June 07, 2019

டாக்டர் ஷாபியை கொல்லவும், வீட்டை கொளுத்தவும் துடித்த குண்டர்கள் - டாக்டர் இமாரா ஷாபி

-நஜீப் பின் கபூர்-

“சிங்கள இனத்தின் எதிர்காலத்தை நாசம் செய்த வஹாப்வாதப் படுபாதகனை தூக்கில் போட்டு - கொல்” குருநாகல் நகரில் இப்படி ஒரு பதாகை டாக்டர் ஷாபி புகைப்படத்துடன் தொங்கவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ம் திகதிய சம்பவத்திற்குப் பின்னர் நாட்டில் தொடர்ச்சியாக அரசியல் சூறாவளி; அடித்து வருகின்றது. 
தங்களுக்கே தெரியாமல் பொது மக்கள் இந்த அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களத் தாய்மாரை மலட்டுத்தன சத்திர சிகிச்சை செய்ததாக சொல்லப்படுகின்ற கதையும் இப்படிப்பட்ட ஒரு புரளி என்பது நாம் கண்டறிந்ததில் உறுதியாகி இருக்கின்றது.
ஆரம்பம்

கடந்த வியாழன் திவயின பத்திரிகை தனது தலைப்புச் செய்தியாக “தவ்;ஹீத் ஜமாஅத் டாக்டர் சிங்களப் பௌத்த தாய்மார் 4000ம் பேருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றார்.” ஆனால் அன்று அந்த வைத்தியர் பற்றிய மேலதிக விபரங்களையோ பெயரையோ அந்தப் பத்திரிகை அப்போது சொல்லி இருக்கவில்லை.
அதன் பின்னர் அன்று மாலை ரஜரட்ட பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சன்ன ஜயமான தனது பேஸ்புக் பக்கத்தில் இது பற்றிக் குறிப்பிட்டு அந்த பத்திரிகை சொல்லி இருக்கின்ற படி சத்திரசிச்சை 8000 க்கும் அதிகம் செய்திருக்கின்ற ஒரு வைத்தியர் இருப்பதாக குறிப்பிட்டு, இந்த மலட்டு வைத்தியம் செய்திருப்பவர் வைத்தியர் ஷாபியைக் கோடிட்டுக் காட்டுவது போல் அவரது புகைப்படத்துடன் தகவலைச் சொல்லி இருந்தார். 
இந்த செய்தி வெளியிடப்பட்ட நேரம்வரை இந்த தகவல்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவோ அல்லது குறிப்பிட்ட டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டோ இருக்கவில்லை. இதற்கிடையில் பேராசிரியர் சன்ன ஜயமான வெள்ளி காலையிலே தனது பேஸ்புக் பக்கத்திலிருந்து அந்த ஷாபி பற்றி பதிவை நீக்கிக் கொண்டிருந்தார்.
டாக்டர் இமாரா ஷாபி
அன்று மாலையாகும் போது இது எங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக வந்து கொண்டிருந்தது. “இவர்கள் எங்கிருக்கின்றார்கள்.  இவன் இருக்கும் இடத்தைத் தேடிப்போக வேண்டும் என்றெல்லாம் மக்கள் அத்தச் செய்திக்கு கமன்ஸ் அடிக்கத்துவங்கி விட்டார்கள். எங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்களை எடுத்துப்போட்டு அவர்களைக் கொல்வோம், அவனைக் கண்ட இடத்தில் கொல், அவனது பிள்ளைகளை இல்லாமல் செய்ய வேண்டும். வீட்டைத் தேடிப்போய் கொளுத்த வேண்டும். என்ற செய்திகள் பேஸ்புக் வாயிலாக உலவத்துவங்கியது. 
இதனைக் கண்ட நாம் பயந்து போனோம். என்னவென்றால் மலட்டுத்தனத்தை ஏற்படுத்துவது என்பது கொடூரமான செயல். இவ்வாறான செய்திகளைப் பார்த்த விட்டு சாதரண மக்கள் குழப்பமடைவது இயல்பானதுதான். அது அவர்களுடைய தவறு என்றும் சொல்ல முடியாது. 
