Header Ads



முஸ்லிம் வாக்குகளை பெற, தேர்தல் அறிவிக்கப்படும்வரை தொடரவுள்ள இனவாதம் - மரிக்கார் எச்சரிக்கை

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் அறிவிக்கப்படும் வரை நாட்டில் அடிப்படைவாதம் மற்றும் இனவாத பிரச்சினைகள் முடிவுக்கு வராது எனவும் சில அணிகள் தமது அரசியல் இலாபத்திற்காக அதனை தொடர்ந்தும் முன்னடுத்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் 10 கிராமிய வீதிகளை புனரமைக்கும் அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில் இருந்தே நாட்டில் நடந்த பல்வேறு செயற்பாடுகள் மற்றும் கலாசார மாற்றங்கள் நடந்துள்ளன. எமது அரசாங்கத்தின் காலத்தில் அல்ல.

உண்மையில் எமது அரசாங்கத்தில் முதுகெலும்பு தொடர்பாக பிரச்சினை இருக்கின்றது. இதன் காரணமாக ஒருவருக்கு ஒருவர் நாடகம் ஆடி வருகின்றனர்.

இதனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள அடிப்படைவாத மற்றும் இனவாத பிரச்சினைகள் ஒக்டோபர் மாதம் வரை முடிவுக்கு வராது. இதனை அரசாங்கத்தினாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. சில அரசியல் அணிகள் நாடு, இனம் மீது அக்கறை இருப்பதாக காட்டுவதற்கு நாட்டிற்குள் சதிதிட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நீங்கள் ஆதரித்து ஆட்சிக்கு கொண்டு வந்த அரசாங்கத்தில் கூட உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முஸ்லிம் மக்களுக்கு காரணத்தை கற்பிக்க முயற்சித்து வருகின்றனர்.

எங்களிடமே உங்களுக்கு பாதுகாப்பு உள்ளது, இதனால், 20 வீத முஸ்லிம் வாக்குகளாவது கிடைக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை இந்த பிரச்சினை தொடரும். இது எமது அரசாங்கத்திற்கு புரியவில்லை எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.