Header Ads



பிரச்சினைகளை பூதாகரமாக்க அரசியல்வாதிகள், ஓநாயைப் போன்று அலைகின்றார்கள் - அமீர் அலி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இன்று மக்களை உசுப்பேத்துகின்ற அரசியல் தலைவர்களாகத்தான் சிலர் காணப்படுகின்றார்கள் அது ஒரு இனத்தில் மாத்திரமல்ல அனைத்து மதத்திலும் காணப்படுகின்றார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது அரசியலாக இருக்கலாம், கணவன் மனைவி உறவாக இருக்கலாம், பிள்ளை தாய் உறவாக இருக்கலாம் எல்லாக்காலங்களிலும் ஒரு பொய்யை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது அது என்றோவொருநாள் மாட்டிக்கொள்ளும்.

எனவே மக்களாகிய நீங்கள் இவ்வாறான விடயங்களில் மிகத்தெளிவாக இருக்கவேண்டும் இலங்கையை உலுக்கிய குண்டுத்தாக்குதலானது ஒரு திட்டமிட்ட சதி ஒரு குழுவினரை கொந்தராத்து எடுத்து இந்த வேலை செய்யப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம், கிருஸ்தவ சமூகங்களின் ஒற்றுமையை இந்தக்காலத்தில் இல்லாமற் செய்தால்தான் இவ்வரசை தோக்கடிக்க முடியும் இந்த அரசியலில் தாம் ஆட்சிபீடம் ஏற முடியும் என்று ஒரு அணியினர்களின் கதைகளும் இதற்குள் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வெடிக்க வைத்தவர்கள் சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் இறந்தவகள் தமிழர்கள், கிறிஸ்தவர்கள், சிங்களவர்கள் ஆனால் இதனுடைய சூத்திரம் ஆட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்கோ இருப்பவர்கள் இதை வழிநடாத்தியுள்ளனர்.

மட்டக்களப்பிலும், கொழும்பிலும், நீர் கொழும்பிலும் வெடிக்கப்பட்ட குண்டு அதை வைத்தவனுக்கும் தெரியாது, இறந்தவனுக்கும் தெரியாது, எதற்காக நான் வைக்கின்றேன், எதற்காக நான் மரணிக்கின்றேனென்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இதனுடைய பின்புலம் இந்த ஆட்சியை தாம் எப்படியாவது பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு வேலைத்திட்டம் இதற்குள் மறைந்திருப்பதாக ஒரு பாரிய சந்தேகம் எங்களிடத்தில் இருக்கின்றது.

நீங்கள் எல்லோரும் ஒற்றுமைப்படுகின்றவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர்கள்தான் அதை நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம் ஆனால் இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமைப்படமால் இருக்க முடியாது எனவே ஒற்றுமைப்பட்டு நாங்கள் சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நாடு நிம்மதியாக இருக்க வேண்டும் இந்த நாடு இல்லையென்றால் நாங்கள் வாழ்வதிலே பிரயோசனமே கிடையாது. இந்த நாடு இருக்க வேண்டும், இந்த நாட்டு மக்கள் இருக்கவேண்டும், நிம்மதி இருக்கவேண்டும், சமாதானம் இருக்கவேண்டும் அவ்வாறு இருந்தால்தான் நாங்கள் வாழலாம் எங்களுக்குள் அடிபட்டுக்கொண்டு, சண்டையிட்டுக்கொண்டு இருப்போமாக இருந்தால் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது.

இந்தப் பிரச்சினைகளை பூதாகரமாக்க இந்தப் பிரதேசத்திலும், மாவட்டத்திலும் உள்ள அரசியல்வாதிகள் ஓநாயைப் போன்று அலைந்து கொண்டு திரிகின்றார்கள் எதைச் சொல்வது, எப்படிச் தூண்டுவது, இதை எப்படி மீண்டும் பற்றவைத்துக்கொள்வது என்றெல்லாம் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதில் பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் அவர்கள் தமிழர்களா, முஸ்லிம்களா, சிங்களவர்களா என்பதல்ல அவர்களிடத்தில் சிறந்த கொள்கை இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்.

எனவே மக்களாகிய நீங்கள் தெளிவான சிந்தனையோடு இருந்துகொள்ளுங்கள் இப்படி ஏமாற்று அரசியல் செய்பவர்களின் விடயங்களில் விழிப்பாக இருந்துகொள்ளுங்கள் என்றார்.

No comments

Powered by Blogger.