June 29, 2019

யார் இந்த, தலாய் லாமா ?

- பரீட் இக்பால் -

தலாய் லாமா என்பது இவரது பெயரல்ல. திபெத் நாட்டின் பௌத்தர்களின் ஆத்மீக தலைவர், தலாய் லாமா என்ற பதவிப் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றனர். தலாய் லாமா தேர்வு செய்யப்படுவதில்லை; கண்டுபிடிக்கப்படுகிறார்கள். திபெத்தின் முதலாவது தலாய் லாமாவாக கெண்டுன் ட்ருப் (1391-1474) பதவி வகித்தார். 13 ஆவது தலாய் லாமாவாக துப்டீன் கியாட்ஸோ (1876-1933) பதவி வகித்தார். 14 ஆவது தலாய் லாமாவாக தற்போதிருக்கும் தலாய் லாமாவிற்கு பெற்றோர் இட்ட பெயர் லாமோ தொண்டுப் (தலாய் லாமாவாக இனங்காணப்பட்டதன் பின் டென்ஸின் கியாட்ஸோ). 

லாமோ தொண்டுப் 1935 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி டக்ஸ்டர் எனும் கிராமத்தில் வைக்கோல் பரப்பப்பட்ட அழுக்கான தரையில் சோக்யாங் செரின், சோனம் சோமோ எனும் தம்பதியினருக்கு 16 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். ஏழு குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்தன. தாயார் குழந்தைகளைப் பெற்றெடுத்த போது செவிலியர்கள் யாரும் உடனில்லை. தொப்புள் கொடியைக் கூட தானே அறுத்தெறிய வேண்டிய நிலை. பிரசவம் முடிந்து சில தினங்களில் வீட்டு வேலைகளையும் கவனிக்கத் தொடங்கிவிட்டார். அந்தளவுக்கு அசாத்தியமான மனவுறுதியும் திடமான மனநிலையும் கொண்டவர். 

தலாய் லாமாக்கள் புத்த பெருமானின் அவதாரங்கள் என்றே திபெத் மக்கள் நம்புகின்றனர். ஆனால் புத்த மதத்தில் இது போன்ற நம்பிக்கைகளுக்கு இடமில்லை. ஒரு தலாய் லாமா இறந்ததும் அவரது ஆத்மா புதிதாக பிறந்த குழந்தையொன்றின் உடலினுள் புகுந்துகொள்வதாக அவர்கள் நம்புகின்றனர். பல்வேறு சோதனைகளின் ஊடாக இந்தக் குழந்தை இனங்காணப்பட்ட பின்  ஊர்வலமாக லாஸா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு சம்பிரதாய முறையில் தலாய் லாமா என்ற புனிதப் பதவியில் அமர்த்தப்படும்.  லாஸாவிலுள்ள ஆயிரம் அறைகளைக் கொண்ட பொதாலா அரண்மனையே தலாய் லாமாவின் வாசஸ்தலமாகும். ஒவ்வொரு அறையிலும் பழங்காலப் பொருட்கள் நிறைந்திருக்கும். ஒரு சில அறைகளில் வெள்ளியும் தங்கமும் விலையுயர்ந்த கற்களும் இருந்தன. வேறு சில அறைகளில் அந்தக் காலத்தில் பயன்படுத்திய வாள், கத்தி, கவசம், ஈட்டி ஆகியவற்றுடன் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் குவித்து வைக்கப்படிருக்கின்றன. பழைய தலாய் லாமாக்களின் தனிப்பட்ட பொருட்கள் புத்தகங்கள் ஆகியவை சில அறைகளில் காணப்படுகின்றன. 

தலாய் லாமாவுக்கு அடுத்த அந்தஸ்துள்ள பதவி பஞ்சன் லாமா ஆகும். திபெத்தியர்களைப் பொருத்தவரை இவர்கள் இருவருமே அரசியல், ஆன்மீகம் இரண்டிலும் கௌரவமான உயர்பதவி வகிப்பவர்கள். ஒரு பஞ்சன் லாமா அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதும், அந்த தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவை தேர்வு செய்வதும் சங்கிலித் தொடர் போல் பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது பாரம்பரிய விடயமாகும். 

