Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், யானைக் கூட்டத்திற்குள் குழப்பம் - ரணிலை நேசிக்கும் மேற்கு நாடுகள்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவ அல்லது சஜித் பிரேமதாசவா இல்லை சபாநாயகர் கரு ஜயசூரியவா என்பதில் குழப்பம் நீடிப்பதுடன், அக்கட்சி முடிவெடுக்க முடியாமல் குழம்பிப் போயிருப்பதாக அக்கட்சியினை மேற்கோள்காட் செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த வெற்றி பெற்று இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி முதலில் பொதுத் தேர்தலை எதிர்பார்த்திருப்பதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலையான அரசாங்கத்தை உருவாக்கிய பின்னர் ஜனாதிபதி தேர்தலை சந்திக்கலாம் என்பதில் அதன் உறுப்பினர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதில் குழம்பிப் போயிருப்பதாகவும் தெரிகிறது.

ஆனாலும், ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி அதனை நாடாளுமன்றத்திற்கு பகிர்ந்து நிலையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் உட்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்னமும் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக அக்கட்சியின் மூத்த அரசியல் முக்கியஸ்தர்களில் முதன்மையானவரான கருஜய சூரியமை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதோடு அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கும் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறியக்கிடைக்கிறது. குறிப்பாக சஜித் பிரேமதாசவிற்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு எப்பொழுதும் இலகுவாக கிடைக்கும் என்தால் அவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்றும். இல்லை எனில் தோல்வி நிச்சயம் என்றும் ஒருதரப்பு வலியுறுத்துவதாக தெரிகிறது.

எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இறுதிவாய்ப்பாக அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது பொருத்தமாக அமையும் என அவருக்கு ஆதரவானவர்கள் கருத்து வெளியிட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தீவிர ஆலோசனைகள் இடம்பெறுவதாக உள்ளகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பொது எதிரணியான பொதுஜன பெரமுன கட்சி சார்பில் கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்து வெற்றி பெறும் நபரை களமிறக்குவது என்னும் முடிவில் ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இருப்பதாக தெரிகிறது.

இதேவேளை, மேற்கத்தேய நாடுகளும் இத்தேர்தலலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தொடர்பாக கவனமாக இருப்பதாக தெரிகிறது. சீனா கொள்கையற்ற ஐரோப்பிய சார்புடைய நபர் ஒருவரே இலங்கையின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதில் அவர்கள் அவதானமாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேற்கத்தேய நாடுகளுடன் நீண்ட நெருங்கிய தொடர்பிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் செம்டெம்பர் மாதத்திற்கு முன்னர் தங்கள் ஜனாதிபதி வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கும் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதுஎப்படியிருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அக்கட்சிக்குள் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதாக அக்கட்சியினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் வேட்பாளர்கள் தெரிவில் நிதானத்தைக் கடைப்பிடித்து வெற்றி வாய்ப்புக்கான இராஜதந்திரத்தை வகுக்க வேண்டும் என பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக வலியுறுத்திவருவதாக அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.