June 12, 2019

Dr. சாபியின் மனைவி, வழங்கியுள்ள பேட்டி

குருநாகல் போதனா வைத்தியசாலை, மருத்துவர் ஷாபியை குற்றவாளியாக முத்திரை குத்திவிட்டது. ஊடகங்களும், இனவாதிகளும் குறித்த வைத்தியர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவரை குற்றவாளியாகவே அடையாளப்படுத்திவிட்டன.

ஆனால், இதுவரை Dr.சாபியின் மனைவியின் கருத்தை கேட்டறிவதற்கோ, பிரசுரிப்பதற்கோ எந்தவொரு ஊடகமும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

Dr. ஷாபியின் மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் மருத்துவராவார்.

அவருடனான நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்கள் இதோ...

"எமது வீட்டை கடந்த ஏப்ரல் மாதம் சோதனையிட்டனர். நாட்டு நிலைமை கருதி முன்னர் நடாத்திய தேடுதலின் ஒரு பகுதியாகேவே அது அமைந்திருந்தது. வங்கிக் கணக்குகளின் தரவுகள் மற்றும் சொத்து விபரங்களையும் கேட்டறிந்தனர்.. வீட்டையும் சோதனையிட்டனர். வெளிநபர்கள் வருவார்களா எனக் கேட்டனர். எமது வீட்டை சோதனையிட்டு ஐந்து நாட்களின் பின்னர், நாம் வாடகைக்கு வழங்கியுள்ள வீட்டிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எமது வீட்டின் ஒரு பகுதியைத் தான் வாடகைக்கு கொடுத்துள்ளோம். அதன் பின்னர், கடந்த 06 ஆம் திகதி, ஆய்வு கூடத்திற்கு (Lab) சென்று சோதனை மேற்கொண்டனர். ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் இந்த சோதனைகள் நடாத்தப்பட்ன.

இவ்வாறான சோதனை நடவடிக்கைகளை நாம் பெரிதாக பொருட்படுத்தவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கமைய இவை சாதாரண சோதனைகளாகவே எடுத்துக்கொண்டோம். நாம் தவறு செய்யவில்லையெனில் அச்சம் கொள்ளத் தேவையில்லைதானே. அவை அத்துடன் முடிந்துவிட்டன.

எனினும், தௌஹீத் ஜமாத் வைத்தியர் ஒருவர் இவ்வாறு செய்வதாக மே மாதம் 23 ஆம் திகதி “திவயின” பத்திரிகையின் முன்பக்க செய்தியில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியை நாமும் பார்த்தோம். எனினும், இவற்றை பெரிதாக பொருட்படுத்தும் தேவை எமக்கு இருக்கவில்லை. காரணம் இந்த விடயத்தின் அடிப்படையில் எந்தவிதமான சோதனைகளும் இடம்பெறவில்லை.

23 ஆம் திகதி மாலை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன எனது கணவரின் படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, “பத்திரிகையில் இருக்கும் செய்திக்குரியவர் இவர் தான்” என அந்தப் படத்திற்கு கீழே குறிப்பிட்டிருந்தார். மறுநாள் காலை பார்க்கும்போது 400 பேருக்கும் மேல் முகநூலில் share செய்திருந்தனர். எனினும், மறுதினம் அவரே அந்தப் புகைப்படத்தை நீக்கியிருந்தார். ஆனால், பல்வேறு தரப்பினரிடையே அந்தப் புகைப்படம் பரிமாறப்பட்டுவிட்டது. “இவர்களின் வீடு எங்கே? இவர்கள் கொல்லப்பட வேண்டும்” என பலர் அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தனர். எனது பிள்ளைகளின் புகைப்படங்களையும் அவர்கள் தேடியிருந்தனர். கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னதாகவே இந்த சம்பவங்கள் அரங்கேறியிருந்தன.

நான் “இந்த விடயம் தொடர்பில் நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எனது கணவருக்கு 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகல் கூறியிருந்தேன். அதன் பின்னர் கணவரின் நண்பரான சட்டத்தரணி ஒருவரிடம் நாம் ஆலோசனை பெற்றோம். கடிதமொன்றை தயார்படுத்துமாறு அவர் அறிவுரை வழங்கினார். நாம் அன்றைய தினம் மாலை வேளைக்கு முன்னராகவே கடிதமொன்றை எழுதினோம். அன்றைய தினம் நோன்பு என்பதாலும், பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்ததாலும், அந்தப் பணியில் தாமதம் ஏற்பட்டது. எனினும், கடிதத்தின் பிரதி ஒன்றை எடுத்திருந்தோம். முகநூலில் பதிவிடப்பட்ட பதிவுகள் குறித்து எனது கணவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. “நான் தவறு ஏதும் செய்யாத பட்ச்சத்தில் அச்சம்கொள்ளத் தேவையில்லை” என்றே அவர் கூறினார்.

