June 18, 2019

முஸ்லிம் சமூகம் பற்றி பிழையான, அபிப்பிராயத்தை உருவாக்கியே வாக்குகளை பெறவுள்ளனர் - ஹரீஸ்

(சுலைமான் றாபி) 

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான அபிப்பிராயத்தை உருவாக்கி வாக்குகளை பெறவுள்ளனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று முன்தினம் (16) நிந்தவூரில் இடம்பெற்ற சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் :

பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதல் முஸ்லிம் சமூகத்தை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து வட கிழக்கிற்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்கள் நிம்மதியற்ற அச்சம் கலந்த சூழ் நிலையில் காடுகளிலும், வயல்களிலும் வசித்து வருகின்றனர். இவர்களை பாதுகாப்பதற்கு இராணுவமோ, பொலிசாரோ முன்வரவில்லை. இது தற்போது இலங்கையில் வசிக்கும் சுமார் 22 இலட்சம் முஸ்லிம்களை பாதித்துள்ளதுடன், எதிர்கால சந்ததியின் உறுப்புக்களையும் கேள்விக்குறியாகியுள்ளது. ஸஹ்ரான் என்பவன் தான் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தி நடாத்திய தாக்குதல் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் இருப்பை பாதித்துள்ளது. 

இதனால் முஸ்லிம்களுக்கு கிடைத்த திருமண விவாகரத்து சட்டம், குவாசி நீதிமன்றம், இஸ்லாமிய வங்கி முறைமை, அரபுக்கல்லூரிகளின் சட்ட திட்டங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டு, இவைகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு துணைபோகும் விடயங்களாக இனவாதிகளால்  கட்டப்படுவதுடன், பொதுச்சட்டத்தின் மூலம் இலங்கைச் சிறுபான்மை சமூகத்தின் மத கலாச்சாரத்தில் கைவைக்கின்றார்கள். இந்த நிலை இன்னும் தொடருமானால் இஸ்லாம் காட்டிய வழி முறையில் பொதுச்சட்டத்தின் கீழ் ஹலாலான முறையில் திருமணம் முடிக்க முடியாத நிலைமை ஏற்படும். இவ்வாறானதொரு மிகப்பெறும் ஆபத்தினைத்தான் தற்போது முகம் கொடுத்து வருகின்றோம். 

முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் இராஜினாமா செய்ததன் பிற்பாடு இந்நாட்டில் பிரச்சினைகள் முடிந்து விட்டது என நினைக்க கூடாது. இதன் பிறகுதான் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு அடக்குமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான சதித்திட்டங்கள் இடம்பெறப்போகின்றது. இது பாராளுமன்ற அரசியல் இருப்பிலிருந்து ஒரு சமூகத்தின் தனிப்பட்ட இருப்பு வரை செல்வாக்குச் செலுத்தப்போகிறது. 

இனவாதிகளுக்கு சம்மட்டியால் அடித்தது போன்றே எல்லோரும் ஒற்றுமைப்பட்டு அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தோம். நாம் எடுத்த இம்முடிவானது 02  மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்பட்டது. இதற்காக நாள் கணக்கில் எமது நேரத்தை செலவு செய்யவில்லை. மேலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையோ, ஆசாத் சாலியையோ அல்லது ஹிஸ்புல்லாஹ்வையோ பாதுகாப்பதற்கு இராஜினாமா செய்யவில்லை. மாறாக முஸ்லிம்களையும், அவர்களின் இருப்பையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே பதவிகளை துறந்தோம். 

இராஜினாமா செய்து விடாதீர்கள் என்று நாட்டின் பிரதமர் காலைப்பிடித்தார். அமைச்சர் மங்கள சமரவீரவும் தன்னுடைய அமைச்சு பதவியினை இராஜினாமா செய்ய தீர்மானித்தார். மறுபக்கம் நண்பகலுடன் ஞானசார தேரர் கொடுத்த காலக்கெடு முடிவதற்கு இன்னும் 15 நிமிடங்கள் இருக்கும் பொது இதுபற்றி பிரதமருடன் முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றி பேசிய போது மௌனம் காத்தார். இவ்வாறு இருக்கும் நிலையிலேயே குரங்களையும் அதனை அண்டிய பகுதிகளும், முஸ்லிம் கடைகளும், வீடுகளும், சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டதோடு, ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவ்வாறானதொரு நிலைமையில், பாதுகாப்பு அதிகாரம் இல்லாத பிரதமரின் கீழ் அமைச்சர்களாக இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தோம். 

