June 02, 2019

சஹ்ரானின் தலைக்கு பயங்கரவாத, நச்சுக்கிருமி சென்றது மத்ரஸாவில் இருந்து அல்ல - ஜாவிட் யூஸுப்

ஊயிர்த்தெழுந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் திகதி) பயங்கரவாதிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து நாட்டில் உருவாகியுள்ள நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேசிய ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் சபை அங்கத்தவரும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் முன்னாள் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி ஜாவிட் யூஸுப் தினகரன் வாரமஞ்சரிக்கென அளித்த பேட்டி

கேள்வி: ஏப்ரல் 21 திகதி இடம்பெற்ற தாக்குதல் அதனை தொடர்ந்து உருவாகியுள்ள நிலைமை தொடர்பில் சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா? 

பதில்: உயிர்தெழுந்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தாக்குதலானது மனித சமூகத்திற்கு எதிரான வன்மையாகக் கண்டிக்கத்தக்க தாக்குதலாகும். எவருமே எதிர்பாராத நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டும் சுமார் 500 பேர் காயமடைந்துமுள்ளனர். இது இந்நாட்டு முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம் அல்லாத சமூகங்களோ ஒரு போதும் அங்கீகரிக்காத செயலாகும். 

ஈஸ்டர் ஞாயிறானது, கிறிஸ்தவ மக்களுக்கு மிக முக்கிய நாள். அந்நாளில் அவர்கள் தேவாலயங்களில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் பெரியதொரு பாவமும் அநியாயமும் கூட. இத்தாக்குதலின் விளைவாக ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களதும், உல்லாச ஹோட்டலில் பாதிக்கப்பட்ட மக்களதும் வாழ்விலும் அவர்களது உளவியலிலும் பெரிய தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இந்நாட்டுக்கும் பெரும் பாதிப்பாகவும், ஆபத்தாகவும் அமைந்துள்ளது இப்பயங்கரவாதத் தாக்குதல்.  

அதேரேம் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இரு வார காலப்பகுதிக்குள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக இப்பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் கைது செய்யப்பட்டு விட்டனர். இதற்கு முஸ்லிம்கள் அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் பெறுமதி மிக்கதாக அமைந்தது. இதனை இராணுவத்தினரே குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாரினதும், பாதுகாப்பு படையினரதும் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஊடாகவே குறுகிய காலத்திற்குள் இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களில் 90 வீதமானோரை கைது செய்ய முடிந்தது.  

இஸ்லாம் மதமோ ஏனைய மதங்களோ அனுமதிக்காத இம்மிலேச்சத்தனத் தாக்குதலை இந்நாட்டு முஸ்லிம்களும் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை. இருந்தும் இப்பயங்கரவாத செயலில் முஸ்லிம் பெயர் கொண்ட ஓரிருவர் ஈடுபடுவர் என்று முஸ்லிம் சமுதாயமே எதிர்பார்த்தோ அறிந்தோ இருக்கவுமில்லை.  என்றாலும் இச்சம்பவங்களுடன் இந்நாட்டு முஸ்லிம்கள் சம்பந்தமற்றவர்கள் என்பதை எவர் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் கூட அச்சம்பவத்திற்கு பின்னர் இந்நாட்டு முஸ்லிம்கள் பலவித சவால்களுக்கு முகம் கொடுக்கவே செய்கின்றனர்.  

கேள்வி: 21 ஆம் திகதி சம்பவத்தை தொடர்ந்து இடம்பெறும் நிகழ்வுகள் முஸ்லிம்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் உங்கள் பார்வை எத்தகையது?  

பதில்: அதாவது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் வீடு வீடாக மேற்கொள்ளும் தேடுதல்களின் போது 21 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்பான விடயங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. சந்தேக நபர்களும் கைது செய்யப்படுகின்றனர். அத்தோடு ஏனைய குற்றச்செயல்களும் குறிப்பாக களவு, முறைகேடுகள், மோசடிகள் போன்றனவும் பிடிபடுகின்றன. அண்மையில் பலாங்கொடையில் ஒரு இடத்தில் பல கடவுச்சீட்டுகளும் தேசிய அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை வழமையான குற்றச்செயல்களுடன் தொடர்பானவை. ஆனால் எல்லா குற்றச்செயல்களையும் 21 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புபடுத்தியே சம்பவத்தை தொடர்ந்த இரு வாரங்கள் ஊடகங்கள் வெளிப்படுத்தின. பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஊடகங்களும் கலந்து கொண்டமையே இதற்கு காரணமாக அமைந்தது. இதன் ஊடாக குற்றச்செயல்கள் அனைத்தும் முஸ்லிம்கள் மத்தியில் தான் காணப்படுகின்றது என்ற செய்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. அதேநேரம் முழு நாடும் சீரழிவுக்கு (அராஜிதாய்) உள்ளாகியுள்ளது என்ற பார்வையையும் ஊடகங்கள் முழு நாட்டுக்கும் கொண்டு சென்றன. இது ஊடகங்கள் செய்த பெரும் தவறாகும். இதன் விளைவாகவே முஸ்லிம்கள் தற்போதைய நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர். 21 ஆம் திகதிக்கு பின்னரான நிகழ்வுகளால் நாட்டின் சூழல்நிலை முற்றிலும் மாறி முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை அவை உருவாக்கியுள்ளன.  

