Header Ads



புலிகள் பலவந்தமாக நிறுவியதே, கல்முனை உப பிரதேச செயலகம் - பாராளுமன்றில் ஹரீஸ் முழக்கம்

தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -20- பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்லிம்களும், 23 வீதமான தமிழர்களும் வாழ்கின்றனர். 1989 இல் யுத்தம் நடைபெற்றபோது எல்.ரி.ரி.ஈ. யினால் பலவந்தமாக உப பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது. தமிழ் மக்களின் நிர்வாகம் இதனூடாக மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்முனையில் உள்ள முஸ்லிம் மக்களின் கிராமங்கள், வர்த்தக நிலையங்கள், காணிகள், பெறுமதியான சொத்துக்கள் பலவந்தமாக இந்தப் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டன. இதனால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. 

முப்பது வருடங்களாக ஆட்சிசெய்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்களிடம் கல்முனை முஸ்லிம்களுக்கான அநீதியை நீக்கி நீதியை வழங்குமாறு கோரினோம்.

இது தொடர்பில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன, முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை நிர்ணய குழுவை நியமித்து அதனூடாக நிரந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இணங்கியிருந்தோம். இந்தக் குழு இது தொடர்பான வேலைகளைச் செய்துவருகிறது. 

அப்படியிருக்கையில் கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உண்ணாவிரதப் போராட்டம் நான்கு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. சுபத்திராராம தேரர் கலந்துகொண்டு இதுவரை உண்ணாவிரதத்தை நடத்தி வருகின்றார். கல்முனை நகரில் அங்குள்ள முஸ்லிம்கள் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அவர்களும் ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதனால் இனரீதியாக நிறுவனங்கள் செயற்பட்டால் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பாக அமையும். நிலத்தொடர்பற்ற இடங்களை ஒன்றிணைத்து உப காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார். 

இனரீதியாக பிரதேச செயலகம், மாவட்ட செயலகங்களை அமைக்க முடியுமா? நிலத்தொடர்புள்ள இடங்களை அடிப்படையாகக் கொண்டு உப பிரதேச செயலகத்தை அமைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு, சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி எம்மை அழுத்தத்தினுள் தள்ளுகின்றது. கல்முனை முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் அனைவரையும் காட்டிக்கொடுத்துள்ளனர் என்றார்.

1 comment:

  1. நீங்கள் இனரீதியாக பிரிய வேண்டாம் உண்மையில் அது தவறு. உப செயலகத்தை கல்முனை பி.செயலகம் என மாற்றுங்கள் மாவட்டத்திலுள்ள தமிழில் வேலைசெய்யக்கூடிய சிரேஷ்ட பி.செயலாளர் ஒருவரை நியமியுங்கள் அவர் எந்த இனத்தவராக இருந்தாலும் பரவாயில்லை. நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.