Header Ads



சஹ்ரானினால் சுடப்பட்ட தஸ்லீமுடைய, தற்போதைய நிலை என்ன..?

அவரது மனைவியின் பேட்டிஇலங்கையில் கிறிஸ்தவ தேவாயங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஈஸ்டர் நாளில் நடந்த குண்டுவெடிப்புகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட போது, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நாட்டில் பிரச்சினை இருப்பதாக சிலர் உணர்ந்தார்கள். அவ்வாறு உணர்ந்தவர்களில் ஒருவர் முகமது ரஸாக் தஸ்லீம் என்று பிபிசியின் செக்குண்டர் கெர்மானி கூறுகிறார்.

மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் முகமது ரஸாக் தஸ்லீமின் வலி அவருடைய முகத்தில் பிரதிபலிக்கிறது. அவருடைய உடலின் இடதுபாகம் முழுக்க செயலிழந்துவிட்டது. ஆனால் தனக்கு ஆதரவாக நிற்கும் தன்னுடைய மனைவி மற்றும் மைத்துனரை வலது கையால் பிடித்துக் கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.

அவருடைய மனைவி பாத்திமா, அவருடைய தலையில் கைக்குட்டை வைத்து மூடுகிறார். அவருடைய மண்டை ஓட்டின் ஒரு பக்கம் குழி விழுந்தது போல ஆகிவிட்டது. மார்ச் மாதம் அந்த இடத்தில் அவர் சுடப்பட்டிருக்கிறார். அப்போதிருந்து அவரால் பேச முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை.

ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடந்த தொடர் தற்கொலைப் படை தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாத குழுக்களின் இலங்கை தீவிரவாத குழுக்களின் தாக்குதலில் முதலில் சிக்கியவர்களில் ஒருவர் தஸ்லீம் என்று காவல் துறை நம்புகிறது.

தாக்குதல் பிரிவின் தலைவர் சஹரான் ஹாஷிம் உத்தரவின் பேரில் இவர் தாக்கப் பட்டிருக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

குண்டுவெடிப்புகளுக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மத்திய இலங்கை நகரைச் சேர்ந்த, 37 வயதான துடிப்பான உள்ளூர் அரசியல்வாதியான தஸ்லீம், தீவிரவாதிகள் பற்றி புலனாய்வு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்து செயல்பட்டிருக்கிறார்.

இலங்கையில் அடிப்படைவாத சக்திகள் தலையெடுப்பதைத் தடுக்க இஸ்லாமிய சமுதாயத்தினர் எந்த அளவுக்கு முயற்சி செய்தனர் என்பதற்கும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னதாக தரப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளை அரசு நிர்வாகம் திரும்பத் திரும்ப உணரத் தவறிவிட்டது என்பதற்கும், தஸ்லீம் குறித்த விவரங்கள் அத்தாட்சியாக உள்ளன.

தலைநகர் கொழும்புவில் இருந்து சில மணி நேர பயண தூரத்தில் உள்ளது மாவனெல்ல நகரம். பசுமையான வயல்வெளிகள் சூழ்ந்த நகரம். புத்த மதத்தவர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்தப் பகுதியில் பல புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. பதற்றத்தை ஏற்படுத்தி, சமூக மோதல்களை உருவாக்கும் முயற்சியாக அந்தச் சம்பவங்கள் நடந்திருப்பதாக அதிகாரிகள் இப்போது நம்புகிறார்கள்.

மாவனெல்லா நகர கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார் தஸ்லீம். தேசிய கேபினட் அமைச்சருக்கு ஒருங்கிணைப்பு செயலாளராகவும் பணிபுரிந்தார்.

அவருடைய மனைவி, 3 இளம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை மாவனெல்லா நகருக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவர்களுடைய சிறிய வீட்டில் நான் சந்தித்தேன். தன்னுடைய கணவரைப் பற்றி பாத்திமா கூறிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கூரையின் மீது தேங்காய்கள் விழுந்து சப்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

தங்கள் சமூகத்தில் பிறருக்கு தானாக முன்வந்து உதவி செய்யக் கூடியவர் தஸ்லீம் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்களுக்கு உதவிகள் திரட்டுவதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே, புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட போது, அதுபற்றி புலனாய்வு செய்ய அவர் முயற்சித்ததில் வியப்பு ஏதும் இல்லை.

``வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அவர் எப்போதும் கூறிக் கொண்டிருப்பார்.''

``இதுபோன்ற செயல்பாடுகளை எங்கள் மதம் மன்னிப்பதில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் சொல்வார்.''

