Header Ads



மஹிந்த ராஜபக்ஷ இன்றும் அன்புடன் உள்ளார் - பைஸர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவை ஏனைய கட்சிகளுடன் இணைந்து பாரிய கூட்டணியொன்றை அமைத்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினால் அவர் வெற்றிப் பெறுவது நிச்சயம் என்பது அனைவருக்கு தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -28- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறந்தவொரு வேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே இந்த இரண்டு கட்சிகளின் பிரதான நோக்கம்.

எமது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரான எமது விருப்பம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அவர்களுடைய வேட்பாளரை களமிறக்கும் விருப்பத்தில் உள்ளனர். அதனை போலவே ஐக்கிய தேசிய முன்னணியும் உள்ளது.

தமது வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதே எந்தவொரு அரசியல் கட்சியினதும் தேவையாகும். எனினும் பல சந்தரப்பங்களில் அரசியல் கட்சிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கூட்டணி அமைக்க நேரிடுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவை பிளவுப்பட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். எமது பிளவில்தான் அவர்களது வெற்றி உள்ளதாக நினைக்கின்றனர்.

எனினும், நாங்கள் அதற்கு இடமளிக்க போவதில்லை. நாங்கள் இணைந்து நாட்டுக்கு சிறந்த தலைவரை வழங்குவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அதிகளவானவர்களின் தாய் வீடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். அதனை அவர்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் தாய் வீடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே.

அவர் எமது கட்சி மீது இன்றும் அன்புடன் உள்ளார். நாடாளுமன்றில் உள்ள பலரின் ஆரம்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே. சில நேரங்களில் சில விடயங்களை முன்னிட்டு பிரிவுகள், பிளவுகள் ஏற்படலாம். எனினும், எமது பொது எதிரி யார் என்றும் பொது இலக்கு எதுவென்றும் நம் அனைவருக்கும் தெரியும்.

பொது எதிரி மற்றும் பொது இலக்கு நோக்கி செல்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து நாட்டுக்காக நல்லதொரு தீர்மானத்தை எடுப்பார்கள் என்பதை நாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.