கல்வி கற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஆராய்ந்து பார்த்த ஒரு செய்தியைச் சொல்வதற்கு. என்னவென்றால் இப்படி ஒரு விடயத்தை நாங்கள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் 24ம் திகதி இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடொன்றை கொடுப்பதற்கான கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம்.
வெள்ளி பள்ளிவாயலுக்கு எல்லாம் போய்விட்டு சாப்பிட்டு பொலிசுக்கு போவதற்கு கணவன் தயாராகிக் கொண்டிருந்த போது சிவில் உடையில் சிலர் எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடம் விபரத்தைக் கூறிய கணவர் பொலிசுக்கு ஒப்படைக்கத் தயாரித்துக் கொண்டிருந்த கடிதங்களை அவர்களுக்கும் காண்பித்தார். 
அவர்களும் எமக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது பொலிசில் முறைப்பாடு போடுவது நல்லது என்று கூறி கணவரை அழைத்துக் கொண்டு சென்றார்கள். எங்களுடைய வாகனத்தில் கணவரும் அவரது நண்பர் ஒருவரும் ஏறிக் கொண்டார்கள். மற்றுமொரு வாகனத்தில் எங்களுடைய இரு சகோதரர்களும் போனார்கள். 
இடைவழியில் குற்றவியல் திணைக்கள வாகனமொன்று இவர் போன வாகனத்தை மறித்து அவரை அந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள். இதனால் அவருக்கு பொலிசில் முறைப்பாடு கொடுக்க முடியாமல் போய்விட்டது. என்று தமது நிலையைத் தெரியப்படுதுகின்றார் டாக்டர் இமாரா ஷாபி.
திரும்ப அன்று இரவு 9 மணியளவில் இவரை வீட்டிற்கு கூட்டி வந்து இரவு 12 மணிவரையும் வீட்டில் தேடுதல் நடாத்தினார்கள். எங்களுடைய பாஸ்போர்ட், கடிதக் கோவைகள், டெப், லெப்டொப், நாங்கள் வட்டி எடுக்காத காரணத்தால் எனது சம்பளம் கரண்ட கணக்கில் வரவாகின்றது. அது போன்றவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டு போனார்கள்.
எங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பான முறைப்பாட்டைக்கூட செய்ய முடியாமல் போய்விட்டது. நான் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் வாழ்கின்றோம். இரண்டு பிள்ளைகளை ஊருக்கு அனுப்பிவிட்டேன். மற்றவனை என்னுடன் வைத்துக் கொண்டிருக்கின்றேன். அவர்களைப் பாடசாலைக்கும் அனுப்ப முடியாத நிலை. தாம் வாழ்ந்த வீட்டில் இருக்க முடியாத நிலையில் இப்போது அவர்கள் வேறும் ஒரு வீட்டில் தங்கி இருக்கின்றார்கள்.
ஷாபிக்கு எதிராக இப்போதுள்ள பொலிஸ் குற்றச்சாட்டு முறைகேடாகப் பணம் சம்பாதித்தார் என்பதாகும். மலட்டுத்தனம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இவர் இலக்காவது பேராசிரியர் சன்ன ஜயமான அவர்களின் கூற்றுக்குப் பின்னர்தான். இருப்பினும் பொலிஸ் தரப்பில் இவருக்கு அப்படி ஒரு முறைப்பாடு இதுவரை முன்வைக்கப்படவில்லை.
முதல் முறையாக மே 26ம் திகதி எங்களுடைய பரிசோதனைக் கூடத்திற்கு பொலிஸ் வந்தது. அதற்கு முன்னரும் அவர்கள் எங்கள் வீட்டிற்குப் போய் இருந்தார்கள். அன்று நாங்கள் வீட்டில் இருக்கவில்லை. அடுத்த வீட்டுக்கு பாரம் கொடுத்து விட்டு வந்திருந்தோம். வந்தவர்கள்  அவர்களுடன் பேசிவிட்டுப்போய் இருக்கின்றார்கள். 
