June 05, 2019

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத் தேடலுக்கான, அடிப்படைக் காரணியாக அமைந்த பேரினவாதங்கள்

தனது வாழ்வுச் சூழலில் தனக்குரிய வளங்களையும் வாய்ப்புகளையும் அனுபவிப்பதற்கான உரிமை, தனது சுயத்தைப் பேணுவதற்கான உரிமை ஒரு சமூத்திற்கு மறுக்கப்படுகின்ற போது, அச்சமூகம் அங்கு தனக்குள்ள உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தனது பூர்வீகத்தை ஆதாரமாகக் கொள்கிறது. தான் ஒரு தனியான சமூகம் என்றும், ஏனைய சமூகங்களைப் போன்று தமக்கும் சமத்துவமான உரிமைகள் உண்டு என்றும் நிலை நாட்டுவதற்காக வரலாற்றிலிருந்து தனக்குரிய அடையாளங்களை அச் சமூகம் கண்டெடுக்கிறது. இத்தகைய பூர்வீக அடையாளங்கள் விஞ்ஞான கண்ணோட்டத்தில் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவையாகக் கூட இருக்கலாம். எனினும் குறித்த சமூகம் தனது தனித்துவத்தையும் உரிமைகளையும் நிலைநாட்டுகின்ற போராட்டத்தில் தன்னை இறுக்கமாக ஒன்றிணைக்கவும், அதற்கான ஆன்மீக வலிமையைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகின்ற ஒரு சாதனமாக பூர்வீகத்தை உயர்த்திப் பிடிக்கின்றது. இதன் பின்னர் பூர்வீகமானது அச்சமூகத்தின் கடந்த கால இருப்பை குறிக்கின்ற வரலாற்று அளவுகோல் என்பதிலிருந்து அதன் எதிர்கால இருப்புடன் பிணைந்து விடுகின்ற ஓர் அரசியல் காரணி என்ற நிலைக்கு மாறுகின்றது.

இலங்கை முஸ்லிம்கள் தமது பூர்வீகம் பற்றிய உணர்வு பூர்வமான தேடலை ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே தொடங்கிவிட்டனர். முஸ்லிம்கள் மீது சிங்கள மற்றும் தமிழ் தலைமைகள் கொண்டிருந்த விரோதமும் மேலாதிக்க மனோபாவமும் இத்தகைய தேடலுக்கு காரணமாகின. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்விரு சமூகத் தலைமைகளும் முஸ்லிம்களின் தனித்துவத்தையும், உரிமைகளையும் மறுக்கின்ற போக்கை எடுத்தனர். ஒரு புறம், தென்னிலங்கை (வட கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற) முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் வர்த்தகத்தில் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாக, அவர்கள் மீது சிங்கள வர்த்தகர்களும், சிங்கள இனவாதிகளும் இவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் விரோதம் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் பிரிவினரின் வர்த்தக மேலாண்மையை அகற்றி அங்கு தமது மேலாண்மையை ஏற்படுத்த முயன்றனர். இதன் நிமித்தம் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை கொச்சைப்படுத்தினர். முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் உரிமையில்லை என நிரூபிப்பதற்காக அவர்களை 'கள்ளத் தோணிகள்' என்றும் 'மரக்கல மினிசுகள்' என்றும் கேவலப்படுத்தி வந்தனர். மறுபுறம், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் சார்பில் சட்ட சபை பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு, அரசியல் அதிகாரங்களை அனுபவித்த தமிழ்த் தலைமை இந்த அதிகாரங்களை தொடர்ந்தும் தமது பிடிக்குள் வைத்திருக்கும் நோக்குடன் முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்து அவர்களும் தமிழர்களே என வகைப்படுத்த முயன்றனர். சிங்கள, தமிழ் தலைமைகளின் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக அன்றைய முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக செயற்பட்டனர்.

முஸ்லிம்கள் தமது சந்ததியை மதிப்பிடுவதில் ஆண்வழித் தொடர்பிற்கு முதன்மையளித்து தாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் குடியேறிய செல்வமும், வீரமும் மிக்க அரேபியர்களின் ஆண்வழித் தோன்றல்கள் எனவும், தாம் இந்நாட்டிற்கு ஆக்கிரமிப்பாளர்களாக வரவில்லை எனவும், மாறாக இந்நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம், மருத்துவம், கலாசாரம் என பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர்களெனவும், இந்நாட்டின் சிறப்புகளை பிற நாடுகளுக்கும் பரப்பியவர்கள் எனவும் பலவாறாக தமது முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர். தென்னிந்திய மற்றும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கட்கு எதிராக தாம் தனித்தும் சிங்கள மன்னர்களுடன் தோள் கொடுத்தும் போராடியவர்கள் என்ற தமது வீர வரலாற்றை எடுத்துக் கூறினர்.

இவ்வாறு தமது பூர்வீகத்தை ஆதாரபிடியாகக் கொண்டு, உரிமைகளை மறுக்க முனைந்த சிங்கள, தமிழ் தலைமைகளுக்கு எதிராகத் தமது தனித்துவமான பூர்வீகத்தையும் மாண்பையும் அன்றைய முஸ்லிம் தலைமை உயர்த்திப் பிடித்தது. இதன் மூலமாக இந்நாட்டில் சிங்கள தமிழ் சமூகங்களைப் போலவே தமக்கும் சகல உரிமைகளும் உண்டு என முஸ்லிம் தலைமை விடாப்பிடியாக வாதிட்டது. இத்தகைய விவாதங்களினூடாக தமது தனித்துவத்தை உறுதியாக நிலை நாட்டிய இலங்கை முஸ்லிம்கள் பின்னர் தம்மை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தனியான சமூகமென அடையாளப்படுத்துவதில் வெற்றி கண்டனர்.

-விக்டர் எழுதிய "முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்" என்ற நூலில் இருந்து...

0 கருத்துரைகள்:

Post a comment