்துக்கு போன வீரர் எங்களுக்கு செய்து தந்த சாதனை தான் இந்த கைது.

நாங்கள் எடுத்துக் கொண்ட அபரிமிதமான முயற்சியால் இதுவரை 227 வரை கொண்டுவரக் கூடியதாக இருந்திருக்கும். இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

உடை சம்பந்தமான ஒரு உறுதியான நிலைப்பாட்டை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது தற்போது கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் என்ன தீர்மானங்களை எந்த நேரத்தில் எடுக்க வேண்டுமோ அந்த தீர்மானங்களை எடுத்துச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். கடந்த காலங்களில் நமது பகுதியில் போதை நம்மை ஆட்டிக் கொண்டிருக்கின்றது.

எமது பகுதியில் போதை மாத்திரை, கஞ்சாவுக்கு பெயர் போன பிரதேசமாக மட்டக்களப்பு அதிகம் பேசப்படுகின்ற பிரதேசமாக முஸ்லிம் பிரதேசம் காணப்படுகின்ற சூழலில் நாங்கள் உள்ளோம்.

எமது தாயர்மார்கள் உங்கள் பிள்ளைகள், கணவன்மார் என்ன செய்கின்றார்கள் என்ற தெளிவான பார்வை உங்களிடத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனதால் தான் சஹ்ரான் அல்லது இப்றாஹிம் ஹாஜியாரின் பிள்ளைகளைப் போன்ற கோடிஸ்வரர்கள் தங்களது உயிர்களை எவ்வாறு மாய்த்துக் கொண்டார்கள் என்பதை தாங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விடயங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.எல்.அல்அமீன், பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவான 955 பேருக்கு உரித்துப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மதிப்புக்குரிய நண்பர் அமீர் அலிக்கு நன்றி. நானும் இதனை பலவருடங்களாக சொல்லிவருகிறேன், உங்கள் பிள்ளைகளை கண்காணியுங்கள் தவறு கண்டால் நல்வழிப்படுத்துங்கள். ஒன்றுமில்லயென்று சொல்லிவிட்டு நாளை தங்கள் பிள்ளைகளே காட்டிக்கொடுக்கும் சமூகமாக மாறிவிடாதீர்கள் என 2013 ல் விடுதலையானதில் இருந்தே சொல்லி வருகிறேன். உங்களைப்போல விமர்சனம் சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்டு களத்தில் இறங்குகிறவர்கள்தான் இன்றைய தேவை.

    ReplyDelete

Powered by Blogger.