பிழை ஏதும் செய்யவில்லை என்றாலும், வீட்டிற்கு வந்து சொந்தரவு செய்யக்கூடும் என்று நான் பயத்தில்தான் இருந்தேன். அன்று மாலை பள்ளிக்குச் சென்று தொழுதுவிட்டு வருவதாக அவர் வெளியேறினார். இரவு 08 மணியாகும் போது, சிவில் உடையில் இரண்டு அதிகாரிகள் வந்து வீட்டிற்கு வெளியில் நின்றனர். அவர்களை வீட்டிற்குள் அழைத்து அவரிடம் பேசினேன். “உங்கள் கணவர் எங்கே?” என்று அவர்கள் என்னிடம் வினவினர். பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளதாக நான் அவர்களிடம் கூறினேன். நாம் முறைப்பாடு செய்வதற்கு தயார் செய்திருந்த ஆவணங்கள் மேசையின் மீதே இருந்தது. அது குறித்தும் அவர்கள் விசாரித்தனர். பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்கேக் நாம் தாயராகி இருந்தோம் என்ற நான் கூறினேன். பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த பதிவுகள் பற்றியும் நான் கூறினேன். “அப்படியென்றால் இப்போதே பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்வோம்” என்று அவர்கள் சினேகபூர்வமாகவே கூறினர்.

அதன்பின்னர், பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்காக வெளியேறினோம். அப்போது எனது சகோதரர்கள் பொலிஸ் வாகனத்தை பின்தொடர்ந்தனர். முறைப்பாடொன்றைப் மேற்கொள்ளவே நாம் தயாராக இருந்தோம். எனினும், பொலிஸ் நிலையத்தைக் கடந்து வாகனம் சென்றது. அந்த நேரத்தில் அவ்விடத்துக்கு வந்த எனது கணவரை வீதியை மறித்து அவர்கள் திடீரென கைது செய்தனர். அதன் பிறகு அந்த இடத்தில் வைத்துக்கொண்டே யாரோ ஒருவருடன் சுமார் 30 நிமிடங்கள் வரை தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். கணவரைக் கைது செய்வதா? இல்லையா? என்பது குறித்தே அவர்கள் உரையாடியதாகவே எனக்கு விளங்கியது. எங்களை வரவேண்டாம் எனக் கூறிவிட்டு, கணவரை மாத்திரம் அழைத்துச் சென்றனர். நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். அதற்கு ஒரு மணி நேரத்தின் பின்னர், கணவரையும் அழைத்துக் கொண்டு, ஒரு பொலிஸ் அதிகாரி எமது வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் எனது முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கவும் இல்லை. அதேவேளை அவர்களின் கைகளில் இருந்த எனது முறைப்பாட்டுக்குரிய ஆவணங்களும் காணாமல் போயிருந்தன.

முறைகேடான வழியில் பணம் ஈட்டியுள்ளதாக கணவர் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாக வீட்டிற்கு வந்த பொலிஸ் அதிகாரி கூறினார். முறைப்பாடு ஏதும் பதிவாகவில்லை எனவும், தகவல்கள் சிலவே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். முறையற்ற விதத்தில் பணம் சம்பாரித்துள்ளதாகவும், வருமானத்திற்கு அதிமான சொத்துக்களை வைத்திருப்பதாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் வீட்டிற்கு ஆறு ஆண் அதிகாரிகள், இரண்டு பெண் அதிகாரிகள் ஒரு நாயுடன் வந்தார்கள். வீட்டுக்கு வெளியேயும் மேலும் பல பொலிஸார் நின்றுகொண்டு இருந்தனர். CCTV கெமராவின் இணைப்பைத் துண்டித்தனர். அதிகாலை வரை வீட்டை சோதனையிட்டனர். என்னிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். எமது ஆவணங்கள், பொருட்கள் பலவற்றை கைப்பற்றினர். கடவுச்சீட்டு, மடிக்கணனி ஒன்று, எனது காசோலைப் புத்தகம், ஆவணங்கள் இருந்த பெட்டகம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றனர். அவற்றின் விபரங்களைக் குறித்துக் கொண்டார்கள். ஆனால், என்னிடம் எதனையும் தரவில்லை. கணவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எந்தவித வாரன்ட் (முன்அனுமதியும்) இன்றியே வீட்டை சோதனையிட்டனர். எமது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களிடம் ''இந்த வீட்டில் வாடகைக்கு இருப்பதற்கு உமக்கு வெட்கமில்லையா'' என்று கேட்டனர். அன்று பயந்து வீட்டை வீட்டு வெளியேறியவர்கள்தான், இன்றுவரை அவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை.