26ம் திகதி பரிசோதனைக் கூடத்திற்கு நாய்களுடன் வந்து சோதனை போட்டு கணவரை மூன்று மணித்தியாலங்கள் வரை விசாரனை செய்தார்கள். அது வருமானம் சேகரித்தது தொடர்பானது. அதற்குப் பின்னர் 24ம் திகதி டாக்டர் ஷாபி கைது செய்யப்படுவது வருமனம் சேகரித்தது தொடர்பான விசாரணைக்காகவாகும்.
பொறுப்புக் கூறல்
இந்த எல்லாக் குற்றச்சாட்டுக்களும் ஷாபியை இலக்கு வைத்தே நடந்து வருகின்றது. இப்படி இன்று ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற மலட்டுத்தனம் தொடர்பான விடயத்தை திறந்த மனதுடன் ஆராய்ந்து பார்த்தால் தவறு நடந்து இருந்தாலும் முழுக் குற்றச்சாட்டுக்களையும் ஷாபி தலையில் போட்டு அடுத்தவர்கள் தப்பிக் கொள்ள முடியாது. 
மகப்பேற்று அறையில் பணியில் ஈடுபட்டிருப்பது ஷாபி என்ற தனிமனிதன் மட்டுமல்ல. குறைந்தது ஆறுபேராவது அவருடன் பக்கத்தில் இருக்க வேண்டும். எனவே அனுபவம் வாய்ந்த டாக்டர்களின் தகவல் படி இவ்வாறான ஒரு மனிதனால் மட்டும் இதனை செய்து முடிப்பது என்பது சாதியமற்ற விடயம். 
குருனாகல நரம்பியல் வைத்தியப் பிரிவின் சிரேஷ்ட விடுதி வைத்தியர் காமினி விமலரத்தன அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருக்கின்ற ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நான் குருநாகல வைத்தியசாலையில் நரம்பியல் சிரேஷ்ட வைத்தியராக நெடுங்காலம் பணியாற்றி வருகின்றேன். சரியாக கணக்கிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் நான் சத்திர சிகிச்சைகள் 4000 வரை செய்திருக்கின்றேன். சத்திர சிகிச்யையொன்றை மேற்கொள்ளும் போது அதனைச் செய்கின்ற வைத்தியருடன் இன்னும்மொரு வைத்தியர் மற்றும் நல்ல அனுபவமுள்ள இன்னும் ஒரு தாதி கட்டாயம் அங்கு இருக்க வேணடும். 
இவர்கள் அனைவரும் நடக்கின்ற சத்திர சிகிச்சை தொடர்பான பலத்த அனுபவசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு மறைத்து எதையும் அங்கு பண்ண முடியாது. எனவே 4000 பேரை மலட்டுத்தனம் பண்ணியது என்ற கதை யாதர்த்தமானதல்ல என்பது எனது கருத்து.
நான் மிகவும் நன்கு அறிந்த வகையில் மற்றெருவகையான உணர் மறக்கடிப்பு சத்திர சிகிச்சை முறையும் இருக்கின்றது. இதனைச் செய்யக் கூடிய எந்த ஒரு வைத்தியரோ தாதியோ குருநாகல வைத்தியசாலையில் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி அவருக்கு இப்படிப் பெண்களை மலடாக்கும் சத்திர சிகிச்சையைத் தனியே பண்ண முடியும்.? நிலமை தெளிவு.! அப்படியானால் இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஷாபியை மட்டும் சிக்கவைத்திருப்பது திட்டமிட்ட ஒரு ஏற்பாடாக இருக்க முடியாதா?
ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் ஒரு ஆலோசகர் என்றிருக்கின்றார்கள். அவராலும் இந்த குழந்தை பிறப்பு மேற்பார்வை செய்யப்படுகின்றது. எனவே ஷாபி இப்படித் தவறைச் செய்திருந்தால் ஆலோசகருக்கும் இதில் பொறுப்புக் கூறும் பங்கிருக்கின்றது.
