Header Ads



யாழ்ப்பாணம் கதீஜா கல்லூரி அதிபர், ஜன்ஸி கபூர்

 - பரீட் இக்பால் -

யாழ்.முஸ்லிம் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட 'வேர் அறுதலின் வலி' நூல் வெளியீட்டு விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்தான்  அதிபர் ஜன்ஸி கபூர் ஆவார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த ஒஸ்மா கபூர் - நுமைலா தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர்தான் ஜன்ஸி கபூர் ஆவார்.

ஜன்ஸி கபூரின் தந்தை ஒஸ்மா கபூர் ஆரம்பத்தில் சிறிது காலம் பொலிஸ் உத்தியோகத்தராகவும் பின்னர் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். ஜன்ஸி கபூரின் தந்தை ஒஸ்மா கபூர் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் இலச்சினையை வரைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜன்ஸி கபூர் ஆரம்பக் கல்வியை யாழ் கதீஜா கல்லூரியிலும் இடைநிலை கல்வியையும் உயர் கல்வியையும் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் கற்றார்.

இவர் மாணவர் காலத்திலிருந்து இன்று வரை சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

அகில இலங்கை ரீதியில் ஹிஜ்ரி 15 ஆம் நூற்றாண்டு விழா போட்டியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்; 1979 இல் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆறாம் ஆண்டு மாணவியான ஜன்ஸி கபூர் முதலிடம் பெற்று அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் கரங்களால் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது முதல் கவிதையான 'அன்னை' முதல் சிறுகதையான 'அடையாள அட்டை' தினமுரசு பத்திரிகையில் வெளியானது.

ஜன்ஸி கபூர் கல்வி சம்பந்தமான பல சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், தினகரன் 'கல்வி மஞ்சரி' பகுதியில் எழுதியுள்ளார். தினகரன் பத்திரிகையில் பிரபல இலக்கியவாதி மர்ஹூம் எம்.எச்.எம் ஷம்ஸ் அவர்களின் 'புதுப்புனல்' எனும் இலக்கிய பகுதியில் பல சிறுகதைகள், கவிதைகள் எழுதியதன் மூலம் எழுத்து துறையில் அடையாளப்படுத்தப்பட்டார். இவர் சமூக வலைத்தளங்களிலும் தனது ஆக்கங்கள் மூலம் பிரகாசித்து வருகிறார்.

 ஜன்ஸி கபூர் கணித, விஞ்ஞான ஆசிரியராக அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் (தேசிய பாடசாலை) 01.10.1992 இல் ஆசிரிய நியமனம் பெற்றார். இவர் 1993 இல் தொலைக்கல்வி பயிற்சி நெறியை பெற்றார். 1997 இல் ஜன்ஸி கபூர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியை ஆனார். இவர் 2015 வரை அநுராதபுரம், ஸாஹிரா கல்லூரியிலே விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றியுள்ளார்.

அநுராதபுரம், ஸாஹிரா கல்லூரியில் ஜன்ஸி கபூர் ஆசிரியையாக இருக்கும் போது 2002, 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் வடமத்திய மாகாண தமிழ்மொழிப் பிரிவில் 'சிறந்த ஆசிரியர்' எனும் விருதைப் பெற்றார். 2006 இல் பாட விடயங்களை சொப்ட்வெயர் மூலம் தயாரித்தலில் ஆசிரியர்களுக்கிடையிலான போட்டியில் சான்றிதழ் பெற்றார். 2009 இல் விஞ்ஞான எண்ணக் கருக்களுக்கிடையிலான போட்டியில் சான்றிதழ் பெற்றார். ஐ.டி.துறையிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் அநுராதபுரத்தில் இலக்கிய பங்களிப்பு காரணமாக இவர் 'இலக்கிய விருது' 12.11.2013 இல் பெற்றார்.

இவர் மாணவர் காலத்தில் பெண் சாரணியத்தில் கூடிய ஈடுபாடு உடையவராகக் காணப்பட்டார். இவர் அநுராதபுரத்தில் ஆசிரியராக இருக்கும் பொழுது சாரணர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டியமைக்கு பதக்கம் பெற்றார்.

இவரது இலக்கிய பங்களிப்பு தொடர்பாக தினகரன் மற்றும் சஞ்சிகைகளிலும் நாச்சியா தீவு பர்வீன் எப்.எம் ஸப்ரினா, அன்பு ஜவகர்ஸா, நஸீரா அன்ஸார் ஆகியோர் விமர்சனம் எழுதியுள்ளனர்.

2008 இல் விஞ்ஞான சஞ்சிகையான விநோதம் சஞ்சிகைக்கு ஆசிரியராக பங்காற்றினார். 1999 இல் உலக ஆசிரியர் தினத்தன்று லீவு மிகவும் குறைவாக எடுத்தல் விருது இவருக்கு கிடைத்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாணவர் பருவத்தில் வானொலியில் 'பாட்டும் பதமும்' 'இன்றைய நேயர்' சமையல் குறிப்புக்கள் போன்றவற்றிலும் பங்கெடுத்து சிறப்பித்தார்.

யாழ் முஸ்லிம் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட 'வேர் அறுதலின் வலி' நூல் வெளியீட்டு விழாவிலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தில் வெளிவரும் படிகள் இலக்கிய சஞ்சிகை தொலைச்சுடர் ஆகிய சஞ்சிகைகளில் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் ஜன்ஸி கபூர் இயங்கினார் மேலும் பிறையொளி அநுராகம், தொலைச்சுடர் ஆகிய சஞ்சிகைகளின் மலர் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

ஜன்ஸி கபூர் 2014 இல் கல்விமாணியும் 2019 இல் முது கல்விமாணியும் யாழ் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

 ஜன்ஸி கபூர் 29.04.2015 இல் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கும் கதீஜா கல்லூரிக்கு அதிபராக பதவியேற்றார். வளங்கள் குறைந்த நிலையிலும் பல சவால்களுக்கு மத்தியிலும் கதீஜா கல்லூரியின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டார் என்றால் மிகையாகாது.

கதீஜா கல்லூரியின் நிரந்தர புதிய கட்டிடம் கூடிய வரையில் முடிவடைந்ததனால் இந்த வருடத்திற்குள்; கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அதிபர் ஜன்ஸி கபூர் எண்ணியுள்ளார்.

இவர் இணையத்தின் 'வலைப்பூ' பகுதியில் கவிதாயினியில் 400 இற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.

ஜன்ஸி கபூர் கவிதை புனைவதிலும், சிறுகதை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர். இவரது இலக்கியப் படைப்புக்களை நூலுருவில் வெளியிட ஒஸ்மா கபூர் ஆசைப்பட்டும், அது இன்னும் நிறைவேறாததை எண்ணி அவர் மகள் கண்ணீர் மல்க நினைவுபடுத்தினார். ஜன்ஸி கபூர் இலக்கிய படைப்பின் நூலுருவை வெளியிட உறுதி பூண்டுள்ளார். 

அதிபர் ஜன்ஸி கபூர் கூடிய விரைவில் கதீஜா கல்லூரியின் புதிய கட்டிடத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு மென்மேலும் பாடுபட அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

No comments

Powered by Blogger.