எமது வீட்டை பரிசோதனை செய்தவர்களில் ஒருவர் ''சீப், ஃரூப் ஒன்றும் இல்லை (தலைமை அதிகாரி, ஆதாரம் ஒன்றும் இல்லை) என்ன செய்வது? எடுக்கவா” என்று கேட்டார். கணவரைக் கைது செய்யவா? வேண்டாமா? என்று யாரிடமோ அனுமதிகேட்டார் போலவே எனக்கு தெரிந்தது. அதன் பின்னர் குருநாகல் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். பின்பு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு இடமாற்றம் செய்தார்கள். எனது கணவர் தற்பொழுது வரையிலும் கைது செய்யப்பட்டவராகவே இருக்கிறார். ஏன் கைது செய்யப்பட்டார்? என்பது கூட எமக்குத் தெளிவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழே அவர் கைது செய்யப்பட்டதாக அறிகிறேன். எனினும், சொத்துக்கள் பற்றியே குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். மே 23 ஆம் திகதி “திவயின” பத்திரிகையில் செய்தி வெளியானதன் பின்னர், குறித்த பத்திரிகைச் செய்தி தொடர்பில் விசாரணை செய்யப்படமாட்டாது எனவும், அதுவொரு பொய்யான செய்தி எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். எனினும், குருநாகல் பிரதேசத்தில் முறைகேடான சொத்துக்குவிப்பு விவகாரம் தொடர்பில், ஒரு மருத்துவர் சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இவர்கள் சொல்வது போன்று, இவ்வாறானதொரு குற்றச்சாட்டு முன்னர் இருக்கவில்லை. முறைகேடான சொத்துக் குவிப்பு தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என்பதை நான் அறிவேன்.

“ரியோ வியாபாரக் கட்டிடத்தொகுதியை” கொள்வனவு செய்தமை சம்பந்தமாக தற்போது பேசுகின்றனர். முறைகேடான வழியில் பணம் சம்பாதித்து கோடீஸ்வரர்களாக மாறியதாகக் கூறுகின்றனர். நான்கு பேர் இணைந்தே இந்த கட்டிடத்தொகுதியை வாங்கினோம். எனது கணவர் மாத்திரம் இதனை தனியாக வாங்கவில்லை. இந்த சொத்தின் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாவாகும். 6 கோடி ரூபா முற்பணம் செலுத்தினோம். மீதித் தொகையை கடன்வாங்கியே செலுத்தினோம். இதற்கு முன்னதாக குருநாகல் சிங்கள வர்த்தக சங்கத்தைச் சார்ந்த ஒருவர், இந்த கட்டிடத்தொகுதியின் உரிமையாளரிடம், இதைப்பற்றி கேட்டதாகவும், மேலதிகமாக ஒரு கோடி ரூபா தருவதாகவும் அவர் கூறியதாக உரிமியாளர் கூறியிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் எனது கணவர் உள்ளிட்ட நான்கு பேரும் குறித்த இடத்திற்கு முற்பணம் செலுத்தியிருந்தனர். வங்கிக் கடனுக்கும் விண்ணப்பத்திருந்தனர். எனவே, குறித்த யோசனையை உரிமையாளர் நிராகரித்திருந்தார். எனது கணவர் உள்ளிட்ட நான்கு பேரும் கட்டிடத்தை வாங்கியிருந்தனர். தற்போது அதனைப் பிரச்சினையென்று கூறுகின்றனர். அப்படியென்றால் அது Dr.ஷாபியின் சொத்து அல்ல. அது Dr.ஷாபி உள்ளிட்ட ஒரு குழுவினருக்குச் சொந்தமான சொத்து ஆகும்.