இப்போது இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரிப்பதற்கு உதவிப் பணிப்பாளர் கதன்கமுவகே என்பவர் தலைமையில் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் ஷாபிக்கும் உதவிப் பணிப்பாளருக்கும் முரன்பாடுகள் இருந்து வந்திருக்கின்றது என்று கூறுகின்றார் திருமதி ஷாபி இமாரா.
2014 எனக்கு தம்பதெனியாவுக்கு ஒரு இடமாற்றம் கிடைத்திருந்தது. நாங்கள் நான்கு வருடங்களில் மாற்றலாக வேண்டும் என்பது நியதி. ஆனால் என்னையும் விட சேவை மூப்பு உள்ளவர்கள் அதாவது இரண்டு மூன்று வருடம் சீனியர்கள் இருக்க எனக்கு இடமாற்றம் வழங்க சந்தன கடும் முயற்சி செய்தார். இதனால் எனது கணவர் அவருடன் வாதத்தில் ஈடுபட்டார். 
ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நீதி வழங்குகின்றர்கள் என்று அவர் கேட்டார். எப்படியோ எனக்கு இடமாற்றம் கிடைத்துவிட்டது. இதனால் அவருக்கும் கணவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டது. இந்த தற்போதய சம்பவம் நடக்கின்ற போது அவரும் இடமாற்றலாகி மீண்டும் குருனாகலைக்கு வந்திருக்கின்றார். 
அவர் இங்கு வந்து இப்போது ஒருவாரம்தான். இதனால் அவர் இது விடயத்தில் நேர்மையுடன் நடந்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகின்றார் டாக்டர் இமாரா.

முறைப்பாடு
சில தினங்களுக்கு முன்னர் ஷாபிக்கு எதிராக இப்படி ஒரு குற்றசாட்டும் சொல்லப்பட்டு அது பற்றி வைத்திய நிருவாகம் விசாரணை செய்து அவர் குற்றவாளியாக்கப்பட்ட ஒரு கடிதமும் ஊடகங்களில் பிரசுரமாகி இருக்கின்றது. ஆனால் இது பற்றி நானோ எனது கணவரோ இதுவரை தெரிந்திருக்கவிலை என்று குறிப்பிடுகின்றார் டாக்டர் இமாரா. இது பற்றி நான் தெரிந்து கொண்டது ஊடகங்கள் வாயிலாக என்பது அவர் நிலைப்பாடு.
2019 ஏப்ரல் 9 ம் நாள் பிறந்த ஒரு குழந்தையின் ஏர்னு மாற்றப்பட்டுள்ளது என்று அவர்கள் மே 13ம் திகதி அங்கு குற்றச்சாட்டு வைத்திருக்கின்றார்கள். அந்தக் கடிதத்தையும் நான் ஊடகங்களில் பார்த்தேன். இதற்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுவதானால் அந்த னுஆழு வுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவர் கடமை பார்த்த வார்ட் இலக்கம் 56. குழந்தை பிறந்த பின்னர்தான் அந்த வார்ட்டுக்கு போவார்கள்.
அப்படி ஒரு தவறு நடப்பதானால் அந்த இடத்தில்தான் நடக்க முடியும். கணவருக்கு கதைக்க முடியாத நிலை இருப்பதால் அந்த வார்ட்டுக்குப் பொறுப்பாக இருக்கின்ற பெரிய சிஸ்டருக்கு நான் பேசி இப்படி ஒரு விடயம் தாங்கள் வார்ட்டில் நடந்ததா என்று கேட்டேன். அப்படி நடந்திருந்தால் அவருக்கு இது மறந்திருக்க நியாயமில்லை. இது மிகக் கிட்டிய காலம்தானே.? 
அவர் அப்படி எதுவுமே நடக்க வில்லையே டாக்டர் இந்தக் கதையை எனக்கு நம்பமுடியாமல் இருக்கின்றது என்று அவர் என்னிடத்தில் கூறினார் என்று கூறுகின்றார் சாபி மனைவி இமாரா டாக்டர்.