தற்போது பதவியிலிருப்பவர் தலாய் லாமா என இனங்காணப்பட்ட முறையைப் பற்றி அலசுவோம். இந்தத் தேடல் தியானத்தில் தொடங்குகிறது. திபெத்திலுள்ள புனித ஏரியின் பெயர் லாமோ லாட்சோ. இந்த ஏரியை பால்டன் லாமோ எனும் தேவதை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. தலாய் லாமா இனங்காண முன்பு இந்த ஆற்றங்கரையில் அமர்ந்து பௌத்த தர்மகர்த்தாக்கள் தியானம் செய்வது வழக்கம். தியானம் செய்பவரின் கனவில் தேவதை தோன்றி அடுத்த தலாய் லாமாவை அடையாளம் காட்டுவதாக நம்பப்படுகிறது. குறித்த இடத்தில் அவர் வசிக்கிறார் என்று தேவதைகள் கைகாட்டுவதில்லை. மாறாக சில குறிப்புகளை தேவதைகள் அளிக்கும். சங்கேத வடிவில் அவை அமைந்திருக்கும். உதாரணத்திற்கு ஏரிக்கருகில் ஒரு பள்ளம் தோன்றி அதற்கு மேலே மேகங்கள் பல வடிவங்களில் தோன்றும். இந்த வடிவங்கள் அனைத்தும் சங்கேதக் குறிப்புகள். அடுத்த தலாய் லாமா யார் என்பதற்கான விடை இதில் அடங்கியிருக்கும். இந்தக் குறிப்புகளை சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டால் விளக்கங்கள் கிடைக்கத் தொடங்கும். ஒவ்வொரு தலாய் லாமாவும் ஒவ்வொரு விதமாக அடையாளம் காட்டப்படுவார். பீடத்தில் இருக்கும் தலாய் லாமா இறந்துவிட்டால் அவரை எரிக்கும் புகை எந்தத் திசையில் செல்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட திசையில் உள்ள பகுதிகளை ஆராய்வார்கள். அங்கேயுள்ள குழந்தைகளை உன்னிப்பாக பார்வையிடுவார்கள். சோதனைகள் செய்து பிறகு முடிவெடுப்பார்கள். 

தற்போதுள்ள தலாய் லாமாவை இனங்காண்பதற்கு அனைத்து திறமைகளையும் கொண்ட ரெடிங் ரின்போசே இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். சம்பிரதாயப்படி முதல் குறிப்பை பெற இவர் லாமோ லாட்சோ ஏரிக்கு சென்று தியானத்தை ஆரம்பித்தார். அப்போது பலத்த காற்று வீசியது. நீல நிற தண்ணீர் வெள்ளை நிறமாக மாறி கறுப்பு நிறத்தில் பெரிய பள்ளம் தோன்றியது. அதன் மேலே கருமேகங்கள் பல வடிவங்களில் விரிந்தன. அவர் கண்களுக்கு மட்டும் தெரியும் வகையில் அ, க, ம எனும் மூன்று திபெத்திய எழுத்துக்கள் தோன்றி மறைந்தன. கூடவே பல காட்சிகள் அடுத்தடுத்து கண்முன் விரிந்தன. அவையாவன மூன்று அடுக்குகள் கொண்ட பொற்கூரை வேய்ந்த பௌத்த ஆலயம், ஒரு கிராமப்புற வீடு, மழை நீர் இறங்கும் கால்வாய், மலைப் பாதை, கொடி மரம், வீட்டு வாசலில் ஒரு கறுப்பு, வெள்ளை நாய். ரெடிங் இந்தக் காட்சிகளை தொகுத்துக் கொண்டார். 13 ஆம் தலாய் லாமா இறந்த போது அவர் தலை திரும்பிய கிழக்குத் திசையை குறித்துக் கொண்டார். அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்தார். சில விடயங்கள் புரிந்தன. அ என்பது ஆம்தோ என்ற பகுதியைக் குறிக்கும், க என்பது மூன்றடுக்கு கொண்ட கும்பம் பௌத்த ஆலயம், ம என்பது கர்மா ரோல்பாய் தோர்ஜே எனும் இடத்தைக் குறிக்கிறது. இந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு தலாய் லாமாவை தேட ஆரம்பித்தார்கள். 

