Header Ads



சவால்களுக்கு முன்னால், மெளனித்துப் போயுள்ள உம்மத்து

வாழ்க்கையில் தனி மனிதர்களாக, குடும்பங்களாக, சமூகங்களாக நாங்கள் இன்னோரன்ன சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம், சவால்ககளுக்கு முறையாக முகம் கொடுப்பது தான் வாழ்க்கை.

வெளியிலிருந்து விடுக்கப் படும் சவால்கள் கண்டு நிலை குழைந்து போவது அல்லது அஞ்சுவது, நம்பிக்கை இழந்து விடுவது உண்மை விசுவாசிகள் பண்பாக இருக்க முடியாது.

சவால்களைக் கண்டு அஞ்சவோ நம்பிக்கை இழக்கவோ வேண்டிய அவசியமில்லை, மாறாக அவற்றிற்கு பொறுப்புணர்வுடன் நாம் முகம் கொடுக்க வேண்டும்.

நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழும் எமது உறவுகள் குறித்த கரிசனை போன்று எதிர்கால சந்ததியினர் குறித்தும் நாம் அதிகபட்ச அக்கறை கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலக நாடுகளின் அமைதி சமாதனத்திற்கு எதிரான தீய சக்திகளாக காட்டுவதற்கான பரப்புரைகள் “இஸ்லாமோபோபியா” எனும் பாரிய பில்லியன் டாலர் வேலைத் திட்டத்தினூடாக இஸ்லாத்தின் எதிரிகளால் சர்வதேச அரங்கில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

எமது அழகிய தேசத்தின் சமாதான சகவாழ்வை இலக்கு வைத்து இன்று கூலிப் படைகள் களமிறக்கப் பட்டுள்ளனர், சிலர் அறிந்தும், பலர் அறியாமையினாலும் அந்த சர்வதேச சதி வலைப்பின்னலில் சிக்கியுள்ளனர்.

மேற்படி சதி வலைகளில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதனை விடவும் பெரும்பான்மை சமூகங்களை பாதுகாக்கின்ற மிகப் பெரும் பணி எம்மீது சுமத்தப் பட்டுள்ளது.

இன்றைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரே கவலை அல்லது அச்சம், சவால்களுக்கு முன்னால் நாங்கள் வெவ்வேறு அணிகளாக பிரிந்திருப்பதும், உள்வீட்டில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும் தான்.

எமது அரசியல் தலைமைகள் என்ன செய்கிறார்கள் ஏனைய_சிவில், சன்மார்கத் தலைமைகள் என்ன செய்கிறார்கள் கூட்டாக என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களையும் நாம் அவதனித்துக் கொண்டு எம்மால் இயன்ற ஆலோசனைகளை ஓத்துழைப்புக்களை வழங்குவோம். தற்போதைய நிலையில் சூழ்நிலையின் கைதிகளாக அவர்களால் இயன்றதை செய்ய முயற்சிக்கின்றமை உண்மைதான்,_அவர்களுக்காக நாம் பிரார்தித்துக் கோள்வோம்.

ஊர் மட்டங்களில் கூட நாம் நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்று கூடிப் பேசுகின்ற மஷூரா செய்கின்ற ஒழுங்குகளையாவது செய்யாது ஒருவகை ஸ்தம்பித நிலையில் இருக்கின்றோம்.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய மற்றும் சமூக அமைப்புக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் தமது அறிவு, பெற்ற பயிற்சிகள், சமூக கரிசனை, தலைமைத்துவ பண்புகள், கட்டுக் கோப்பு என்பவற்றை பிரயோகித்து அடிமட்ட (ஊர்) தலைமைத்துவ கட்டமைப்புகளை உருவாக்கி பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொழும்பில் உள்ள தலைமைகள் அல்லது மஸ்ஜித் பரிபாலனங்கள் தான் இவற்றை வந்து செய்து தர வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது, ஊரில் உள்ள அமைப்புக்கள், கழகங்கள், புத்திஜீவிகள் ஒன்றாக அமர்ந்து பேசும் நிலை இன்னும் வரவில்லை.

தொழுவதற்கு ஒன்று கூடும் நாம், நோன்பு காலங்களை ஹயாத்தக்க ஒன்று கூடும் நாம், சகாத் சதகாவை சேர்த்து பகிர்ந்தளிக்க ஒன்று கூடும் நாம், ஜும்மாவிற்கு ஒன்று கூடும் நாம் எமது இருப்பு பாதுகாப்பு குறித்த அடிப்படை அம்சத்திற்காக ஒன்று கூடுவதை ஏன் பர்ளு ஐன் ஆக பார்க்காது வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஐக்கியமும், ஒழுங்கும், கட்டுக்கோப்பும், கூட்டுப் பொறுப்பும் இல்லாத ஒரு சமூகம் ஏனைய சமூகங்களை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. வெளியில் இருந்து வரும் சவால்களை விடவும் உள் வீட்டில் இருந்து வரும் சவால்களே எமக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Share, பகிர்வதோடு நின்று விடாமல் உயர் பணியில் உங்கள் ஊரில் பங்காளிகளாகவும் மாறி விடுங்கள். ஒவ்வொருவரும் சோதிக்கப் படுகிறோம்.

No comments

Powered by Blogger.