Header Ads



சஹ்ரான் பற்றி மூடப்பட்ட அறைக்குள், நாலக்க சில்வா வழங்கிய வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் பற்றிய தகவல்கள் உள்ளதாகவும் அவை பற்றி, மூடிய அறையில், இரகசியமான முறையிலேயே வழங்க முடியுமென்றும் கூறிய பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா, அவர்கள் பற்றி, ஊடகவியலாளர்கள் அற்ற அறையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ​கூறினார்.

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா, உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், நேற்றைய தினம் (04) சாட்சியமளித்தார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் ஜயம்பதி விக்கிரமரட்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆஷு மாரசிங்க, ரவி கருணாநாயக்க, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு முன்னியிலேயே அவர் சாட்சியமளித்தார்.

இதன்போது, இலங்கையில் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம், தமிழகத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.

21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த மேலும் பல விடயங்களை இதன்போது அவர் தனிப்பட்ட ரீதியிலேயே, தெரிவுக்குழு முன்னிலையில் கூறினார். இதன்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதன்போது, 21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரானை, இன்டர்போல் உதவியுடன் தேடியதாகவும் இது குறித்து, 2017ஆம் ஆண்டு இறுதி முதல், அப்போதிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாவனையிலிருந்த சஹ்ரானின் இரண்டு கணக்குள் தொடர்பாக கண்காணிக்குமாறு, பேஸ்புக் நிறுவனத்திடம் கோரியிருந்த போதிலும், அதற்கு, பேஸ்புக் நிறுவனம் பின்னூட்டல் வழங்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்

1. உங்களது பொலிஸ் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?

பதில் - 2012 ​ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், 2015 ஆம் ஆண்டில் அரச புலனாய்வு பிரிவின் பிரதிப் பணிப்பாளராக , பிரதி பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டேன்.

2.​ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அமைப்பின் தோற்றம் பற்றிய விவரங்களைக் கூறுங்கள்?

தேசிய தௌஹீத் ஜமாஅத் எனப்படும் மேற்படி அமைப்பு, ஆரம்பத்தில் இலங்கை தௌஹித் ஜமாஅத் ​என்ற பெயரிலேயே உருவானது.

3. அவ்வமைப்பின் செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்?

பதில் -2013 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே தேசிய ஜமாஅத் அமைப்பு பற்றியத் தகவல் கிடைத்தது. அந்த நேரத்தில் யுத்தம் நிறைவடைந்திருந்த நிலையில் இவ்வமைப்பு தமிழ் நாட்டில் உருவெடுத்து பின்னர் பெரும் அளவில் வியாபித்தது. அவ்வாறான நிலையில் தான் சஹ்ரான் பற்றியத் தகவலும் கிடைத்திருந்தது. ஆனால் வன்முறை கலந்த இனவாத அமைப்பாக அவர்கள் செயற்பட்டமை குறித்து தகவல் கிடைக்கவில்லை.

4. வன்முறை கலந்த இனவாத அமைப்பாக எப்போது உருவெடுத்தது?

பதில் - ஆரம்பத்தில் வன்முறை, இனவாதச் செயற்பாடுகளை தடுப்பதற்கான செயற்பாடுகளையே நாம் முன்னெடுத்து வந்தோம், சமகாலத்தில் இன்டர்போல் நிறுவனத்தின் உதவியையும் கோரியிருந்தோம், நான் உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பிலானப் பயிற்சிகளைப் பெற்றுகொண்டுள்ளதால், இந்த விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் முன்னெடுப்பதே பொருத்தமானது என்றும் அறிந்திருந்தேன். அவ்வாறிருக்க யுத்தத்தின் பின்பு பயங்கரவாத விசாரணை செயற்பாடுகள் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

5. சஹ்ரான் தொடர்பாக முன்னெடுத்த விசாரணைகள் பற்றி கூறுங்கள்?

பதில் - ஆரம்பத்தில் புலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய புலம்பெயர் அமைப்புகள் பற்றியத் தேடுதல்களையே முன்னெடுத்து வந்தோம், காத்தான்குடி சம்பவத்தைத் தொடர்ந்தே சஹ்ரான் குறித்த தகவல்களை அவருடைய முகநூல், இணையப் பக்கங்களைக் கொண்டு ஆராய்ந்து வந்தோம்.