பஞ்சன் லாமா அவர்களால் நியமிக்கப்பட்ட ரெடிங் ரின்போசே 13 ஆம் தலாய் லாமா வைத்திருந்த சில பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். அந்தப் பொருட்களைப் போல உருவாக்கப்பட்டிருந்த போலிகளையும் உடன் கொண்டு சென்றார். அவர் கொண்டு சென்றவை தியானத்தின் போது பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் கறுப்பு மணிகள் கொண்ட இரண்டு ஜெப மாலைகள், இரண்டு கைத்தடிகள், இரண்டு உடுக்கைகள் என்பனவாகும்.

பஞ்சன் லாமா அவர்களினால் ரெடிங் ரின்போசே மூலமாக மூன்று குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். மூவரும் ஆம்தோ பகுதியை சேர்ந்தவர்கள். அனைவரும் கும்பம் பௌத்த ஆலயத்திற்கு அருகே வசித்தவர்கள். இவர்களில் ஒருவரே அடுத்த தலாய் லாமா என கணிக்கப்பட்டார்கள். தேடல் தொடங்கியது. ஆரம்பிக்கும் போதே மூவரில் ஒரு சிறுவன் இறந்து போயிருந்தான். அடுத்த சிறுவனோ இவர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தான். எனவே மூன்றாவது சிறுவன் இருக்குமிடத்தை நோக்கிச் சென்றனர். நம்பிக்கையுடன் முன்னேறிய குழு ரின்போசேவின் குறிப்புகளின் அடிப்படையில் வீடு வீடாத் தேடினார்கள். இறுதியில் ஒரு வீட்டை அடைந்தனர். 

கிராமப்புற வீடு, மழைநீர் இறங்கும் சரிவுக் கால்வாய், மலைப் பாதை, கொடி மரம், வாசலிலே ஒரு நாய் ஒன்றுவிடாமல் அனைத்தும் பொருந்தியிருந்தன. 

ரின்போசே தன்னை அடையாளம் தெரியாதவாறு உடைகளை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் அந்தச் சிறுவன் வீட்டிற்குள் நுழைந்தார். கடுமையான பனிப் பொழிவால் இரவு தங்க வேண்டுமென்று அந்த வீட்டினரிடம் அனுமதி கோரினார். அனுமதி கிடைத்தது. சுவையான தேநீர், ரொட்டி ஆகியவை பரிமாறப்பட்டன. தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது லாமோ தொண்டுப் (இன்றைய தலாய் லாமா) திடீரென்று ஓடி வந்தான். ரின்போசே கையிலிருந்த ஜெப மாலை மணிகளை சில நிமிடம் உற்றுப் பார்த்தான். பிறகு பரபரப்புடன் சொன்னான். “இது என்னுடையது. இதை ஏன் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்? அதை என்னிடம் தாருங்கள்” என்றான். ரின்போசே தன் திகைப்பை மறைத்தபடி “இது பழையது. வேண்டுமானால் வேறு தருகிறோம்” என்று கூறினார். அந்தச் சிறுவன் ஒப்புக்கொள்ளாமல் “புதியது வேண்டாம். எனக்கு இதுதான் வேண்டும்” என்றான். இதுதான் தருணம் என்று ரின்போசேவுக்கு தெரிந்து போனது. தாமதிக்காமல் பரிசோதனைகளை ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என நினைத்து பையிலிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து மேசையில் வைத்தார். சிறுவனை அருகில் அழைத்தார். “இந்தா எல்லாமே உனக்காக கொண்டு வந்துள்ளேன். வேண்டியதை எடுத்துக் கொள்” என்றார். அச் சிறுவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அசல் கறுப்பு மற்றும் மஞ்சள் ஜெப மாலைகளை எடுத்துக் கொண்டான். கைத்தடியையும் உடுக்கையையும் எடுத்துக் கொண்டான். தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். “இவை என்னுடையவை எனக்குத்தான் சொந்தம்” என்றான். ரின்போசே ஆராய்ந்தார். 13 ஆம் தலாய் லாமா பயன்படுத்திய பொருட்களை மிகத் துல்லியமாக தேர்ந்தெடுத்திருந்தான். போலியான பொருட்களை மேசையிலிருந்து கீழே தள்ளிவிட்டான் அச்சிறுவன். 

