Header Ads



இலங்கையில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்லிலும், செயலிலும் கடுங்கவனமாக இருக்கவேண்டும்...!

இலங்கையில் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள்.

இதில் 70% (14,000,000) சிங்கள பெளத்தர்களும், 15% (3,000,000) தமிழர்களும், 10% (2,000,000) முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்று அண்ணளவாக ஒரு ஆய்விற்காக வைத்துக்கொள்வோம்.

இதில் 70% என்பது ஒரு கோடி நாற்பது லட்சம் ( 14,000,000) மக்களை குறிக்கும்.

இந்த மக்கள் தொகையில் 20% மக்கள் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்களை நம்புகின்ற அப்பாவி மக்கள் என்று வைத்துக்கொண்டாலும் அதன் எண்ணிக்கை இருபத்தி எட்டு லட்சம் ( 2,800,000)!

இந்த தொகை இலங்கையில் வாழுகிற ஒட்டு மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையினை விட அதிகமாகும் என்ற உண்மையினை முதலில் புரிந்து கொள்ளாமல் நமக்கு எதிரான போலிப்புனைவுகளை தகர்த்து விட முடியாது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 1915 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து வெறுப்பு பிரச்சாரங்களும், நெருக்குவாரங்களும் இருந்து வருவதாக வரலாறு சொல்கிறது.

அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அனைத்துமே ஏதாவதொரு அரசியல் காரணத்தின் பின்புலத்தில் எழுந்ததாகவே இருக்கின்றன.

2014 அளுத்கமை கலவரங்களின் பின்னர் பெருந்தேசியவாத பரப்பில் உக்கிரமடைந்த முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்கள் அண்மைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பல்வேறு பரிமாணங்களில் வலுவடைந்துள்ளன.

சாதாரணமாக இருந்த முஸ்லிம் வெறுப்பு அலையானது அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் எவ்வாறு பெருக்குமென்று ஒரு கணிப்பு இருந்ததோ அந்தக்கணிப்பையெல்லாம் ஒரே இரவில் தூக்கி விழுங்கி விட்டது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!

இந்த நிலையில் உருவாகியுள்ள நெருக்குவாரங்களை எதிர்கொள்வதில் இலங்கை முஸ்லிம் சமூகம் கடுமையாக போராடி வருகிறது.

அரசியல் தலைமைகள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை இதில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுக்கிறார்கள்.

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது என்பதை நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த இக்கட்டான நேரங்களில் பொறுப்புள்ளவர்கள் பொதுவெளியில் தெரிவிக்கும் சில பொறுப்பற்ற கருத்துக்களை இனவாத ஊடகங்கள் ஊதிப்பெருப்பிக்கின்றன.

அதனை விட பலமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துக்கள் வேறு முகாம்களில் தெரிவிக்கப்பட்டாலும் அவை வீரவசனங்களாக போற்றப்படுகின்றன.

அவர்களும் பேசுகிறார்கள்தானே நாங்கள் பேசினால் என்ன என்ற வாதம் இந்த சூழ்நிலையில் புத்திசாலித்தனமானது அல்ல.

இது ‘அ’ என்ற எழுத்தை ‘உ’ என்றும் சும்மா கிடந்த அப்பாவியை பயங்கரவாதி என்றும் சொல்கிற காலம்.

அதற்குள்ளும் மற்ற முகாம்களில் இருந்து பார்த்தால் பெருத்த நியாயங்கள் இருக்கின்றன.

யாரும் எதிர்பாராத ஒரு பொழுதில் அதுவும் செத்த பாம்பு போல கிடந்த இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து எட்டு பேர் தற்கொலைக்குண்டுதாரிகளாக மாறி 250 இற்கும் மேற்பட்டோரின் உயிரிழப்பிற்கும் பல கோடி சொத்துக்களின் சேதத்திற்கும் காரணமாக ஆகியிருக்கும் போது......

இந்த சமூகத்தின் மீது அச்சம் வராதா? சந்தேகம் வராதா?