2018 நடந்த ஒரு சத்திரசிகிச்சை பற்றி கதை. இது வேறும் ஒரு வைத்தியரால் நடந்த தவறு இவருடைய தலையில் தற்போது சுமத்தப்படுகின்றது. வைத்தியசாலைக்குப் பொறுப்பாக இருக்கின்ற பிரதான வைத்தியர் என்ற வகையில் இவர் எல்லா நோயாளிகளையும் பார்க்க வேண்டும். அப்படிப்போகும் இடத்தில் குறிப்பிட்ட நோயாளியையும் இவர் பார்க்க வேண்டும். இதனால் இதனை இவர் விட்ட தவறு என்று முடிச்சப்போடுகின்றார்கள் இப்போது. வேடிக்கை என்னவென்றால் 2018ல் நடந்த இந்த விடயத்துக்கு இப்போது இந்த சந்தர்ப்பத்தில்தான்  முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றது!
இப்போது நுற்றுக்கணக்கானவர்கள் தம்மை வைத்தியர் ஷாபி மலட்டுத்தனம் பண்ணிவிட்டதாக முறைப்பாடுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் இவை எல்லாம் உண்மை என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி - தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது பற்றிய தீர்ப்புக்கள் எதுவுமே இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே ஷாபியிடம் வைத்தியம் செய்து கொண்டவர்கள் அச்சத்தில் முறைப்பாடுகளுக்காக வந்துகொண்டிருப்பது உண்மையே.
சாபி பற்றிய வைத்தியர் குறிப்பு
அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் நெடுங்காலமாக வேலை செய்து வந்திருக்கின்றேன். அவர் ஒரு பொறுப்பானதும் தியாகத்துடனும் பணிபுரிகின்ற ஒருவர். நான்தான் அந்த நாட்களில் அந்த மகப்பேற்று வைத்தியசாலையில் ஆலோசகராக பணியாற்றி இருக்கின்றறேன். 
இதுவரை டாக்டர் ஷாபியிடம் சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் பெரும் எண்ணிக்கையில் என்னிடம் வந்திருக்கின்றார்கள். இதுவரை அவர்களில் ஒருவர்கூட ஷாபியால் தமக்குப் பிள்ளைப்பேரு நின்று விட்டது என்று ஒரு சின்ன சந்தேகத்தைக் கூட என்னிடம் சொல்லியதில்லை. 
இந்தத் தகவலை எங்களிடம் சொன்னவர் ஒரு ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவர். அவர் டாக்டர் சாபி இப்படித் தவறு பண்ணவாய்ப்பே இல்லை என்று குறிப்பிடுகின்றார். குருனாகலையில் வைத்தியாசாலையில் கடமையாற்றியவர் தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் தன்னை பெயர்வாரியாக அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆணிவேர்
குருனாகலையில் சிங்கள வர்த்தக சங்கம் என்ற ஒன்றிருக்கின்றது. அது குருனாகல் நகரிலுள்ள இடங்களை சிங்களவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுக்கு விற்கக் கூடாது என நெடுநாளாக செயல்பட்டு வருகின்றது. இவர்களுக்கும் நகரபிதவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்து வருகின்றது.
இந்த நிலையில் குருனாகல நகர் மத்தியில் ரியோ என்ற கொட்டகை இருக்கின்றது. 2015 வரை இது புருனோ என்பருவருக்குச் சொந்தமாக இருந்து வந்துள்ளது. இந்த இடத்தை விலைக்கு வாங்குவது தொடர்பில் சிங்கள சங்கத்திற்கும் ஷாபிக்குமிடையில் போட்டி நிலை வந்திருக்கின்றது. இதில் ஷாபி வெற்றி பெற்றிருக்கின்றார். அவர் சாஜீத், ரவூஸ்தீன், ரஹ்மான் என்பவர்களுடன் சேர்ந்து இதனை 11 கோடிக்கு விலைக்கு வாங்கி இருக்கின்றார்கள். 