ரின்போசேவுக்கு நம்பிக்கை பிறந்தது. இச்சிருவந்தான் 14 ஆம் தலாய் லாமா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இவ்வாறுதான் இன்றிருக்கும் தலாய் லாமா இனங்காணப்பட்டார். 

நான்கு மாத காலம் நோர்புலிங்கா மாளிகையில் தங்கிய பின்னர், 1940 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி நான்கு வயது நிரம்பிய லாமா தொண்டுப் அதிகாரபூர்வமாக தலாய் லாமாவாக முடிசூட்டப்பட பொதாலா அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 

மங்கள மணியோசை ஒலிக்க, வாத்தியங்கள் முழங்க, முரசுகள் ஒலிக்க திபெத்திய பௌத்த மத பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தில் லாமா தொண்டுப் சிறுவன் உட்கார வைக்கப்பட்டான். தங்கம், வைரம், மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினங்களால் உருவாக்கப்பட்ட சிம்மாசனத்தை இரு பக்கங்களிலும் எட்டு சிங்கங்களின் உருவங்கள் தாங்கிக் கொண்டிருந்தன. தலாய் லாமாவை விட உயரமாக யாரும் உட்காரக் கூடாது என்பதற்காக இந்த சிம்மாசனம் ஏழு அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்தது. பௌத்த விகாரை தர்மகர்த்தா முடிசூட்டு விழாவின் ஆரம்பமாக தலாய் லாமாவை வணங்கி புத்த பகவானின் தங்கச் சிலை, புத்த பகவானைப் பற்றிய நூலுடன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய சம்பிரதாயக் கடமைகள் அடங்கிய குறிப்புகள், பௌத்தர்களின் புனிதப் புத்தகம் உள்ளிட்ட மூன்று முக்கிய பொருட்களை அவருக்கு வழங்கினார். மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை தங்கக் கோப்பையில் அருந்தக் கொடுத்தார்கள். திபெத்திய அரசின் சார்பாக தங்கச் சக்கரம், வெள்ளைச் சங்கு ஆகியவை வழங்கப்பட்டன. அதிகாரபூர்வ அரசுச் சின்னம் பொறித்த இலட்சினையும் வழங்கப்பட்டது. சுமார் ஐந்து மணிநேரம் இந்த சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தன. அவரது குடும்ப பெயரான லாமா தொண்டுப் என்ற பெயருக்கு பதிலாக டென்சின் கியாட்சோ எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அருகிலுள்ள ஜோகாங் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை உட்கார வைத்து தலைமுடியை வெட்ட ஆரம்பித்தனர். ஆசை ஆசையாக வளர்த்த அழகான, நீளமான  முடி தன் கண்முன்னே வெட்டப்படுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குழந்தைதானே. 

