Header Ads



மானிப்பாயில் நேற்று நடந்தது என்ன..? பலியானவர் அடையாளம் காணப்பட்டார்

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிக் காவல் படையினர் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர், மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு இளைஞர்களை மறித்து சோதனையிட முற்பட்ட போது, அவர்கள் காவல்துறையினர் மீது வாள்களால் தாக்க முற்பட்டதாகவும், அதையடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், மற்றொருவர் படுகாயம் அடைந்தார் எனவும், ஏனைய நால்வரும் தப்பியோடி விட்டனர் எனவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவரின் சடலம், உந்துருளி, வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் சிறிலங்கா காவல்துறையினரால் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா காவல்துறையினர் அந்தப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினரை தேடிச் சென்றதாகவும், காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து மானிப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பதற்ற நிலை காணப்பட்டது.

2
மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடிகாமத்தைச் சேர்ந்த, செல்வரத்தினம் கவிகஜன் என்ற, 23 வயதுடைய இளைஞனே கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தை இன்று அதிகாலை உறவினர் ஒருவர் யாழ்.போதனா மருத்துவமனையில் அடையாளம் காண்பித்துள்ளார்.

இவர் உள்ளிட்ட 6 இளைஞர்கள் நேற்றிரவு தென்மராட்சியில் இருந்து மூன்று உந்துருளிகளில் புறப்பட்டுச் சென்றதாகவும் உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட இந்த இளைஞன், ஆவா குழு உறுப்பினர் என்றும், நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினர் மறித்த போது அவர்களை தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் எனவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. எதிர்கால பயங்கரவாதிகலில் ஒருவன் இப்போதே சுடப்பட்டது மகிழ்ச்சி.ஆனால் இந்த ஆவா குழுவில் உள்ள அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டும்.அரசு இன்னும் கவன்யீனமாக இருந்தால் இன்னும் சில வருடங்களில் இது ஆயுத குழுவாக மாறிவிடும்.சில வருடங்களுக்கு முன்பாக உருவாகிய இந்த பயங்கரவாத கும்பலை அரசு இனியும் விட்டு வைப்பது எதிர்காலத்தில் மிகப் ஆபத்தாக மாறிவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.