இதன் பிறகு எமது இராஜினாமாக்களை கையளித்ததன் பிறகே நாட்டின் இனவாதிகள் திரும்பி பார்த்தார்கள் விடயம் பெரிதாகி விடும் என்று அஞ்சி தற்போது விடயத்தை மூட்டி மறைக்க பார்க்கின்றனர். ஏனென்றால் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் பதிவாகி அது தற்போது ஐ.நா வரைக்கும் சென்றுள்ளதால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரச்சனைகளை  ஐ.நா வரை சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே இந்த நாட்டில் முஸ்லிம்களை ஒடுக்கி வாழ முடியாது என்கின்ற நிலையினை அறிந்தே மஹா சங்கத்தினர் எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தி நாட்டின் நல்லிணக்கம் ஏற்பட பெரிதும் வழி சமைத்ததுடன் மீண்டும் அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்க அழைப்பு விடுத்தனர். இதுதான் எமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும். 

கண்டியில் செனரல் மன்னர் இருக்கும் போது அவரை அந்நியப்படைகள் சுற்றி வளைத்த போது அங்கிருந்த ஒரு முஸ்லிம் பெண் மணி அவரை காப்பாற்றிய வரலாறுகளை மஹா சங்கத்தினருடன் பகிர்ந்தோம். கடந்த 30 வருட கால யுத்தத்தில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டிற்கு எதிராக செயற்படவில்லை. நாட்டை பிரிக்க கேட்கவில்லை. தனிமாகாணமோ, பொலிஸ் அதிகாரமோ கேட்கவில்லை. எனவே எமது சமூகம் நசுக்கப்படக்கூடாது. இது பற்றி சிங்கள மக்கள் மத்தியில் எடுக்கூறுங்கள் என மஹாசங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்ததோம்.  

இருக்கின்ற காலங்கள் அனைத்தும் பொன்னான காலம். எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலமாகும். எனவே அந்த கதிரையினைப் பிடிப்பதற்காக பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் பற்றிய பிழையான அபிப்பிராயத்தை உருவாக்கி வாக்குகளை பெறவுள்ளனர். இது பற்றியே முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச முஸ்லிம்கள் துரோகிகள், தமிழர்கள் எதிரிகள் என்று பிரச்சாரம் செய்கிறார். இது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முஸ்லிம்களை துரோகிகளாகவும், தமிழர்களை எதிரிகளாகவும் சித்தரிக்கின்றார். இவ்விடயத்தில் சிறுபான்மைச் சமூகமான நாம் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

2 கருத்துரைகள்:

வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம்கள் அச்சமின்றி வாழ்கிற சூழல் பற்றி மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்கள் குறிப்பிடுவதை வாசிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. வடகிழக்கு தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களே வடகிழக்கின் அமைதியை உறுதிப்படுத்துவது தொடர்பாக இது உங்கள் முறை. கல்முனை தமிழ் பிரதேசசபையை தரமுயர்த்தபடாமல் தடுத்து நிறுத்தும் சக்திகள் நீங்கள் சொல்வதை கேட்பார்கள் என்கிற முறையில் இது வரலாற்றுப்பணியாகும் நீங்கள் தோழர் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழர் தலைவர் சம்பந்தன் உங்கள் மாவட்ட தமிழ் பிரதிநிதி கோடீஸ்வரன் நால்வரும் பேசி கல்முனை தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தபடுவது தொடர்பான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமென்பது என்பது என் கோரிக்கை. எல்லை தொடர்பாக நீதியான சிறு சிறு செம்மைபடுத்துதல் (adjustments ) கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் நீங்கள் பேசமுடியும். விரைவில் இப்பிரச்சினை முடிவுக்குவருவது தமிழர் முஸ்லிம்கள் நல்லுறவு தொடர்பாக மிக மிக முக்கியமாகும்.

கல்முனை தமிழர்களின் பிரச்சனைக்கு மூல காரணம் இந்த இனவாதி ஹாரிஸ் தான்.

Post a comment