முதல் சடங்கு தலை முடியை முற்றிலுமாக மழிக்க வேண்டும் என்பதே. பிறகு தலாய் லாமாவுக்கான பிரத்தியேக ஆடைகள் அணிவிக்கப்பட்டது. தலைமுடி இல்லாமல் புதிய ஆடையில் தன்னைத் தானே கண்ணாடியில் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார் டென்சின் கியாட்சோ எனும் 14 ஆம் புதிய தலாய் லாமா.

தங்களுக்கு புதிய தலாய் லாமா கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் திபெத் நாடே குதூகலித்தது. தலாய் லாமாவாக பீடத்தில் அமர்ந்தாலும் அவர் சிறுவனாக இருந்த காரணத்தினால் அதிகாரம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. அவரைத் தலாய் லாமாவாக இனங்கண்ட ரெடிங் ரின்போசேயின் கட்டுப்பாட்டில்தான் முழு நிர்வாகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய தலாய் லாமாவுக்கு பல நாட்டுப் பிரதிநிதிகள் கொடுத்த விதவிதமான விளையாட்டுப் பொம்மைகள் அவர் அறையில் நிரம்பி வழிந்தன. அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தங்கக் கடிகாரம் ஒன்றையும் பாடும் பறவை பொம்மை ஒன்றையும் பரிசாக அளித்திருந்தார். பிரிட்டன், இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்தும் பரிசுகள் குவிந்திருந்தன. 

திபெத்திய கலை, இலக்கியம், சமஸ்கிருதம், மருத்துவம், இசை, நாட்டியம், சோதிடம், பௌத்த தத்துவம் ஆகிய பாடத்திட்டங்கள் இவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. பௌத்த தத்துவத்தில் பல பிரிவுகள் முக்கியமாக கற்றுக்கொடுக்கப்பட்டது. 

தலாய் லாமாவும் பஞ்சன் லாமாவும் ஒற்றுமையாக இருப்பது சீன அரசுக்கு எரிச்சலை உண்டாக்கியது. இவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவியது.  ஆனால் தொடர்ந்து வந்த பஞ்சன் லாமாக்களில் பத்தாவது பஞ்சன் லாமா ஸோகி   கியால்ட்சென் (1938-1989) சீனாவின் வஞ்சக வலையில் வீழ்ந்தார். இம்முறை சீனா நினைத்ததை சாதித்துக் கொண்டது. 1959 இல் திபெத்தின் மீது சீனா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போதைய தலாய் லாமா டென்சின் கியாட்சோ (24 வயது) சீன அரசிற்குப் பயந்து வெளியேறி இந்தியாவில் 1959ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி தஞ்சம் புகுந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடைக்கலம் அளித்தார். இமயமலை அடிவாரத்திலுள்ள தரம்சாலா என்ற இடத்தில் எல்லை தாண்டிய திபெத்திய அரசு நிறுவப்பட்டது. 


திபெத் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய திருப்பம் இப்போது ஏற்பட்டது. திபெத் பௌத்தத்தின் இரு கண்களாக தலாய் லாமாவும் பஞ்சன் லாமாவும் கருதப்படுவது தெரிந்ததே. வழக்கத்துக்கு மாற்றமாக 10 ஆவது பஞ்சன் லாமா சீன அரசிற்கு தனது முழு ஆதரவையும் பகிரங்கமாக அறிவித்தார். பஞ்சன் லாமாவின் சம்மதத்துடன்தான் திபெத் மீது ஆக்கிரமிப்பு நடத்தினோம் என சீன அரசு உள்நாட்டு மக்களையும் உலக நாடுகளையும் நம்ப வைக்கத் திட்டமிட்டது. 

1989 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி 10 ஆவது பஞ்சன் லாமா தனது 51 ஆவது வயதில் மர்மமான முறையில் திடீரென மரணமடைந்தார். புதிய 11 ஆவது பஞ்சன் லாமா தேடுதலின் பின்னர் ஆறு வருடங்கள் கழித்து 1995 ஆம் மே மாதம் 14 ஆம் திகதி தலாய் லாமா, புதிய பஞ்சன் லாமா கெதும் சோகி நியிமா என்பவரை நியமித்தார். சீன அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் மகனான கியான்சென் நொர்பு என்பவரை பஞ்சன் லாமாவாக தேர்வு செய்திருக்கிறோம் என சீன அரசு அறிவித்தது. 