பலரை காவல் துறையினர் கைது செய்தபோதிலும், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் சாதிக், ஷாகித் அப்துல்-ஹக் ஆகிய சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, ``தீவிரமாக தேடப்படும்'' நபர்கள் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் அவர்களுக்குப் பங்கு இருப்பதாகக் கூறப்படுவது பற்றி உறுதி செய்யப்படவில்லை. இன்னும் விசாரணை தொடங்கவில்லை. ஆனால் சாதிக் அப்துல்-ஹக் 2014ல் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தொடர்புடைய தீவிரவாத குழு தலைவர்களை சந்தித்திருக்கிறார் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

``மாவனெல்லா நகருக்கு அருகே ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவரை நான் சந்தித்தேன். சந்தேகிக்கப்படும் சகோதரர்களுக்கு மிக நெருக்கமானவர் அவர். தன்னுடைய பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை. ஆனால், ``இலங்கை தேசம் அல்லாவின் தேசம், வேறு யாரையும் வழிபடக் கூடாது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது இஸ்லாமிய வரி கட்ட வேண்டும். என்று அறிவிக்கப் போவதாக அந்த நபர் கூறினார்.''

அந்தச் சகோதரர்கள் தீவிர மத நம்பிக்கையுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆன்மிக மற்றும் போராளி நிலைகளில் ஜிகாத் கடமைகள் ஆற்ற வேண்டியிருப்பதாக அடிக்கடி அவர்கள் பேசுவதாக அவர்களின் நண்பர் கூறியுள்ளார்.

அவர்களுடைய சகோதரர் முறையிலான உறவு கொண்டுள்ள அப்வான் அப்துல் ஹலீம், முஸ்லிம் மாணவர் அமைப்பு ஒன்றில் முன்னணி நிர்வாகியாக இருக்கிறார். ``இஸ்லாம் மதத்தில் வன்முறையான, தீவிரவாத போக்குகள் ஏற்கப்படுவதில்லை'' என்று அடிக்கடி அவர்களிடம் வாக்குவாதம் செய்ததாக என்னிடம் ஹலீம் கூறியிருக்கிறார். அந்த சகோதரர்கள் இருவரும் அந்த அமைப்பில் இருந்து 2015-ல் நீக்கப் பட்டனர்.

அருகில் உள்ள கண்டி நகரில் 2018ல் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து புத்த மதத்தவர்கள் தாக்கியபோது, ஏற்பட்ட சமூக கலவரங்களில் அவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்று ஹலீம் தெரிவித்தார்.

``அவர்கள் நமது உயிர்களைப் பறிக்கிறார்கள், நமது சொத்துகளை அபகரிக்கிறார்கள். நாம் ஏதாவது செய்தாக வேண்டும்'' என்று சாதிக் அப்துல் ஹக் கூறியதாக ஹலீம் குறிப்பிடுகிறார்.

அப்துல் ஹக் சகோதரர்கள் தலைமறைவாகிவிட்ட பிறகு, அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தஸ்லீம் ஈடுபட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினருடன் அவர் தொடர்பில் இருந்தார். அந்தச் சகோதரர்கள் பதுங்கி இருப்பதாகக் கருதப்பட்ட அடர்ந்த வனப் பகுதிக்குள் காவல் துறையினருடன் இவரும் ஒரு முறை நடந்தே சென்றிருக்கிறார்.

புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கு புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருப்பதாக கடந்த ஜனவரி மாதம் புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். 100 மைல்கள் தொலைவில் விவசாய நிலத்தில் ஏராளமான வெடிப்பொருள்கள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக அவர்கள் கூறினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் வட மேற்கில் தென்னந்தோப்பில் உள்ள அந்த இடத்துக்கு, புலனாய்வுத் துறையினருடன் தஸ்லீம் சென்றிருக்கிறார். அங்கே 100 கிலோ வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள், கூடாரங்கள், கேமரா ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

வீடு திரும்பிய போது அவர் கவலையுடன் இருந்ததாக தஸ்லீமின் மனைவி தெரிவித்தார். ``அங்கே இன்னும் நிறைய வெடி மருந்துகள் இருக்கும்'' என்று தஸ்லீம் கூறியிருக்கிறார். ``சமுதாயமாக நாம் ஒன்று சேர்ந்து, இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவ்வளவு பெரிய அளவில் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது, ஜிகாதி தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருக்கும் அபாயத்தை அதிகாரிகளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். ஆனால், நான்கு பேர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக நீண்ட காலமாக பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் நாட்டில், இஸ்லாமிய வன்முறையால் ஆபத்து ஏற்படும் என்பது அதிக முன்னுரிமை பெறாமல் போய்விட்டது.

அந்த விவசாய நிலத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுக்கும், தாக்குதல் குழு தலைவர் சஹரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலைப் படையினர் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக இப்போது தெரிய வந்துள்ளது.

ஹஷிம் இலங்கையின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மத குரு. தாக்குதல்களுக்கு முன்பு அவரும் தீவிரவாதி என அடையாளம் காணப் பட்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் தனது சொந்த நகரிலும், அவர் சென்ற வேறு இடங்களிலும், மாவனெல்லாவுக்கு அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்ற போதும், பிரதான இஸ்லாமிய குழுக்களிடம் இருந்து விலகியே இருந்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலான விடியோக்களை பதிவேற்றம் செய்பவர் என நன்கறியப் பட்டிருக்கிறார். 9/11 தாக்குதல்களின் படமும் அதில் இடம் பெற்றுள்ளது.

