June 02, 2019

முஸ்லிம் சமூகத்தை பழிவாங்கும் நாடகம் நடக்கிறது, சமூகத்தை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டியுள்ளது

ஏப்ரல் 21ஆம் திகதிய தற்கொலை குண்டுத்தாக்குதல் முதல் அதன்பின்னர் நாட்டில் பரவலாக இடம்பெற்று வந்த துன்பியல் சம்பவங்கள் எம்மால் ஜீரணிக்கப்படக் கூடியதாக அமையவில்லை. தௌஹீத் என்ற பெயரில் ஒருசிலர் இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணாகச் செயற்பட முனைந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்துவிட்டனர் இதன் பின்னணியில் சர்வதேசம் இருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அதனைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது என மேல்மாகாண ஆளுநர் எம். அசாத் சாலி தெரிவித்தார். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவு கட்டிக்காக்கப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் உறவு குடும்ப உறவுகளாகக் கூட பரிணமித்துள்ளன. இன்று நாம் முகம் புதைத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஆளுநர் அசாத் சாலி தினகரன் வாரமஞ்சரிக்கு வார இறுதியில் நேர்காணலொன்றைத் தந்தார். அதன்போது இன்று முஸ்லிம் சமூகம் எதிர் கொண்டிருக்கும் நிலைமைகள் குறித்தே எம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் அந்த நேர்காணலை வாரமஞ்சரி வாசகர்களுக்குத் தருகிறோம். 

கேள்வி – மேல் மாகாணத்துக்கான ஆளுநராக நீங்கள் பதவி வகிக்கின்ற போதிலும் இந்த நாட்டு முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவே சமூகம் உங்களை கருதுகின்றது. இந்த நிலையில் நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா? 

பதில் – ஏப்ரல் 21ல் நடந்த தாக்குதல் மனித சமுதாயத்துக்கு விடுக்கப்பட்ட புதிய சவாலாகவே நான் பார்க்கிறேன். தற்கொலை குண்டுதாரி பெயரளவில் தான் முஸ்லிம். அல்லாஹ்விடம் அவன் முஸ்லிமேயல்ல. இஸ்லாத்திலிருந்து தூரமாக்கப்பட்டவன். கொலைக்கோ, தற்கொலைக்கோ இஸ்லாத்தில் இடம் கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றேன்.  அடுத்து கடந்த 13ம் திகதி முதல் இடம்பெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கின்றபோது ஏப்ரல் 21 சம்பவத்துக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இது அரசியல் உள் நோக்கம் கொண்டதொரு அணி தூண்டிவிட்ட இனக்கலவரமென்றே நான் சொல்வேன். இந்தத் தாக்குதல்களில் கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவ மக்கள் எவரும் சம்பந்தப்படவில்லை. முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் ஒரு முயற்சியாகவே இதனைப் பார்க்க முடியும்.  இந்த நெருக்கடிகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும் அப்பாவி முஸ்லிம்களைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதியுடனும் பாதுகாப்புத்தரப்புடனும் பேசி சில அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க விடுகின்றேன். 

கேள்வி – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை கொடுத்தும் ஏன் அது குறித்து அக்கறை காட்டப்படவில்லை?  

பதில் – இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட வேண்டியதல்ல. நானும் உங்களுடன் சேர்ந்து அரசாங்கத்திடமும் பாதுகாப்புத்தரப்பிடமும் கேட்க வேண்டும். மேற்குலகின் பின்னணியோடு பேரனர்த்தமொன்று நடக்கப்போவதை ஒருவருட காலத்துக்கு முன்னராக அரசாங்கத்தை நாம் எச்சரித்திருந்தோம். ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடுகள், அதனுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்களை எல்லாம் முழுமையாக பெற்றுக் கொடுத்தும் கூட அரசாங்கமும், பாதுகாப்புத்தரப்பும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.  நிலைமை எல்லை கடந்த பின்னர் அரசாங்கம் தடுமாறுகின்றது. பாதுகாப்புத் தரப்பு ஏதேதோ சொல்கின்றது. ஒரு தரப்பு மற்றொரு தரப்பு மீது சுட்டு விரல் நீட்டிக் கொண்டிருக்கின்றது.  இவர்கள் விட்ட தவறு காரணமாக துயர் அனுபவிப்பது எமது அப்பாவி முஸ்லிம் சமூகமாகும் இன்று ஒரு முஸ்லிம் கூட வீதியில் இறங்கி நடக்க முடியாத அளவுக்கு வெட்கித்தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு தமிழரைக் கண்டால் புலி முத்திரைக் குத்திப் பேசிய வாய்கள் இன்று ஒரு முஸ்லிமை கண்டால் ஐ.எஸ். பயங்கரவாதி என முத்திரை குத்திப் பேசுகின்றனர். 

