Header Ads



இஸ்லாமிய பாடப்புத்தகங்கள் குறித்து, முழு விசாரணை நடத்த வேண்டும் - பந்துல

முஸ்லிம் பிள்ளைகளுக்கு சமயம் அல்லது வேறுதுறைகள் சம்பந்தமாக கற்பிக்கும் புத்தகங்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று -23- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த நடுநிலையான நபர் ஒருவர், பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் கல்வியமைச்சினால் விநியோகிக்கப்படுவதாக கூறினார்.

அது நடக்கக் கூடியது. கல்வியமைச்சு என்ற வகையில் 45 இலட்சம் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை உருவாக்கும் பொறுப்பு உள்ளது.

பாடசாலை பாடப்புத்தகங்களை தயாரிக்கும் ஒரு முறையை கையாள வேண்டும் என்பதை முன்னாள் கல்வி அமைச்சர் வகையில் கூற கடமைப்பட்டிருக்கி்ன்றேன் என நினைக்கின்றேன். நான் கல்வியமைச்சராக பணியாற்றிய போது, தற்போதைய கல்வியமைச்சின் மைத்துனரே கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் ஆணையாளராக பணியாற்றினார்.

10 இலட்சத்து 43 பாடப்புத்தகங்கள் வருடாந்தம் அச்சிடப்படுகிறது. பெருந்தொகையான புத்தகங்கள், இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

பாடப்புத்தகங்களை தயாரிக்கும் போது கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் ஆணையாளர் எழுத்தாளர் குழு ஒன்றை நியமிப்பார். இந்த குழுவில் கல்வியமைச்சின் அதிகாரிகள் மற்றும் தகுதியான வெளிநபர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த குழுவினர் தயாரிக்கும் புத்தகங்கள் தொடர்பான விடயங்களை சரி பார்க்க தொகுப்பு குழு ஒன்று தனியாக நியமிக்கப்படும். மொழி பிழைகள் இருக்கின்றதா என்பதை பரிசோதித்த பின்னர், பாடப்புத்தகங்கள் அச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

புத்தங்களை படித்து பார்க்க கல்வி அமைச்சருக்கு சந்தர்ப்பம் இருக்காது. புத்தகங்களை வெளியிட்ட பின்னர் அதில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும். குறிப்பாக ஊடகங்களில். குறிப்பாக நான் கல்வியமைச்சராக பதவி வகித்த போது கத்தோலிக்க மக்களின் மனம் புண்படும் படியான ஒரு விடயம் விவசாய பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை நாங்கள் தலையீட்டு திருத்தினோம்.

இதேபோல் முஸ்லிம் பிள்ளைகளுக்கு சமயம் அல்லது வேறு துறைகள் சம்பந்தமாக கற்பிக்கும் புத்தகங்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி, பிள்ளைகளின் மனத்தில் அடிப்படைவாதம் படியாதபடி கல்வியமைச்சர் உடனடியாக தலையீட்டு தனது கடமையை செய்ய வேண்டும். குழு ஒன்றை நியமித்து அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அண்மையில் சாட்சியமளித்த ஒரு இஸ்லாமியர், பாடசாலை இஸ்லாம் பாடப்புத்தகத்தில் இஸ்லாத்தில் இருந்து மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. நீங்களெல்லாம் எங்கிருந்துரா வாரிங்க

    ReplyDelete

Powered by Blogger.