Header Ads



அதிரடி காட்டிய வங்கதேசம், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது


உலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபாரமாக வெற்றிபெற்றது.
டவுன்டான், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ்  அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (0) டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் இவின் லீவிஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 

இந்த ஜோடியில்,  தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்புடன் ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த இவின் லீவிஸ் 70(67) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி சிறிது ரன் சேர்த்த நிகோலஸ் பூரன் 25(30) ரன்களும், அதிரடியாக ஆடி அரைசதத்தை பதிவு செய்த ஹெட்மயர்  50(26) ரன்களும், ஆந்த்ரே ரஸ்செல் (0) ரன் எதுவும் எடுக்காமலும், அதிரடி காட்டி ஓரளவு ரன் சேர்த்த ஜாசன் ஹோல்டர்  33(15) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பதிவு செய்த ஷாய் ஹோப்  96(121) ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் டேரன் பிராவோ ஆட்டத்தின் கடைசி பந்தில்  19(15) ரன்களில் போல்ட் ஆனார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ்  அணி நிர்ணயிக்கப்பட்ட  50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்களை எடுத்தது. வங்காளதேச அணியின் சார்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் மற்றும் முகமது சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஷகிப்-அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காளதேச அணியின் சார்பில் தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். துவக்கத்திலே அதிரடி காட்டிய சவுமியா சர்கார் 29(23) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தமிம் இக்பாலுடன், ஷகிப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிம் இக்பால் 48(53) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முஷிபூர் ரகுமான் 1(5) ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ஷகிப்-அல்-ஹசனுடன், லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை உயர்த்திய இந்த ஜோடியில், ஷகிப்-அல்-ஹசன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடியில் லிட்டன் தாஸ் தனது அரைசத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடி, வெஸ்ட் இண்டிஸ் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 

இறுதியில் ஷகிப்-அல்-ஹசன் 124(99) ரன்களும், லிட்டன் தாஸ் 94(69) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வங்காளதேச அணி 41.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ ரசல், தாமஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.  

No comments

Powered by Blogger.