இதன் பின்னணியில் முற்று முழுதான சர்வதேச (மேற்குலக) பின்னணி இருக்கவே செய்கின்றது. இந்த விடயத்தில் உள்ளக விசாரணை மட்டும் போதாது. உலகளாவியதான பங்களிப்பு குறித்து தேடி அம்பலப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் கருவறுப்பதற்கு மேற்குலகம் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது.  1994 முதலே இவ்விடயம் தொடர்பாக நாம் குரல் எழுப்பி வந்தோம். அன்றைய அரசு அது குறித்து கண்டு கொள்ளவில்லை. இன்று அதன் பழியை எம்மீதும், ஜனாதிபதி பிரதமர் மீதும் போட்டு தப்பமுயற்சிக்கின்றனர். இந்த விடயத்தில் ஆட்சிக்கு வந்த, ஆட்சி நடத்தும், அரசுகள் அனைத்தும் பதில் கூறியாக வேண்டும். அந்த அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியதால் கஷ்டப்படுவது எமது அப்பாவி மக்களேயாகும்.  

கேள்வி – ஏப்ரல் 21 முதல் இன்றுவரை நடத்துகொண்டிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் சட்டம் சரியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதா அதில் உங்களால் திருப்தி கொள்ள முடியுமா? 

பதில் – இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது சற்றுக் கஷ்டம் தான் 13ம் திகதி ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக் கட்டவிழ்ப்பின் பின்னணியில் நின்று செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலும் முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனை நான் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். சந்தேக நபர்கள் தேடப்படுவதாக பாதுகாப்புத் தரப்பு கூறிவருகின்றது. இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஹெட்டியபொல, மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்ற போது பாடகர் மதுமாதவ, மற்றும் அரவிந்த போன்றோர் களத்தில் நின்று செயற்பட்டதை காணொளிகள் மூலம் கண்டு கொண்டோம். அவர்கள் பகிரங்கமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்புத் தரப்பினர் ஏன் அவர்களை கைது செய்ய தயங்குகின்றனர் என்பதே புரிந்துகொள்ள முடியாதுள்ளது.  
மற்றொரு விடயம் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் பொதுஜனமுன்னணி (மொட்டுக்) கட்சியின் பிரதேசசபை தலைவர் மற்றும் அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். மினுவாங்கொடையில் சம்பவத்தினமன்று முற்பகல் 10மணிமுதல் மாலை வரை மதுமாதவ நடமாடியதை நன்கு அவதானிக்க முடிகிறது. 

இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர். தமது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் தேடுதல் நடவடிக்கைகளின் போது அப்பாவி மக்கள் கூட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜனாதிபதியிடமும், பாதுகாப்பு உயர் பீடத்திடமும் எடுத்துக் கூறியுள்ளேன்.  

தாக்குதலில் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 34பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்ற முஸ்லிம் சமூகத்தின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். பொறுமையுடன் பிரார்த்திப்போம்.  

கேள்வி – உங்களையும், கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவையும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் பதவிகளிலிருந்து நீக்குமாறும், கைது செய்யுமாறும் ஒரு கூட்டம் குரல் எழுப்பி வருகின்றது. இது குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்? 

