Header Ads



Dr ஷாபியை தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாதென, பதுகாப்பு அமைச்சுக்கு CID அறிவிப்பு


குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாஃபி ஷிஹாப்தீனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சருக்கு அறிக்கையிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவர் ஷாஃபிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய மருத்துவர் மொஹமட் ஷாஃபி ஷிஹாப்தீன் கடந்த மே மாதம் 25ஆம் திகதி மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்த நிதியூடாக சொத்துகளை கொள்வனவு செய்தமை, பிரதேசத்தில் காணப்படும் அமைதியற்ற நிலைமையில் இனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவிற்கமைய அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் B-210 அறிக்கையுடன் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

எனினும், மருத்துவருக்கு பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக தெரியவரவில்லை என B அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சந்தேகநபர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது முறையற்ற வகையில் பணம் சம்பாதித்துள்ளமை குறித்து தெரியவரவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், Al Thawul Associated Seshan Grant எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்துடன் முன்னெடுக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் குறித்து இரண்டு வங்கிக் கணக்குகளின் அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியது.

இதேவேளை, வைத்தியர் பெண்களின் Fallopian நாளத்தை இடைமறித்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளூடாக தகவல்கள் வௌியாகவில்லை எனவும் குற்றப்புலனாய்வுப் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது.

டொக்டர் ஷாஃபி தொடர்பில் 615 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவற்றில் 147 முறைப்பாடுகள் அவர் முன்னெடுத்த மகப்பேற்று சத்திரசிகிச்சைகளின் பின்னர் குழந்தை கிடைக்கவில்லை எனக்கூறும் தாய்மார்களினால் பதிவு செய்யப்பட்டவையாகும்.

இதனையடுத்து, ஊடகம் மற்றும் பல்வேறு முறைகளூடாகக் கிடைத்த அறிவுறுத்தல்களுக்கமைய, மருத்துவருக்கு எதிராக 468 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.

விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட 44 வைத்தியர்கள், 71 தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் 18 பேர் மற்றும் பிரசவ வைத்தியர்கள் 75 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களும் அடிப்படை விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வகையில் சொத்துக்களை சேகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வதற்காக முன்னெடுக்கப்படும் HSG எனப்படும் விசாரணையை நடத்துவதற்கான வசதி தேசிய வைத்தியசாலையில் காணப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், இந்த விசாரணையூடாக புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளிட்ட சிக்கல்கள் காணப்படுவதாக, குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சரத் வீரபண்டார நேற்று (27) நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயம் தொடர்பில் ஆராயும் மருத்துவ பரிசோதனைக் குழுவில் தம்மையும் உள்வாங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். எனினும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது.

மருத்துவர் ஷாஃபி தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்ற அறிக்கை அடுத்த மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

1 comment:

  1. இனவாதிகலுக்கு இது ஒரு செருப்படி

    ReplyDelete

Powered by Blogger.