06. காத்தான்குடி சம்பவம் பற்றி தெளிவுபடுத்துங்கள்?

பதில் - 2017 ஆம் ஆண்டில் சஹ்ரானுக்கும் மற்றுமொரு குழுவுக்கும் இடையில் காத்தான்குடி பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. மேற்படி சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் விசாரணைகளை முன்னெடுத்ததோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரால் எனக்கும் பணிப்பு விடுக்கப்பபட்து. அவ்வாறான நிலையிலேயே சஹ்ரானை பிடிக்க இன்டர்போல் நிறுவனத்திடம் நீல எச்சரிக்கையும் கோரி விண்ணப்பித்திருந்தோம்.

07. உங்களுக்குக் கிடைத்த தரவுகளை யார் ஊடாக பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புவீர்கள்?

பதில் - நேரடியாகவே தகவல்களை பகிர்ந்துகொள்வேன்.

08. நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணையிலிருந்து சஹ்ரான் எவ்வாறு தப்பினார்?

பதில் - அவர் குருநாகல், குளியாப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வந்திருந்தார். அதனாலேயே அவரை ​தேட இன்டர்போல் உதவியை நாடினோம், அதனையடுத்தே இந்தியாவில் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாதத் தகவல் கிடைத்தது.

09. சஹ்ரான் என்பவர் குறித்து மாத்திரம்தான் தகவல்களைத் திரட்டினீர்களா?

பதில் - ராசிக் என்பவர் பற்றியும் தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தோம், ஆனால் சஹ்ரான் வேறுத்திசையில் பயணிக்கிறார் என்பதை ​அறிந்தே, அவரின் முகநூல் பதிவுகளை மேற்பார்வை செய்ய ஆரம்பித்தோம்.

10. வேறு யார் பற்றியத் தகவல்களைத் திரட்டினீர்கள்?

பதில் - பலர் பற்றிய தகவல்கள் உள்ளன. நான் கைதான பின்னர் எனது பதவியில் அமர்த்தப்பட்ட ஜகத் நிஷாந்தவை தெரிவுக்குழுவுக்கு அ​ழைத்து விசாரணைகளை முன்னெடுத்தால் முழுமையான தகவல்களை அறிய முடியும்.

11. சஹ்ரானின் முகநூல் எந்தக் காலப்பகுதியில் மேற்பார்வை செய்யப்பட்டது?

பதில் - 2016ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 24 மணித்தியாலங்களும் அவரின் முகநூல் பதிவுகளை ஆராய்ந்துவந்தோம்.

12. அந்த முகநூல் பக்கத்தை தடைச் செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா?

பதில் - ஆம் TRCக்கு, முகநூல் நிறுவனம் ஆகியவற்றுக்கு அறிவித்து அந்த முகநூல் பக்கங்களை முடக்க கோரியிருந்தோம்.

13. இன்டர்போல் நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கைக்குப் பதில் கிடைத்ததா?

பதில் - அவர் இந்தியாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனை முழுமையாக நம்பிவிடவில்லை.

14. காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் அ​வரை கைது செய்வதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளனவா?

பதில் - அந்த காலப்பகுதியில் தான் அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் தொழில்நுட்ப உதவியுடனும் அவரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டோம்.

15. நீங்கள் கைதாகும் முன்னர் இந்த விசாரணைகளை நிறுத்துமாறு அழுத்தம் கிடைத்ததா?

பதில் - இல்லை அவ்வாறான அழுத்தங்கள் வரவில்லை. குறிப்பாக பொலிஸ்மா அதிபரிடத்திலிருந்து வரவில்லை.

16. ஆனால், அப்போதைய காலத்தில் மேற்படி விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரால் உங்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதே? (குறித்த விடயம் தொடர்பிலான ஆவணமும் வழங்கப்பட்டது)

பதில் - இல்லை. இது அதற்கான ஆவணம் அல்ல. அல் கைதா இயக்கத்துடன் தொடர்பில் உள்ளார் என்று கூறப்பட்ட ஒருவரை கைது செய்வதற்கான முனைப்புகள் காணப்பட்ட போது அவர் புலனாய்வுத் தகவல்களை வழங்குபவர் என்றும் எனவே அவரை கைது செய்ய வேண்டாம் என்றும் கூறப்பட்ட கடிதம்தான் அனுப்பட்டிருந்து.