பதில் – இதனைத் தொடங்கி வைத்திருப்பவர் சிங்கள மக்களின் 500 வாக்குகளைக் கூட பெறமுடியாத ஒரு கட்சியின் தலைவர். அவரது வாய் திறக்கப்படாமலிருந்தால் மாயமாகிவிடுவார். அதற்காக வீரன்போன்று ரி.வி.யிலும் பத்திரிகைகளிலும் வீராவேசமாக பேசுகின்றார். அதனைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. என்ன நடக்கின்றது என்ன நடக்கப்போகின்றது என்பவற்றை பொறுத்திருந்து பாருங்கள்.   வாய்மையே வெல்லும் என்ற பொன்மொழி ஒரு போதும் பொய்த்துவிடாது. எம்மை பொறுத்த மட்டில், நாம் நெஞ்சுக்கு நேர்மையாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இறைவனுக்குப் பயந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்தை பழிவாங்கும் நாடகத்தின் மற்றொரு அங்கமே எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். இதனைக் கண்டு நாம் அஞ்சி ஓடிவிடப்போவதில்லை. என்ன நடக்கப்போகின்றது என்பதை ஓரிருவாரங்களில் கண்டு கொள்ளலாம். 

கேள்வி – இன்றைய நிலையில் முஸ்லிம் சமுதாயத்துக்கு நீங்கள் கூறும் யோசனைகள், அறிவுரைகள் என்ன?  

பதில் – அமைதியைக் கடைப்பிடியுங்கள், பொறுமையுடன் செயற்படுங்கள், கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுங்கள். மதக் கடமைகள் ஒன்றைக் கூட தவறவிட வேண்டாம். எமது உரிமைகளில் ஒன்றைக்கூட இழக்க நாம் தயாராக இல்லை. அதே சமயம் சட்டத்துக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. 

அரசு சட்டரீதியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது விடயத்தில் எமது கல்விமான்கள், உலமாக்கள், சிவில் சமூக அமைப்புகள் ஒன்று கூடி யோசனைகளை முன்வைக்கவேண்டும். எமது உரிமைகள் பறிபோகாத வகையில் நாம் கவனமாக செயற்படவேண்டியுள்ளது. புத்திசாலித்தனமாக நாம் நடந்துகொள்ள வேண்டும். எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்க ஒருபோதும் நாம் தயங்கக் கூடாது. 

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக ஏனையவர்களுடன் சரி நிகர் சமமாக நின்று குரல் கொடுத்தவர்கள் தாம் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எமது முஸ்லிம் மூதாதையர்கள். நாட்டின் மீதானபற்று, உரிமை முஸ்லிம்களாகிய எமக்கும் உண்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 

இன்னும் இரண்டொரு தினங்களில் நோன்புப் பெருநாள் வருகின்றது. முஸ்லிம்கள் ஆடம்பரமின்றி அமைதியாகவும் வணக்க வழிபாடுகளிலீடுபட்டு உறவுகளோடும், சகோதர இனத்தவர்களோடும் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும். கடந்த நாட்களில் நாம் துயரங்களையும் எதிர் கொண்டோம். அந்தத் துயரிலிருந்து நாடு இன்னமும் விடுபடவில்லை. எனவே பெருநாள் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொண்டு வணக்க வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். 

பெருநாள் தொழுகைகளைப் பள்ளிவாசல்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்வோம். மைதானங்களில் தொழுகை நடத்துவதை தவிர்த்துக் கொள்வோம். காத்தான்குடியில் சிலர் மீண்டும் தவறாக நடக்கமுற்படுவதாக அறிகின்றோம். பெருநாள் தொழுகையை மைதானத்தில் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. இயக்கவாதிகளுக்கு இனிமேல் இந்த நாட்டில் இடமளிக்கப்பட மாட்டாது. இனவாதத்துக்கும் இடமில்லை, அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன்.      
நேர்காணல் - எம்.ஏ.எம். நிலாம் 

1 கருத்துரைகள்:

காத்தான்குடி அல்ல Sri Lanka வின் எந்த பாகத்திலாவது இனி தனி தனி இயக்கங்களை தாங்கள் பொக்கட்டுக்கலை நிரப்புவதற்காக யாரும் வைத்திருக்க முடியாது.பி.கு (அதிகமாக தமிழ் நாட்டில் அரை குறையுடன் ஓதிய சிலர் அதிக இயக்கங்கள் உருவாக்கி பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.இனி சமூகமே இவர்கள் விடயத்தில் விழிப்புடன் இருங்கள்.

Post a Comment