திபெத்திய அகதிகளுக்காக இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் ஆச்சார்ய கிருபளானி தலைமையில் மறுவாழ்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அமெரிக்காவும் வேறு பல நாடுகளும் நிதயுதவியளித்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையை சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் தலாய் லாமாவை பார்க்க வந்திருந்தார். திபெத்தை போன்று இலங்கையும் பௌத்த நாடு என்பதால் இருவரும் பௌத்த ஆன்மீகம் பற்றி உரையாடினர். இறுதியில் விடை பெறும்போது இலங்கைக்கு வருமாறு தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுத்தார். அவர் பௌத்தம் தழைக்கும் முக்கிய நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதாலும், அதைவிட பகவான் புத்தரின் புனிதமான “பல்” இலங்கையில் இன்றைக்கும் மக்கள் பார்வைக்கு இருப்பதாலும் தலாய் லாமா உடனடியாக வருவதற்கு ஒப்புக்கொண்டார். பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் திடீரென ஒருநாள் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து தந்தி ஒன்று வந்தது. சில எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக தலாய் லாமாவை வரவேற்க இயலாத சூழல் நிலவுவதாக தெரிவித்திருந்தார்கள். அந்த எதிர்பாரா நிகழ்வுகள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை தலாய் லாமா உணர்ந்துகொண்டார். 

சீன அரசின் எதிரியாக கருதப்படும் தலாய் லாமாவுக்கு இந்தியா புகலிடம் அளித்ததை அடுத்து இரு நாடுகளுக்குமிடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டது. முறுகல் நிலை முற்றி 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி சீன இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியும் உதவிக்காக உடனடியாக விமானங்களையும் ஆயுதங்களையும் அனுப்புவதாக உறுதியளித்தார். சீனா என்ன நினைத்ததோ! திடீரென போரை நிறுத்துவதாக அறிவித்தது. போர் நிறுத்தப்பட்டது. ஆனால் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட 33,000 சதுர கிலோ மீற்றர் பகுதியை விட்டு அது நகரவில்லை. (அந்தப் பகுதியை இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுக்காமல் இன்றைக்கும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது.) இரு நாடுகளுக்குமிடையே நடந்த போரில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. திபெத் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்திய பகுதிகளை சீனா வளைத்துக் கொண்டது. இதன் மூலம் திபெத்தை சுற்றி இந்தியப் பகுதிகளையே வேலியாக்கிவிட்டது. பிரதமர் நேரு அதிர்ந்து போனார். தலாய் லாமா தன்னால்தான் இந்தியா மிகப் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டதாக வருந்தினார். நேருவிடம் நேரடியாகவே தனது வருத்தத்தை தெரிவித்தார். 

நேருவைத் தொடர்ந்து வந்த அனைத்து இந்தியப் பிரதமர்களும் தலாய் லாமாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் திபெத் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தலாய் லாமா அந்தந்த நாடுகளுக்கு சென்று திபெத் அகதிகளுக்கு ஆறுதலளித்து வந்தார். தலாய் லாமாவுக்கு 1989 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் 84  டாக்டர் பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தின.  இதுவரை சுமார் 62 நாடுகளுக்கு தலாய் லாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 106 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  
இடையிடையே திபெத்திய மக்கள் சீன இராணுவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். சீன அரசு ஆயிரக்கணக்கில் திபெத் மக்களை கொன்று குவிப்பார்கள். திபெத்தியக் கடைகளுக்கு சீன இராணுவமே தீ வைத்து கொளுத்துவர். ஒரு சந்தர்ப்பத்தில் ஜோகாங் பௌத்த ஆலயத்தையும் இராணுவம் விட்டுவைக்கவில்லை. உள்ளே நுழைந்து அங்கே அமைதியாக தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிக்குகளை வெட்டிக் கொன்றனர். சில நேரத்தில் ஜோகாங் ஆலயமே சுடுகாடாகியது. கடுமையான பத்திரிகை தணிக்கைகளையும் மீறி இந்த செய்திகளை உலகுக்கு அறிவித்தவர் பிரிட்டிஷ் அரசியல் தலைவர் லோர்ட் எனல் என்பவர் ஆவார். இவர் திபெத்தில் மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய வந்தவர். சீனர்களின் கோரத்தாண்டவம் இவராலேயே வெளிச்சத்திற்கு வந்தது.  

