Header Ads



முஸ்லிம் சமூகத்தை ஆபத்தானவர்களாகக் காண்பிக்கின்ற, போக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தானவர்களாகக் காண்பிக்கின்ற போக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் நகர திட்டமிடல், நீர் விநியோக மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியிருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் அமைச்சரவையின் ஒரு முஸ்லிம் உறுப்பினரையும், இரு மாகாணங்களின் ஆளுநர்களாகப் பணியாற்றிய முஸ்லிம் அரசியல்வாதிகளையும் பதவி நீக்க வேண்டுமென சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் விடுத்த கோரிக்கையால் தோன்றிய சர்ச்சையால் மற்றைய எட்டு அமைச்சர்களுடன் சேர்ந்து அண்மையில் பதவி விலகிய ஹக்கீம், சென்னை 'த இந்து' பத்திரிகை அலுவலகத்தில் சிரேஷ்ட பத்திரிகையாளர்களுடன் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் மிகவும் அக்கறையுடன் சுயபரிசோதனை ஒன்றை நடத்தும் மனநிலையிலிருக்கிறது. குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி என்று கூறப்படும் சஹ்ரான் காசீமின் தலைமையிலான குழுவிற்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறவே அனுதாபம் கிடையாது. அந்தக் குழு சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தாலும் முஸ்லிம்கள், அவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலென்ன, பொது நிறுவனங்கள் சார்ந்தவர்களாக இருந்தாலென்ன குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகையோருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட முடியாது போகும் பட்சத்தில் வேறொரு சாக்குப்போக்கில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுகின்றனர். இதுவே இன்றைய நிலை என்று ஹக்கீம் கவலை தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள் மீதும், சிறுபான்மை இனத்தவர் மீதும் பீதி கொண்டுள்ள பிரகிருதிகளின் அவதூறான குற்றச்சாட்டுக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே இரு ஆளுநர்களும், ஒன்பது அமைச்சர்களும் கூண்டோடு இராஜினாமா செய்தோம் என்றும் அவர் கூறினார். 

1 comment:

  1. தலைவர் அவர்களே.....

    அமைச்சுப்பதவி தராத உயரிய சமூக அந்தஷ்தும் கௌரவமும் அந்த அமைச்சுப்பதவியை சமூக நலனுக்காகவும் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் தூக்கி எறிந்ததில் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது வரலாற்று நாயகரே.

    தொடர்ந்தும் இந்தப்பாதையில் உறுதியாகவும் துணிவாகவும் முன்னேறுங்கள் - மக்களின் நல்லாசியும் அல்லாஹ்வின் அருளும் பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்கும் இன்சா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.