June 05, 2019

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின், அல் - ஹிக்மா நூலின் கதாநாயகன்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம், சோனகத் தெருவில் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் அல்லாபிச்சை பள்ளிக்கு அடுத்து அமைந்த இல்லத்தில் மீராமுஹிதீன் அப்துல் காதர் - றஷீதா தம்பதியினருக்கு 1951 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி நஹூமுத்தீன் பிறந்தார்.

இவர் ஆரம்பக் கல்வியை யாழ் முஹம்மதிய்யா கலவன் பாடசாலையிலும் (அல்லாபிச்சை) பள்ளி இடைநிலைக் கல்வியை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியிலும் கற்றார். யாழ் ஒஸ்மானியா கல்லூரியிலிருந்து க.பொ.த விஞ்ஞான உயர்தர பிரிவுக்கு தகைமை பெற்ற முதல் மாணவர் என்ற பெருமையை ஈட்டியவரும் இவரே. உயர் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும், விஞ்ஞான ஆசிரிய பயிற்சியை பலாலி ஆசிரிய கலாசாலையிலும், பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் மாணவர் நஜூமுத்தீன் பல்வேறு மாணவர் சங்கங்களின் தலைவராக விளங்கியதுடன் மாணவத் தலைவராகவும் இருந்துள்ளார்.

மாணவப் பருவத்திலேயே ஈழநாடு, வீரசேகரி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பல தரப்பட்ட கட்டுரைகளை எழுத ஆரம்பித்த இவர் க.பொ.த உயர்தரம் கற்கும் போதே  'இஸ்லாம் காட்டும் சமநீதி' என்னும் தொடர் கட்டுரையை வீரசேகரியில் எழுதினார்.

1988 இல் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு (வெள்ளி விழா) மலரில் ஒஸ்மானியாவின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் விரிவான வரலாற்றுக் கட்டுரையை எழுதியதுடன் ஏனைய பல புகைப்படங்களையும், ஆக்கங்களையும் திரட்டி இணைத்து, 'அல்ஹிக்மா' என்னும் பெயரை அம் மலருக்குச் சிபாரிசு செய்து அப்போதைய அதிபர் மர்ஹூம் ஏ.எச்.ஹாமீம் அவர்களின் வழிகாட்டலுடன் இவர் அதனை நூலுருவாக்கம் செய்வித்தார்.

இவர் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி, மடவளை மதீனா மத்திய கல்லூரி, அக்குறணை அல்அஸ்ஹர் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிகளில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஒஸ்மானியா கல்லூரியில் விஞ்ஞானமும், சமூகக்கல்வியும் கற்பித்தார். ஒஸ்மானியா கல்லூரியில் இருந்து உருவான முதலாவது பயிற்சி பெற்ற ஆசிரியரும் இவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. (இரண்டு மகன் , ஒரு மகள்) பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த தனது மாணவர்கள் பலதரப்பட்ட துறைகளில் சிறப்பான உயர் பதவிகளில் பிரகாசிப்பதை இட்டு இவர் மகிழ்;ச்சி தெரிவிக்கின்றார்.

பிற்காலத்தில் இவரது வானொலித் தொடர் உரைகள் மிகவும் பிரபலம் பெற்று விளங்கின. 1984ஃ85 காலப் பகுதியில் மர்ஹூம்.வீ.அப்துல் கபூர் அவர்கள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளராக விளங்கிய போது இவர் வானொலி நிகழ்ச்சிகளோடு இணைந்தார். 'அல்லாஹ்வின் அலகிலா அற்புதங்கள்' என்னும் வாராந்த உரைத் தொடரை முதலில் நிகழ்த்தினார். கணனி வசதிகளோ, இணையத்தள வாய்ப்புக்களோ கிடைக்காத அக்காலப் பகுதியில் விஞ்ஞானமும் மார்க்கமும் சார்ந்த இவரது ஆய்வுத் தொகுப்புக்களுக்கு பல்வேறு நூல்களும், சேகரித்து வைத்திருந்த கட்டுரைத் தொகுப்புக்களும் உதவின. மர்ஹூம்.எம்.எச். குத்தூஸ், அல்ஹாஜ் இஸ்ற்.எல்.எம்.முஹம்மத், அல்ஹாஜ் எம்.இஸற். அஹ்மத் முனவ்வர் ஆகியோர் பணிப்பாளர்களாக விளங்கிய காலங்களிலும் பல்வேறு வானொலி உரைகளை நிகழ்த்தியுள்hர். 1994ஃ95 களிலும் அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட 'சிந்தனைக் கோவை' என்னும் தொடர் உரை ஜனரஞ்சகமாக விளங்கியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செல்வாக்குச் செலுத்தாத அக்காலத்தில் முஸ்லிம் அல்லாதோரும் இவ் வானொலித் தொடர் உரையைக் கேட்டு ரசித்ததுடன் கூட்டுத்தாபனத்துக்கு பாராட்டுக் கடிதங்களும் வரைந்தனர். இக்கால கட்டத்தில் இவருக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்கப்பட்டது.