17.இதன் பின்னணியில் அரசியல் தொடர்புகள் காணப்பட்டதா?

பதில் - அரசியல் தொடர்புகள் குறித்து ஆராயவில்லை. சந்தேகநபரை பிடிப்ப​திலேயே முழு அவதானம் செலுத்தப்பட்டது.

18. அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைத்திருந்தாக அறிந்தீரா?

பதில் - இல்லை. அவரின் வங்கித் தரவுகளுக்கு அமைய அவ்வாறு சந்தேகிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கவில்லை. அதனாலேயே அவர் மூலம் தகவல்களை அறியும் நோக்கில் அவரை கைது செய்வது குறித்து அவதானம் செலுத்தினோம்.

19. “ஆர்மி மொய்தீன்” என்பவர் பற்றி அறிந்திருந்தீர்களா?

பதில் - அவ்வாறு நினைவில் இல்லை.

20.பாதுகாப்பு சபைக்குச் சென்றுள்ளீர்களா?

பதில் - இல்லை. எனது உயர் அதிகாரிகளே செல்வார்கள்.

21. சஹ்ரான் பற்றி அறிவித்தீர்களா?

பதில் - பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதுகுறித்த தகவல்களை அறிவித்திருந்தேன்.

22. பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தீர்களா?

பதில் - ஆம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் என்னிடத்தில் நடைமுறைச் செயற்பாடுகள் பற்றிய அறிக்கை கோருவார். அப்போது இது குறித்த தரவுகளையும் சமர்பித்துள்ளேன்.

23. மொஹமட் மில்வான் என்பவரின் முகநூல் விவரங்களை ஆராய்ந்தீர்களா?

7 மாதங்களாக இந்தச் செயற்பாடுகள் குறித்து ஆராயாமல் இருந்ததால் பெயர்கள் நினைவில் இல்லை?

24. நீங்கள் கைதானதன் பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு சஹ்ரான் குறித்த விசாரணைகளை முன்னெடுத்ததா?

பதில் - விசாரணைகள் நின்றிருக்காது. எனது வழிநடத்தல் இல்லாமல் போனது குறைபாடாகவே இருந்திருக்கும், எனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள், புலிகள் பற்றியே தேடுதல்களை முன்னெடுத்து வந்தனர். அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களை நான் வெளிநாடுகளுக்கு அனுப்பியும் அறிவுறுத்தல்களை வழங்கியும் பயிற்றுவித்துள்ளேன்.

25. உங்களிடம் இந்த விடயத்தை கையாள உபாய மார்க்கங்கள் எவையும் இருந்தனவா?

பதில் - சஹ்ரான் என்பவர் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைக்குரியவராக உருவெடுப்பார் என்று அதிகாரிகளை அறிவுருத்தியிருந்தேன். அவர் முஸ்லிம் இளைஞர்களை இலக்குவைத்து பிரசாரம் செய்வது குறித்தும் அறிவுறுத்தியிருந்தேன்.

26. சஹ்ரான் வெளியிட்ட வீடியோக்கள் பற்றி கூறுங்கள்?

பதில் - அவரின் வீடியோக்கள் IS ​அமைப்பினரின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாகவே அமைந்திருந்தோடு, அதனை அவருடைய முகநூல் பக்கங்களிலும் இணையப் பக்கங்களிலும் பதிவிடுவார்.

27. அவர் சர்வதேச அமைப்புகளுடன் நேரடித் தொடர்பை பேணியதை அறிய முடிந்ததா?

பதில் - இல்லை. அவ்வாறான அறிவிப்புகள் கிடைத்திருக்கவில்லை.

28. முகநூல் மூலம் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை பேணியதை அறிய முடிந்ததா?

பதில் ​- ஆம். அவ்வாறு அறிந்துகொண்டதன் பின்னர் அவரின் நண்பர்கள் தொடர்பிலும் தகவல் தேடினோம்.

No comments

Powered by Blogger.