Header Ads



ஆளுநர் கீர்த்தி தென்னகோன், காட்டியுள்ள முன்மாதிரி

(என்.எம். அமீன், தலைவர் முஸ்லிம் கவுன்ஸில்)

தென் மாகாணத்தில் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது. 

தென் மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் மாகாணத்தில் நிலவிய தமிழ்மொழி ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதில் பிரதேசத்திலுள்ளவர்களுக்கு முக்கியத்துவமளிக்காது வெளியிடங்களிலுள்ளவர்களை அழைத்து நியமனங்களை வழங்க முற்பட்டதனால், பிரதேசத்தில் பட்டப்படிப்பினை முடித்தவர்கள் நியமனங்களை பெறுவதற்கு பல வருடங்கள் காத்து நிற்க வேண்டி ஏற்பட்டது. இதனால் பாடசாலைகளின் கல்வித் தரமும் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டது. 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையின் கல்வி அமைச்சராக இருந்தவர்களுக்கு பிரதேசத்தின் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு உரிய பங்கினை வழங்க மறுத்ததற்கு எதிராக முஸ்லிம்கள் சிலர் நீதிமன்றத்தைக் கூட நாடியிருந்தனர். 

இந்தப் பின்னணியில் தென் மாகாண ஆளுநராக பதவியேற்ற கீர்த்தி தென்னகோன், தென் மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனிதாபிமான ரீதியில் நோக்கி, போட்டிப் பரீட்சைகூட நடத்தாது 94 பட்டதாரிகளுக்கு இரு வாரங்களுக்கு முன் ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளார். 94 பேரில் 71 முஸ்லிம்களும் 22 தமிழர்களும் உள்ளடங்குவர். 

மாகாண ஆளுநரின் இச் செயற்பாடு தென் மாகாண தமிழ் மொழி மூலக் கல்விக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக பாடாசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, நீண்ட காலமாக தொழிலை எதிர்பார்த்திருந்த பட்டதாரிகளது பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. 

ஆளுநர் கீர்த்தி தென்னகோன் ஒரு மாத காலத்துக்குள் நியமனங்களை வழங்கி தென் மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்கியுள்ளார். ஒப்பீட்டளவில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது தென் மாகாணத்தில் குறைவான தமிழ் பேசும் மக்களே வாழ்கிறார்கள். இவர்களது வாக்குகள் ஏனைய மாகாணங்களைப் போன்று ஓரிரு இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இல்லாததால் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் மற்றும் மாகாண ஆட்சிகளால் வளங்களை பகிர்ந்தளிப்பதில் சமத்துவம் பேணப்படவில்லை. 

இதனை உணர்ந்த மாகாண ஆளுநர் தெற்கு தமிழ் பேசும் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. 

தெற்கு தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. தோட்டப்புற பாடசாலைகளிலும் முஸ்லிம் பாடசாலைகளிலும் நீண்ட காலமாக ஆசிரிய பற்றாக்குறை காணப்படுகின்றது. 

இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எஞ்சியுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அண்மையில் ஆசிரியர்களில்லாமையால் மூடப்பட்டிருந்த தோட்டப் பாடசாலை ஒன்றை பல மாதங்களின்பின் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். 

சமூகத்தின் அடிமட்டப் பிரச்சினைகளை நன்குணர்ந்த இன, மத, பேதம் பாராது செயற்படும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் காட்டியுள்ள முன்மாதிரி இன ரீதியாகச் சிந்திக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமையட்டும்.

1 comment:

  1. இப்படியான மனசாட்சி உள்ளவர்கள் அதிகம் அரசியலில் இருந்தால்,இந்த எந்தவித பிரச்சினையும் இல்லாமல் போகும்,நாடும் முன்னேற வாய்ப்பு உருவாகும்

    ReplyDelete

Powered by Blogger.