Header Ads



இலங்கையை ஆட்டுவிக்கும் அமெரிக்கா - கட்டுநாயக்காவில் சோதனையின்றி தரித்திருக்கும் விமானம்

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம் நீண்ட தொலைவுக்கு பெருமளவு சரக்குகளை ஏற்றிச் செல்லக் கூடியது.

W.G.N 1710 என்ற இலக்கமுடைய இந்த விமானம், பஹ்ரெய்னில் இருந்து கட்டுநாயக்க வந்துள்ளது. முன்னதாக, ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் இருந்து இந்த விமானம் பஹ்ரெய்னுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.

அண்மைக்காலத்தில் இந்த விமானம், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்திருந்த பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, ஜூலை 5ஆம் நாள் கட்டாரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கும், ஜூலை 2ஆம் நாள் இத்தாலியின் கட்டனியாவில் உள்ள விமானப்படைத் தளத்துக்கும் இந்த விமானம் பயணம் செய்துள்ளது.

அண்மைக்காலத்தில் இந்த விமானம் பெரும்பாலும், ஏனைய நகரங்களில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு அல்லது, அல்லது இராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

அத்துடன், வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளராக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இருக்கிறது என்றும், அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள இந்த விமானம், அக்சா உடன்பாட்டுக்கு அமைய, அமெரிக்க படையினருக்கான விநியோகப் பொருட்களுடன் வந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னதாக, இந்த உடன்பாட்டுக்கு அமைய, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் என்ற போர்க்கப்பல், கட்டுநாயக்க ஊடாக விநியோகப் பொருட்களை பெற்றிருந்தது.

பஹ்ரெய்னில் இருந்து சரக்கு விமானங்களில் கட்டுநாயக்கவுக்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள், யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் கப்பலுக்கு சிறிய விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

இந்த விநியோகப் பொருட்கள் சிறிலங்காவின் சுங்க அதிகாரிகளாலோ அல்லது வேறு பாதுகாப்பு அதிகாரிகளாலோ சோதனையிடப்படவில்லை.

அதேவேளை தற்போது, யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் கப்பல் அமெரிக்காவில் தரித்து நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானுடனான பதற்றத்தை அடுத்து அமெரிக்கா யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் என்ற போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு அருகே, ஓமான் வளைகுடாவில் நிறுத்தியுள்ளது.

இந்தக் கப்பலுக்கான விநியோகப் பொருட்களுடனேயே சரக்கு விமானம் கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்க சரக்கு  விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ள விமான நிலைய அதிகாரிகள், அதிலுள்ள சரக்குகள் தொடர்பாக விளக்கமளிக்கவில்லை.

அதேவேளை இந்த விமானம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது  என சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் இயக்கத்தில் தாங்கள் தலையிடவில்லை என்று சிறிலங்கா விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

விமானத்துக்குள் உள்ள சரக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என சிறிலங்கா சுங்கத் திணைக்கள அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.