நாம், ‘அது நான் இல்லை அவன்’ என்று காட்டிக்கொடுத்து விட்டு தப்பிக்கலாம். அல்லது அது வெறும் நூறு இரு நூறு நபர்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்ற யதார்த்தத்தை புரிந்திருக்கலாம். 
ஆனால் வெளியில் இருக்கிற முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு இவை தெரியாது!

அவர்களுக்கு நாம் இன்னும் புதிராகவே இருக்கிறோம். பாரம்பரிய முஸ்லிம், சூபி, தவ்ஹீத், தப்லீக் என்று எந்த கூடாரத்திற்குள் இருந்தாலும் அதனைப்பற்றிய தெளிவு வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது!

மாற்றி யோசித்து பாருங்கள்.

பெளத்த பீடங்களின் நிக்காயாக்களை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? கிறிஸ்தவ மதத்திற்குள் இருக்கும் கத்தோலிக்க, மெதடிஸ்த மற்றும் பல சபைகளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இந்து சைவ வேறுபாடுகளை பற்றி எந்தளவு தூரம் தெரியும்?

அவர்களுக்குள் இருக்கும் அரசியலை, கருத்தியலை, உள்ளக திட்டங்களை பற்றி பரஸ்பர இனங்களுக்கு மத்தியில் பெரும்பாலும் தெளிவுகளே இல்லை!

அது போலதான் ஏனைய இனங்களும் நம்மை புதிராக பார்க்கிறார்கள்.

நீங்கள், நானில்லை அவன்தான் என்று சிம்பிளாக தப்பித்துக்கொள்வதை ஏற்க மறுக்கிறார்கள்.

ஹலால் சான்றிதழில் மாத்திரம் ஒரு காலத்தில் சுற்றிக்கொண்டிருந்த சிக்கல் இன்று பள்ளிவாயல், மத்ரசா, பெண்களின் ஆடை என்று வளர்ந்து இப்போது அடிப்படை உரிமை வரை வந்து நிற்கிறது.

உயிர்த்த ஞாயிறில் வெடித்த குண்டுகளின் தூசுகளும், புகைகளும் இன்னும் அடங்கிப்போகவில்லை.

Need to wait for long time until these dust settle என்றே பலதரப்பட்ட அறிவுஜீவிகளும் சொல்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பன வழமைக்கு வர கன காலம் போகலாம்.

அதே போல இனங்களுக்கிடையே முஸ்லிம்கள் தொடர்பில் ஓரளவு புரிந்துணர்வு மீள அதை விட காலம் எடுக்கலாம்.

குண்டு வெடிப்பிற்கு அடுத்த நாட்களில் பொது இடங்களில் தாடி வைத்த அறிமுகமில்லாத சக முஸ்லிம் மனிதனை கண்டு மற்ற முஸ்லிம்கள் அச்சமும் சந்தேகமும் கொள்ளும் நிலமையே இருந்தது. இப்போதும் அந்த அச்சம் ஓரளவு உள்ளது.

அப்படியென்றால் ஏனைய சமூகங்களுக்குள் இந்த அச்சம், சந்தேகம் எந்தளவு வீரியமாய் பரவியிருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

ஆகையால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி வருங்காலங்களிலாவது தனது சொல்லிலும், செயலிலும் கடுங்கவனமாக இருக்கவேண்டும்.

நமது செயற்பாடுகள் பொது நலவுகளுக்கு கேடாக, இன முரண்பாட்டிற்கு எண்ணெய் ஊற்றுவதாக இருந்துவிடக்கூடாது.

அடுத்தவர்கள் செய்கிறார்கள்தானே நாம் செய்தால் என்ன என்ற வறண்ட நியாயம் நமக்கு விமோசனத்தை தராது.

நமது எதிர்வினைகளும் நகர்வுகளும் புத்திசாலித்தனமானதாக, ராஜதந்திரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த புகையிலிருந்து வெளியில் வரலாம்.

- Mujeeb Ibrahim -

1 comment:

Powered by Blogger.