ஆனால் இச்சம்பவம் நடந்ததும் அரசாங்கம் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தல், நாட்டினதும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நிவாரணம் அளித்தல் அதாவது அம்மக்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உள ரீதியில் நிவாரணம் அளித்தல் என்பவற்றை பிரதான பொறுப்பாகக் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். இவையே முதலில் செய்யவேண்டிய முக்கிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.. 

கேள்வி: தற்போது மத்ரஸா கல்வியை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற கருத்து மேலேழுந்துள்ளதே? 

பதில்: மத்ரஸாக்ளை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற கலந்துரையாடல் முஸ்லிம் சமூகத்தினுள் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. ஏனெனில் அங்கு கற்பிக்கப்படும் விடயங்கள் தரமானவை அல்ல. ஆனால் 21 ஆம் திகதி சம்பவத்திற்கும் மத்ரஸாக்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் காணவில்லை. ஏனெனில் அப்பயங்கரவாத குழுவினர் மத்ரஸாவில் கற்ற விடயங்களை கொண்டு இத்தாக்குதலை மேற்கொள்ளவில்லை. அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களில் ஸஹ்ரான் மாத்திரமே மத்ரஸா சென்றுள்ளார். ஆனால் அவர் மத்ரஸா கல்வி அடிப்படைக்கு ஏற்றவராக அமையாத காரணத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் மத்ரஸா அடிப்படைக்கு எதிராகவே செயற்பட்டுள்ளார். இவர்களது தலைக்கு பயங்கரவாத நச்சுக்கிருமி மத்ரஸாவில் இருந்து செல்லவில்லை.  

இவர்கள் உள ரீதியிலான விகாரத்தின் ஊடாகவே இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இந்நச்சு கிருமி இணைய தளத்தின் ஊடாகவே சென்றுள்ளது. அதனால் மத்ரஸாவை ஒழுங்கமைப்பது அர்த்தமற்றதாகும். அது இருமலுக்கு மருந்து எடுக்கச் சென்றவருக்கு காலிலுள்ள புண்ணுக்கு மருந்து செய்வதாகவே அமையும்.  

என்றாலும் தற்போதைய சூழலில் மத்ரஸாக்களை மாத்திரமல்லாமல் எல்லா சமய கல்வி நிறுவனங்களையும் ஒரு பொதுவான ஒழுங்கமைப்புக்கு கொண்டு வர வேண்டும். இதைவிடுத்து மத்ரஸாவை மாத்திரம் ஒழுங்கமைத்தால் அது இந்நாட்டு முஸ்லிம் சமுதாயத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பாரபட்சமாக கருதும் நிலையை உருவாக்கும்.  

கேள்வி: நாட்டில் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனரே? 

பதில்: இந்நாட்டில் 95 வீதம் ஒரு சட்டம் தான் உள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாகம் மற்றும் விவாகரத்து, வக்ப் மற்றும் மரணமான பின்னர் சொத்து பிரித்தல் ஆகியன தான் உள்ளது. மற்றப்படி இங்கு முஸ்லிம் சட்டமோ ஷரிஆவோ கிடையாது. முஸ்லிம் தனியார் சட்டத்தைப் போன்று தேச வழமையிலும் ஒரு சிறுபகுதியும், கண்டியன் சட்டத்திலும் ஒரு சிறுபகுதியும் தான் நடைமுறையில் உள்ளது. இந்த விடயமும் கூட 21 ஆம் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. ஹலாலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவ்வாறானதே.  

அதேநேரம் முஸ்லிம்களுக்காக மாத்திரம் சட்டங்களை அறிமுகப்படுத்துவது அது மனித உரிமை மீறலாகும். 1983 இல் ஜுலை கலவரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றினர். இதன் விளைவாக ஜனநாயக முறையில் இருந்த தமிழ் தலைவர்கள் பாராளுமன்றத்திலிருந்து ஒதுக்கப்பட்டனர். அதன் விளைவாக நாட்டில் சுமார் மூன்று தசாப்த கால யுத்தம் நடைபெற்றது. தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக முறையிலிருந்து ஒதுக்கப்பட்டதாலேயே இது இடம்பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிரான ஜுலைக் கலவரத்திற்கு பரிகாரமாவே ஆறாவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இக்கலவரத்துக்கும் இத்திருத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

கேள்வி: பயங்கரவாதத்திற்கு துணைபுரியும் இணையதளங்கள் தொடர்பில் குறிப்பிட்டீர்களே?  