வரலாற்று அம்சங்களை மீட்டும் விதத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வெள்ளைக் கடற்கரை பற்றியும், ஒஸ்மானியா கல்லூரியின் பின்னணி பற்றியும் இவர் நிகழ்த்திய உரைகள் அக்காலத்தில் ஒலிநாடா வடிவில் இருந்தன. முதுபெரும் தலைவர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் மறைந்த முதலாவது ஞாபகார்த்த உரை 1998 இல் இவரால் நிகழ்த்தப்பட்டது. இவரது வேறு சில ஆங்கில உரைகளின் பதிவுகளும் அப்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்தன. தற்காலத்திலும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் அவ்வப்போது சில உரைகள் ஒலிபரப்பாகின்றன.'சிந்தனைக் கோவை' உரைகளில் சிலவற்றை அல்ஹாஜ் எம்.இஸற்.அஹ்மத் முனவ்வர் அவர்கள் இறுவட்டு வடிவில் தயாரித்திருந்தார். எனினும் இவரது உரைத் தொகுப்புக்கள் நூலுருவாக்கம் செய்யப்படாதது வருந்தத்தக்கது. 25  ஆண்டுகளுக்கு முன்னர் ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் நற்சிந்தனை நிகழ்ச்சிகள் சிலவற்றைச் செய்தார். இவரது இவ்வாறான முயற்சிகள் தொழிற்பணி காரணமாக தற்போது ஸ்தம்பிதமாகியுள்ளன.

1999 இல் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த  'இருபத்தோராம் நூற்றாண்டில் உலமாக்கள் எதிர்நோக்கும் சவால்கள் ' என்னும் கருத்தரங்கில் விஞ்ஞானம் சார்ந்த சவால்கள் என்னும் பொருளில் ஆய்வுரை நிகழ்த்தினார். கொழும்பு ஜமா அத்தே இஸ்லாமியில் , அல்லாஹ்வின் படைப்பில் அறியப்பட்ட உலகமும் அறியப்படாத உலகங்களும்' என்னும் பொருளில் விளக்கவுரை நிகழ்த்தியதுடன், வேறு பல நூலாய்வுகளையும் மர்ஹூம். அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் பல்கலைக் கழக விரிவுரையாளர் மர்ஹூம். அப்துல்  ரஸ்ஸாக் அவர்கள் இயற்றிய நூல்களையும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு கூறும் ஜனாப். எம்.எஸ்.அப்துல் றஹீம் அவர்களின் நூலையும் இவர் ஆய்வுரை செய்தார்.

1990 இல் வடபுல முஸ்லிம்கள் பல வந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகளின் கொடுமைகளைச் சாடும் விதத்திலான கற்பனைச் சித்திரங்களை அவ்வப் போது இஸ்லாமியப் பத்திரிகைகளில் புனைப் பெயரில் எழுதியுள்ளார்.

இவரது நண்பர் பேராசிரியர் மர்ஹூம். எஸ்.எச்;.ஹஸ்புல்லாஹ் அவர்கள், வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான பெறுமதி வாய்ந்த பல ஆய்வுத் தொகுப்புக்களை விரிவான முறையில் மேற்கொண்டார். ஆரம்பக் கட்டங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான பல விடயங்களை பேராசிரியருக்கு இவர் திரட்டி வழங்கினார்.

ஜே.எம்.ஆர்.ஓ வெளியீடான 'யாழ் முஸ்லிம் - வரலாற்றுப் பார்வை' நூலில் இடம் பெற்றுள்ள இவரது ஆக்கம், யாழ்ப்பாண முஸ்லிம்களின் பாரம்பரிய வரலாற்று அம்சங்கள் பலவற்றை சுவாரசியமாகவும், நடுநிலையோடும் வெளிப்படுத்துகின்றது.

பலவந்த இடப்பெயர்வின் தாக்கம், இவரை 39 ஆவது வயதில் 20 வருட ஆசிரிய சேவையுடன் இளைப்பாறச் செய்தது. 1991 ஜனவரியில் இளைப்பாறிய சமார் 45 யாழ். முஸ்லிம் ஆசிரியர்கள் நாட்டின் பல பாகங்களிலும் சிதறி வாழ்ந்து ஓய்வூதியம் பெறமுடியாது தவித்தனர். அப்போது ஆரம்பிக்கப்பட்ட யாழ். முஸ்லிம் இளைப்பாறிய ஆசிரிய சங்கத்தின் செயலாளராக விளங்கிய இவர், கல்வி அமைச்சில் (இசுறுபாய) ஒவ்வொரு இளைப்பாறிய ஆசிரியரினதும் சுயவிபரக் கோவைகளையும் உரிய முறையில் கையாண்டு அவர்கள் ஓய்வூதியம் பெற உதவி புரிந்தமையை இட்டு மகிழ்ச்சி தெரிவிக்கின்றார். அதேவேளை, தனது பொறுப்பு அல்லாத நிலையிலும், இப் பணிக்கான அனைத்து உத்தியோகபூர்வ அம்சங்களையும் தானே பொறுப்பேற்றுப் பேருதவி புரிந்த, கல்வி அமைச்pன் அப்போதைய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகமும், ஒஸ்மானியா கல்லூரியின் தனது முன்னைநாள் அதிபருமான மதிப்புக்குரிய அல்ஹாஜ்.எம்.ஏ.குத்தூஸ் அவர்களை நன்றியோடு ஞாபகப்படுத்துகின்றார்.

இடம்பெயர்ந்த பின்னர் பமபலப்பிட்டியிலுள்ள இரத்தினக்கல் வணிக மற்றும் ஏற்றுமதி நிறுவனமொன்றில் பணி புரிந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக இலங்கையின் பிரபல ஆடையணிகள் தொடர் நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராகத் தொழில் புரிகின்றார். 

இவர் 68 வயது கடந்த நிலையில் கல்கிஸையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில்  அல்ஹாஜ் ஏ.ஸீ.நஜூமுத்தீன் அவர்களின் 'சிந்தனைக்கோவை' உரைத் தொகுப்புக்கள் நூலாக உருவாகுவதற்கு அல்லாஹ் கிருபை சொய்வானாக. ஆமீன்

2 கருத்துரைகள்:

நான் உங்கள் ரசிகன்! வாழ்த்துக்கள்!

எமது வாழ்த்துக்கள்.

Post a Comment