ஆன்லைன் வழிபாடுகளில் இந்த அளவுக்கு வெறுப்புணர்வு இருப்பது பற்றி தாமும், கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதுபற்றி புலனாய்வுத் துறையினரிடம் தெரிவித்ததாகவும், இலங்கை முஸ்லிம் கவுன்சில் துணைத் தலைவர் ஹில்மி அஹமது கூறினார்.

ஆனால் அதிகாரிகளால் ஹாஷிமை கண்டுபிடித்து கைது செய்ய முடியாமல் போய்விட்டது. ``ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஹாஷிம் அச்சுறுத்தலாக மாறுவார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை'' என்று அஹமது கூறுகிறார்.

இலங்கையில் பயங்கரமான தாக்குதல் நடத்த ஹாஷிம் திட்டமிட்டிருக்கிறார் என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது. வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய பாதையில் தஸ்லீம் குறுக்கிடுவதாக ஹாஷிம் நினைத்திருக்கிறார் என்றும் தெரிகிறது.

``உளவாளியாக'' செயல்படும் தஸ்லீமை கொன்றுவிடுமாறு ஹாஷிம் உத்தரவிட்டதாக அவருக்கு நெருக்கமான சகாக்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று இலங்கை காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு மாதம் முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் அதிகாலையில் தஸ்லீமின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் நுழைந்திருக்கிறார். அவர் மனைவி மற்றும் கடைசி குழந்தையுடன் படுக்கையில் படுத்திருந்தார். துப்பாக்கியுடன் வந்தவர், அவருடைய தலையில் ஒரு முறை சுட்டிருக்கிறார்.

``செல்போன் சார்ஜர் வெடித்துள்ளது என்று முதலில் நான் நினைத்தேன். ஆனால் அதைப் பார்த்தபோது சார்ஜர் நன்றாக இருந்தது'' என்று டஸ்லிமின் மனைவி என்னிடம் தெரிவித்தார். ``பிறகு அவரை எழுப்புவதற்கு நான் முயற்சி செய்தபோது, துப்பாக்கி வெடிமருந்தின் வாசம் வீசியது.. அவரை தட்டியபோது, அவர் சுயநினைவில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அவர் இறந்துவிட்டதாக நினைத்தேன்.''

தஸ்லீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதலில் அவர் உயிர் தப்பியிருக்கிறார். ஆனால் அவர் முழுமையாக குணமடைவாரா என்று உறுதியாகத் தெரியவில்லை.

ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான புலனாய்வில், இலங்கையின் ராணுவ கமாண்டர் லெப். ஜெனரல் மகேஷ் செனநாயகே முக்கிய பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது, தென்னந்தோப்பில் வெடிமருந்துகள் பதுக்கியது, தஸ்லீம் சுடப்பட்டது என அனைத்து சம்பவங்களிலும் ``ஒரே குழுவினருக்கு'' தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப் பட்டிருக்கிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

முந்தைய சம்பவங்களால், ஜிகாதி தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை அதிகாரிகள் உணர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். அதற்கு மாறாக இந்திய பாதுகாப்புப் படையினரின் தகவல்களை, முந்தைய நாட்களில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இரு துறைகளுக்கும் இடையில் ``புலனாய்வுத் தகவல்கள் பகிர்தலில்'' உள்ள பிரச்சினைகளால் இது ஏற்பட்டது என்று இதை ராணுவ கமாண்டர் குறிப்பிடுகிறார்.

காயமடைந்துள்ள நிலையிலும், தன்னிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை தஸ்லீம் புரிந்து கொள்கிறார் என்றும், எப்போதாவது பதிலை எழுதிக் காட்டுகிறார் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல் பற்றி அவருக்குத் தெரிவித்த போது, ``இதுபோன்ற சம்பவம் நடக்கலாம் என்று உன்னிடம் நான் சொன்னேன்'' என்று தஸ்லீம் எழுதிக் காட்டி அழுதார் என்று அவருடைய மனைவி தெரிவித்தார்.

தஸ்லீமின் தியாகம் பற்றி அவருடைய மனைவி பெருமைப்படுகிறார். ``உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். வாழ்க்கை முடிந்த பிறகு நாம் சொர்க்கத்துக்கு செல்வோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் உதவி செய்திட வேண்டும். நமது மதம் அதைத்தான் நமக்கு கற்பிக்கிறது'' என்று அவர் எங்களிடம் சொல்வார் என்று பாத்திமா தெரிவிக்கிறார்.

3 comments:

  1. thasleem is a real identity of majority of sri lankan muslims

    ReplyDelete
  2. ALLAH BLESS YOU MY DEAR BROTHER, I WILL INCLUDE IN MY DUA ALWAYS FOR YOUR HEALTHY......

    ReplyDelete
  3. So Intha seyadpadu ilangai pulanivivu padaikku theriyamal poi vittatatha or therinthum theriyamal nadikkirahala. Ithu Indian ROW,Israelian Mosat Sri Lankan Sinhala extremist ahiyorin, ilangai unmai Muslims halukkana sathi.
    Ivarhal seihinra sathi haliai seyyattum
    Sathi harar halukku ellam sathi karanana antha Allah vai ivarhal payanthu kollattum

    ReplyDelete

Powered by Blogger.