Header Ads



ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி, மீண்டும் போட்டியிட வேண்டும் - SLFP மத்தியகுழு தீர்மானம் நிறைவேற்றம்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இறக்குவதற்கு அக்கட்சியின் மத்திய குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (27) கொழும்பில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுனவுடனான அரசியல் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில், பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் கலந்துரையாடல்களின் தற்போதையை நிலைமை குறித்து மத்திய குழுவுக்கு செயலாளர் தயாசிறி ஜயசேகர தெளிவுபடுத்தினார்.

அத்துடன், குறித்த பேச்சை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்வதற்காக மற்றுமொரு குழுவை நியமிக்கவேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, பைசர்முஸ்தபா , லசந்த அழகியவன்ன ஆகியோரின் பெயர்கள் புதிய குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்பின்னர் மரண தண்டனையை அமுல்படுத்தும் விவகாரம் குறித்து தமது சகாக்களுக்கு ஜனாதிபதி சிறிசேன தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, சுதந்திரக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.