July 22, 2019

விக்னேஸ்வரனே,, முஸ்லிம்கள் மீது வீண்பழி, சுமத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணத்தில் அரசியல் காய் நகர்த்தல் செய்து காலூன்றுவதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தினைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக ஏறாவூர் நகரசபை முதல்வர் ஐ.அப்துல் வாஸித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏறாவூர் நகரசபை முதல்வர் இன்று -22- வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 வருடகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் சிக்குண்ட முஸ்லிம் சமூகம் 6000இற்கு மேற்பட்ட அப்பாவி உயிர்களை இழந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளையும், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் இழந்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் இருப்பிடங்களைக் கைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் இற்றைவரை முழுமையாக தமது சொந்த இடங்களில் மீளகுடியமர்ந்து வாழ்வாதாரத்தையும், மீளக் கட்டியெழுப்ப முடியாத நிலையில் இருப்பதை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் மறந்தநிலையில் பேசியிருப்பது வேதனையளிக்கிறது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஏறாவூர்ப் பற்று மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாழ்வாதார தொழிற்செய்கைக்கான நிலங்கள் மற்றும் குடியிருப்புக்களுக்குக் கூட இன்றும் செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அறிந்து கொள்ள வேண்டும்.

இதேபோன்ற நிலை திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காணப்படுவதை சுட்டிக்ககாட்ட விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

அத்தோடு 9000 தமிழ் பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரதன தேரர் கூறிய பொய்யான கூற்றை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் உண்மைப்படுத்தும் வகையில் வலியுறுத்தியிருக்கிறார்.

இது சகோதர தழிழ், முஸ்லிம் சமூகங்களைச் சீண்டிவிடும் செயலாகவே பார்க்கின்றோம். முடியுமென்றால் அவ்வாறான கிராமங்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு சவால் விடுகின்றேன்.

வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வங்குரோத்து நிலையை சீர்செய்யும் நினைப்பில் கிழக்கு மாகாணத்தில் சகோதர சமூகங்களை மோதவிடும் செயலை முன்னெடுக்க வேண்டாம் என விக்னேஸ்வரனிடம் தயவாய் கேட்டுக் கொள்கின்றோம். இந்த நாட்டிலே தனியான கலாசார விழுமியம் மற்றும் பண்பாட்டுடனும் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது.

இலங்கை நாட்டில் தென் பகுதியிலே வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்கள மொழியைப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்களவர்கள் என்றோ வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள் என்பதற்காக தமிழர்கள் என்றோ அடையாளப்படுத்த முற்படக் கூடாது.

இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல.

குறிப்பாக தமிழர் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் பிழையாக வழி நடத்தப்படக் கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களை ஜனநாயக வழிக்குள் சங்கமிக்கச் செய்யும் அடிப்படை நோக்கத்துடன் மாமனிதர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபகம் செய்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பெயர்களை தாங்கிய ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை முழு முஸ்லிம் சமூகமும் கண்டிக்கிறது.

இந்த நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் முன்னாள் முதலமைச்சர் கோர்த்துவிட முனைவது அவரது அரசியல் தந்திரோபாயமாகவே கருதுகின்றோம்.

முன்னாள் முதலமைச்சரே! உங்களுக்கு கிழக்கிலும் அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றி அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வழிவகைகளைத் தேடுங்கள்.

அவ்வாறின்றி சகோதர சமூகங்களை மூட்டி விடுவதையோ, முஸ்லிம் சமூகத்தின் மீதுசேறு பூசுவதையோ இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

வட மாகாணத்திலிருந்து இனச் சுத்திகரிப்புச் செய்யும் நோக்குடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு உங்களது அதிகார காலத்திலேயே நடவடிக்கை மேற்கொள்ள வக்கற்ற நிலையில் நிர்வாகம் செய்த நீங்கள், இப்போது கிழக்குத் தமிழர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிந்தனைகளை விதைக்க முனைவது உங்களது வயதுக் கோளாறின் சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகின்றோம்.

எமது நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களும் தனித்தனியான நிர்வாக அலகுகளாக சுதந்திரமாக இயங்கிவரும் நிலையில் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைத்து முஸ்லிம் சமூகத்தை சிறுபான்மையாக, இரண்டாந்தர பிரஜைகளாக மாற்றிக் கொள்வதை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது.

தமிழ் அரசியல்வாதிகளின் கடந்தக் கால மற்றும் அண்மைக்கால நடவடிக்கைகளைக் கொண்டு முஸ்லிம் சமூகம் முறையான பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இனத் துவேசக் கருத்துக்களை வெளியிட்டுவரும் சீ.வி.விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்கு இணைவதற்கு முஸ்லிம் சமூகம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வெட்கக் கேடானது.

கடந்தக் காலங்களில் தமிழ் சமூகத்தின் உரிமைக்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் சமூகம் தனித்தரப்பாக பேசுவதற்குக்கூட அங்கீகரிக்க மறுத்த நீங்கள், எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உரியமுறையில் வழங்குவீர்கள் என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் கிடையாது.

ஆகவே, கிழக்குத் தமிழர்களை உங்களது அரசியலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்தி உசுப்பேற்றுவதற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது வீண்பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம் என அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கருத்துரைகள்:

He is an abnormal case as he is already down with his two daughters who got married two gentlemen from major community. Now he can't fight with his daughters but fighting with the Muslim community with false allegation supported with fabricated and malcious stories.

It is hard to believe he was a Judge.
If he is basing his allegations on hearsay.

Perhaps become senile.

Post a comment