குருநாகலில் எமக்கு இரண்டு அதிசொகுசு வீடுகள் இருப்பதாக “லங்காதீப” பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியொன்றும் இல்லை. ஒன்று நாம் குடியிருக்கும் வீடு. அது சாதாரணமான பழைய வீடு. எமது அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்காக இந்த வீட்டின் ஒரு பகுதியை புனர்நிர்மாணம் செய்துள்ளோம். இன்னுமொரு வீடு இருப்பதாக கூறப்படுகிறது. சில நேரம் அது எனது தாய்வீடாக இருக்கலாம். அதுவும் அதிசொகுசு வீடல்ல. குருநாகலில் எமக்கு வேறு வீடுகள் இல்லை. இதனைத் தவிர சில பேர்ச்சஸ் காணிகள் எம்மிடம் இருக்கின்றன. நாங்கள் ஏக்கர் கணக்கில் காணிகளை வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் அல்ல. எங்களை எதற்காக கோடீஸ்வரர்கள் என்று சொல்கிறார்கள் என்று எமக்குப் புரியவில்லை.

தெளஹீத் ஜமாத் வைத்தியர் ஒருவர் குறித்தே “திவயின” பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. எனினும், தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட எந்தவொரு அமைப்புடனும் எனது கணவருக்குத் தொடர்பு இல்லை. இதை யாராலும் நிரூபிக்க முடியாது.

எனது கணவர், கலாவெவ பிரதேசத்தில் பிறந்த பராம்பரிய இலங்கை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாம் எமது சமயத்தில் எந்தவொரு பிரிவிற்கும் சார்ந்தவர்கள் அல்லர். நாம் இலங்கையில் வாழும் பாரம்பரிய முஸ்லிம்கள். அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார். ஒரு கர்ப்பிணித் தாய்க்கு சத்திர சிகிச்சை செய்ய ஒரு நாள் தாமதம் ஏற்பட்டால், அவர் வீடு செல்லவும் தாமதமாகும் என அவர் நினைப்பதால், சத்திரசிகிச்சையை ஒருபோதும் அவர் தாமதப்படுத்தமாட்டார். சத்திரசிகிச்சை செய்வதாயின் ஒரு தாய் 06 மணித்தியாலங்கள் பசித்திருக்க வேண்டும். வைத்தியர் ஒருவர் சத்திரசிகிச்சையை தாமதித்தால் ஆறு மணித்தியாலங்கள் பசித்திருந்த தாயின் எதிர்பார்ப்பு வீணாகிவிடும். அவர் மறுநாளும் பசியுடன் காத்திருக்க வேண்டும். இவ்வாறன பல கொள்கைகளை அவர் வைத்திருந்தார். எனது கணவர் அர்ப்பணிப்புடன் தனது பணியை செய்யும் ஒருவர். தற்போது, வெளியே வந்து பல தாய்மார்கள் பேசுகின்றனர். எனினும், இனவாத பிரச்சினையினால் வெளியே வராமல், அவர் குறித்து கௌவரமாக கதைக்கும் ஏராளமான தாய்மார்கள் பலர் இருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் நாம் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. நாம் வீட்டைவிட்டு வெளியேறினோம். எனது சகோதரர் என்னை தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எனது பிள்ளைகள் இப்போது பாடசாலைக்குச் செல்வதில்லை. குருநாகலில் உள்ள சிங்கள பௌத்த மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி கற்கும் பிரதான பாடசாலைகளுக்கே எனது பிள்ளைகளும் செல்கின்றனர். தற்போது, எனது பிள்ளைகள் மூவரும் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனக்கும் தொழிலுக்குச் செல்ல முடியவில்லை. குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பௌத்த பிக்குகள் குரோதத்தை வெளிப்படுத்தினர். வைத்தியசாலைக்குச் சென்றால் தாக்கப்படுவேன் என்று அச்சுறுத்தல்கள் உள்ளன. இன்னமும் நான் நிர்க்கதியாகியுள்ளேன்.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நான் தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில், சட்டநடவடிக்கை ஏதேனும் எடுக்க முடியுமா? என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். எனது கணவர் குறித்த பீ அறிக்கை (B Report) இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை. எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார், என்பது கூட இன்னும் எமக்குத் தெரியவில்லை. இவற்றை அறிந்துகொண்ட பின்னர், அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். நாம் தவறிழைக்கவில்லை.. எனினும், குற்றவாளிகளாக ஆக்கிய பின்னர், முறைப்பாடுகளை ஏற்கும் நடைமுறையே இலங்கையில் இருக்கிறது'' என்று அவர் கூறினார்.

8 கருத்துரைகள்:

May Allah make things easy for you & Dr. Shafi. He is the most just.

allah will help to you and family ,

அல்லாஹ் போதுமானசன்

அல்லாஹ் போதுமானவன்

May Allah protect your family from these RACIST and TERROR Buddhist.

Hasbunallahu wanihmal wakeel

Avarhalai vida Allah periyavan. Shakthi ullavan..

Hasbunallahu wanihmal wakeel.

Post a Comment