பதில்: ஆம். 21 ஆம் திகதி சம்பவத்திற்கு இணையத்தளங்கள் நிச்சயம் பெரிதும் உதவி இருக்கும். அதனால் பயங்கரவாதத்திற்கு துணைபுரியும் இணையத் தளங்களை கண்காணிக்க வேண்டும். அவற்றில் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். இணைய தளங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பாதிக்கப்படவும் இடமளிக்கக்கூடாது. 

என்றாலும் பயங்கரவாதத்திற்கும் வெறுப்புக்கும் ஊக்கமளிக்கும் இணைய தளங்கள் தொடர்பில் கண்காணிக்கத் தவறுவது ஆரோக்கியமானதல்ல. இவ்விடயத்தில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்த வேண்டும்.  

கேள்வி: வடமேல் மாகாணத்தின் சில பிரதேசங்கள் மற்றும் மினுவாங்கொடயில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் குறிப்பிடுவதாயின்?  

பதில்: மே 12ஆம், 13ஆம் திகதிகளில் இடம்பெற்ற இச்சம்பவங்கள் மிகவும் கேவலமானவை. கிறிஸ்தவ மக்கள் கர்தினாலின் தலைமையின் கீழ் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டனர். அவர்களுக்கு தான் பெறும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் சுமார் 2000 மோட்டார் பைசிகிளில் ஒழுங்கமைக்கப்பட்ட குழு கிராமம் கிராமமாக சென்று வன்முறையை மேற்கொண்டுள்ளனர். இவ்வன்முறையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்த்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அறிக்கையை விடுத்துள்ளது. பொலிஸாருக்கும் எழுதியுள்ளனர். பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. சட்டத்தைக் கையில் எடுக்க எவருக்கும் இடமளிக்கலாகாது. இங்கு பெரியதொரு தவறு நடந்துள்ளது. அது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.  

கேள்வி: முஸ்லிம்களில் சிலர் திருந்தப் போவதாகக் கூறுகின்றனரே? 

பதில்: தற்போதைய சவால்களுக்கு மத்தியில் சிலர் நடந்து கொள்ளும் விதம் பிழையானது. இவர்கள் எங்களது செயற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளது. எமது தவறுகளை நாம் திருத்தப்போவதாக முழு நாட்டுக்கும் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்கின்றனர். இதனூடாக அவர்கள் சிலரைத் திருப்திபடுத்தவோ அல்லது அரசியல் இலாபம் பெறவோ தான் கூறுகின்றனர். அவ்வாறு சொல்வதன் மூலம் ஸஹ்ரான் குழு செய்த செயலுக்கு நாங்களும் பொறுப்பு என கருதும் நிலையை ஏற்படுத்துகின்றது. இது முற்றிலும் பிழையானதாகும். முஸ்லிம்களில் குறைபாடு உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் எமக்குள் கலந்துரையாடி அதனை திருத்த வேண்டும். இதை விடுத்து இவ்வாறு பகிரங்கமாகக் கூறுவதால் முஸ்லிம் சமூகம் ஒரு கீழ் மட்டத்திற்கு தள்ளப்படுகின்றது. 

கேள்வி: நிறைவாக நிங்கள் கூறவிரும்புவதென்ன? 

பதில்: முஸ்லிம்களும் இந்நாட்டு பிரஜைகளே. ஏனைய சமூகங்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் இந்நாட்டில் இருக்கின்றது. இது யாப்பிலும் உள்ளது. இதனை அரசாங்கத்திற்கு சொல்லவும் வேண்டும். அதை செயலிலும் காட்ட வேண்டும்.  

என்றாலும் 2012 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வந்த நிகழ்ச்சி நிரலை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி செயற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் முஸ்லிம்கள் தற்போது முகம் கொடுத்துள்ள நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு ஒரு பெரும் பொறுப்பு உள்ளது. இருந்தும் அப்பொறுப்பை உணர்ந்து அரசாங்கம் செயற்படவில்லை என்பது தான் என் கருத்து.  

2015 ஜனவரிக்கு பின்னர் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆதரவு நிலை ஏற்பட்டது. நல்லிணக்கம் சகவாழ்வுக்கென அதிக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 21 ஆம் திகதி சம்பவத்திற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை. இதன் விளைவாக முஸ்லிம்கள் பலவித அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அரசாங்கம் பொறுப்பை உணர்ந்து செயற்படும் போது இப்பிரச்சினைகள் பெரும்பாலும் நீங்கிவிடும்.  

பேட்டி கண்டவர் - மர்லின் மரிக்கார்    

0 கருத்துரைகள்:

Post a comment