விலைக்கு வாங்கப்பட்ட பின்னர் கூட இதனைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறுவழிகளில் சிங்கள வர்த்தக சங்கம் முயன்று வந்திருக்கின்றது. பயமுறுத்தல்கள் கூட நடந்திருக்கின்றது .ஆனால் எந்த நிலையிலும் இதனை வைத்தியர் ஷாபி தரப்பு விட்டுக் கொடுக்கவில்லை.
இப்போது வைத்தியர் சிங்களவர்களை மலடாக்கும் விவகாரம் மற்றும் வைத்தியர் சொத்து சேகரித்திருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக கதை போய்க் கொண்டிருக்கின்றது. வர்த்தக சங்கம்தான் இந்த மலட்டுக் கதைக்கு உருவம் கொடுத்திருக்கின்றது. இது தொடர்பாக அவர்கள் நகரில் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருக்கின்றார்கள். ஆர்ப்பாட்டங்கள் கூட அவர்கள் ஏற்பாடு என்று சொல்லப்படுகின்றது.
ஊடக நாடகம்
இந்த இடத்திற்கு ஊடகங்களை அழைத்து வந்து அதற்குத் தேவையான வகையில் செய்திகளைத் தயாரிப்பதில் கூட மேற்சொன்ன கூட்டமும் விசாரணைக் குழுவிலுள்ள சிலரும் வைத்திய சட்டவிதிகளுக்கு முரனாக செலாற்றிக் கொண்டு வந்திருக்;கின்றார்கள். இதன் பின்னணியில் விமல் வீரவன்ச தரப்பு கட்சி முக்கிஸ்தர் ஒருவர் செயல்பட்டுவருவது அனைவரும் அறிந்நதே. 
தற்போது கண்டி தலதா மாளிகையில் உண்ணாவிரதம் இருக்கும் அதுருலியே தேரர் இந்த வைத்தியர் மலட்டுத்தனம் பண்ணி இருக்கின்றார் என்பது 99 வீதம் உறுதியாகிவிட்டது என்று கூறுகின்றார். இது எந்த நியதிப்படி என்று புரியவில்லை
வைத்திய சங்கத் தலைவர் 
வைத்தியர் சங்கத் தலைவர் அதுல களுஆரச்சி, ஒரு சங்கம் என்றவகையில் நாம் இருவரை இதற்காக அமைச்சுக்கு வழங்கி இருக்கின்றோம். அவர்கள் அங்கு போய் விசாரணைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதுதான் எமது நோக்கம் என்று கூறுகின்றார் அவர்.
குருநகல வைத்தியசாலை பணிப்பாளர் சரத் வீரபண்டார
நாம் இப்போது இது பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டு வருகின்றோம். இந்த வைத்தியசாலையிலுள்ள இருவர் ஷாபி தொடர்பில் இரு முறைப்பாடுகள் கொடுத்திருக்கின்றார்கள். இது நடக்க முடிந்த விவகாரமா இல்லையா என்பது தொடர்பில் இப்போது நாம் ஊகங்களுக்கு வரமாட்டோம் என்று குறிப்பிடுகின்றார்.
வர்தக சங்க தலைவர் டயஸ் ரத்நாயகக்
எங்களுக்கும் குறிப்பிட வைத்தியருக்கும் எந்த முரன்பாடுகளுமில்லை. இப்படி இருப்பதாகச் சொல்லப்படுவதை நாம் நிராகரிக்கின்றோம். என்றாலும் அவரை சாதாரணமாக நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். நாங்கள் அவருக்கு எதிராக எந்தத் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிடவில்லை என்பது அவர்கள் நிலைப்பாடு.நன்றி - ராவய 


1 கருத்துரைகள்:

Dr.Imara pls make complain to UNHRC and HR commission of Sri Lanka. Specially try to meet Prof.Deepika Udugama. And file the FR case in the supreme Court

Post a comment