திபெத்திய பௌத்த பிக்குகள் கூட சித்திரவதைக்குள்ளானார்கள். மேலும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டனர். திபெத்தில் இருக்கும் சீனர்கள் எத்தனை பிள்ளைகளையும் பெறலாம். திபெத் மக்கள் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற முடியாது என்று சீன இராணுவத்தின் அடாவடித்தனம் தொடர்ந்தது. மூன்றாவது முறையாக எந்தவொரு திபெத்திய பெண்ணாவது கருவுற்றால் கருவை வலுக்கட்டாயமாக சிதைக்கும் கொடூரத்தை சீனர்கள் செய்துவந்தனர். இதன் மூலம் திபெத்திய மக்கள் தொகை குறைந்து சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சீனாவின் இந்த திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையால் தலாய் லாமா கவலை கொண்டுள்ளார்.      

தலாய் லாமா ஓய்வில்லாத கடுமையான உழைப்புக் காரணமாக நோய்வாய்ப்பட்டுவிட்டார். 10-10-2008 அன்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். தொடர்ந்தும் தன்னால் முன்பு போல் முழுவேகத்துடன் உழைக்க முடியுமோ என்று யோசித்ததன் விளைவாக 25-10-2008 இல் சீன அரசுக்கு அறிக்கை ஒன்றை விடுத்தார். சொந்த நாடான திபெத்திற்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்க பாடுபட்டு கிடைக்கவில்லை. திபெத் மக்களோ சொந்த நாட்டில் பாரபட்சமாக நடாத்தப்படுகிறார்கள். அதுபற்றி தலாய் லாமா கவலையடைந்ததால்  தனிநாடு அந்தஸ்து வேண்டாம். சுயாட்சி அதிகாரமே போதும் என்று சீனாவிடம் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகாவது திபெத்திய படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நிறுத்தப்படல் வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். திபெத்திற்கு இனியொரு தலாய் லாமா தேவைப்படாது என்றும் அவர் கூறினார். 

தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்து 55 ஆண்டுகளாகியும் திபெத்திய பிரச்சினைக்கு இன்னும் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. தனது கோரிக்கைகளுக்கு என்றேனும் ஒருநாள் சீனா செவிசாய்க்கும், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் திபெத்திற்கு சுயாட்சி வழங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தலாய் லாமா. தலாய் லாமாவின்  எதிர்பார்ப்பு நிறைவேறுமா?!!!!

3 கருத்துரைகள்:

நடுநிலையான ஒரு தலைவர்

அறமும் மிகுந்த நிதானமும் மெல்லியல்புமுள்ளவர். 1989 நோபல் பரிசு உரையை ஒஸ்லோ நகரில் நேரில் கேட்டபோது தலைலாமா மீதான நன்மதிப்பு உயர்ந்தது. அவர் உண்மையான பெளத்தர். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன மாமனிதன் என்பதில் சந்தேகமில்லை. தலாய் லாமாவும் குழந்தை சிரிப்பு இலங்கையில் எனக்கு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் சிரிப்பை நினைவுபடுத்தியது.

இலங்கையிலும் எத்தனையோ “தலாய்லாமா” க்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Post a comment