Header Ads



புரோக்கராக மாறிய சஜித்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்த சமரச முயற்சியின் ஒரு கட்டமாகவே அமைச்சரவை சர்ச்சை தொடர்பில் சஜித் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வரழைக்கப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். அதே வேளை தனது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் வரை அமைச்சரவையைக் கூட்டப்போவதில்லை என தெரிவித்தார். 

அதற்கினங்க கடந்த செவ்வாய்கிழமை அமைச்சரவை கூட்டப்படவில்லை. அமைச்சரவை கூட்டப்படாமைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையிலேயே அமைச்சர் சஜித் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 42 மற்றும் 43 ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பின் அடிப்படையில் ஜனாதிபதி அமைச்சரவையைக் கூட்ட வேண்டும் என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க தீர்மானித்திருந்தது. அரசியலமைப்பின் 42 ஆம் அத்தியாயத்தில் நிறைவேற்றதிகாரம் மற்றும் அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திற்கேற்ப அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

அரசியலமைப்பிற்கிணங்க தற்போது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும். நிறைவேற்றதிகாரத்தின் கீழ் அமைச்சரவையின் பொறுப்பு தொடர்பான 43 (1) அத்தியாயத்தில் இந்த விடயம் உள்ளடங்குகின்றது.

அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு அமைச்சரவைக்குரியது. அதே போன்று பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டிய கடமையும் அமைச்சரவைக்கு உண்டு. ஜனாதிபதி அமைச்சரவையின் உறுப்பினர், அமைச்சரவையின் பிரதானி என்று அரசியலமைப்பின் 42 (2) ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கிணங்க அமைச்சரவையைக் கூட்டும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என்பதை அமைச்சரவை ஜனாதிபதிக்கு வலியுறுத்தவிருந்த நிலையில் , மீண்டும் அமைச்சரவையைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததால் அதற்கான அவசியம் இல்லாமல் போனதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(எம்.மனோசித்ரா)

No comments

Powered by Blogger.