Header Ads



சோதனைமிக்க ஒரு நிலைமைதான், எங்களை நோக்கி இப்போது வந்திருக்கிறது

- எம்.எல்.எஸ்.முஹம்மத் -

அல்ஹம்துலில்லாஹ்.புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

எமது நாட்டில் தொடர்ச்சியாக  நிலவிவரும் மிகவும்  அசாதாரணமான சூழ்நிலைளுக்கு மத்தியிலும் அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் ஒரு மாதகால புனித றமழானை நிறைவு செய்து   இன்று நாம்   அனைவரும் ஈதுள்பித்தர் நோன்புப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அனைவருக்கும்  மகிழ்ச்சிகரமான இன்றைய  தினத்தில் இஸ்லாம் வழிகாட்டியுள்ள ஸாலிஹான நல்லமல்களை மேற்கொள்ள மாவனெல்லை கிரிங்கதெனிய முஸ்லிம்  மக்கள் அனைவரும்  முன்வர வேண்டுமென அஷ்ஷைய்ஹ் ஹுஸைன் ஹாபிஸ்  உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவனெல்ல கிரிங்கதெனிய ஜும்ஆ மஸ்ஜிதில் இன்று (5) இடம்பெற்ற நோன்புப் பெருநாள் குத்பா பேருரையின் போதே மேற்படி மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் அஷ்ஷைய்ஹ் ஹுஸைன் ஹாபிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் இங்கு உரையாற்றுகையில் 

"மனிதர்களாகிய நாம் என்றும்  அவசர புத்தியுடன் செயற்பட முயற்சிக்கின்றோம்.ஆனால் அல்லாஹ் மிகவும் நிதானமாக இருக்கின்றான்.அல்லாஹ்வின் சக்தியும் அவனின் அத்தாட்சிகளும் எம்மை நோக்கி   மெது மெதுவாக வந்துகொண்டிருக்கின்றன.

நபி முஹம்மத் (ஸல்)அவர்கள் தனது தோழர்கள் மத்தியில் உரையாற்றும்போது அல்லாஹ்விடம் அவனது குத்ரத்தை தமது கண்கள்  முன்னால்  காண்பிக்குமாறு பிராத்தித்திருக்கிறார்கள். 

முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய ஒருசிலரால் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து முன்னெடுத்த அண்மைய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின்   மொத்த  முஸ்லிம் சமூகமும் பல தரப்பினராலும் குறைகாணப்பட்டார்கள். தூற்றப்பட்டார்கள். நசுக்கப்பட்டார்கள். பயங்கரவாத சமூகமென  முத்திரையும் குத்தப்பட்டனர்.

அப்பாவி முஸ்லிம்களில் பலர் சிறையிலும் அடைக்கப்பட்டார்கள்.அல்லாஹ்வின் நாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்த  இறை இல்லங்கள் பல உடைத்து சேதமாக்கப்பட்டன.அங்கிருந்த புனித அல்குர்ஆன்  பிரதிநிதிகள்  தீயில் எரிக்கப்பட்டன.பல இடங்களில் முஸ்லீம்களின் உயிர்கள் தீயவர்களின் வாள்களிட்கும் தடிகளிட்கும் இரையாயின.

பலர் காயப்படுத்தப்பட்டார்கள்.பலரின் இல்லங்கள் அவர்களின் கண்களிட்கு முன்னால்  எரித்து சாம்பலாக்கப்பட்டன.முஸ்லீம்களின் சொத்துக்கள் அழித்து ஒழிக்கப்பட்டன.முஸ்லிம்  குழந்தைகளும் பெண்களும் மற்றும்   வயோதிபர்களும் தனியாக தவிக்க விடப்பட்டார்கள்.இத்தனை அநியாயங்களும் தொந்தரவுகளும் எமது இஸ்லாமிய  உம்மாவை ஒன்றன்பின் ஒன்றாக நொறுக்கிய போதிலும் முஸ்லிம்  சமூகம் பதிலடி கொடுக்கவில்லை.சட்டத்தை கையில் எடுத்து செயற்படவுமில்லை.மாறாக அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்.இத்தனை சோதனைகளும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள்தான் என நம்பி பொறுமையுடன் இருந்தார்கள். 

எமது உலமாக்களும் சமூகத் தலைமைகளும் அரசியல்  தலைமைகளும் முஸ்லிம்  சமூகத்தை நிதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.அல்லாஹ்விடம் கையேந்த ஆரம்பித்தார்கள்.

இறுதியாக  முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல்கள் தொடர்ந்த போது எமது அரசியல்  தலைவர்கள்   தமது அதிகாரங்களையும் பதவிகளையும் தூக்கி எறிந்தார்கள்.
இந்த அவலமான நிலைதான்  அன்று முஹம்மத்(ஸல்)அவர்களும் இஸ்லாமிய   சமூகமும் எதிர்நோக்கி இருந்தது.மக்கா குறைஷி காபிர்களால் இதனை விடவும் ஆயிரம் மடங்கு பயங்கரமான முறையில் இந்த இஸ்லாமிய உம்மா சோதிக்கப்பட்டிருக்கிறது.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் இடம்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கை எங்கள் அனைவருக்கும் நல்ல முன்மாதிரிகளையும்,சிறந்த பொறுமையையும் கற்றுத் தருகிறது.
மக்கா செல்ல வந்த (ஸல்)அவர்களும் ஸஹாபா சமூகமும் மூன்று  முறையும்  பாரிய ஏமாற்றங்களுக்கு மத்தியில் காபிர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.இறுதியாக சில நிபந்தனைகளுடன்  முஸ்லிம்கள்  உம்றா கடமையை மேற்கொள்ள காபிர்கள்   அனுமதிக்க விரும்பினார்கள்.இதன் பின்னனிகள் பற்றி நாங்கள் பலரும்   அறிந்திருக்கின்றோம்.எமது இன்றைய நெருக்கடியான நிலைமையுடன் தொடர்புள்ளதால் ஒன்றை மாத்திரம்  உங்கள் நினைவிற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அதுதான்  ஹுதைபியா உடன்படிக்கையில் (ஸல்)அவர்கள் "லாஇலாக இல்லல்லாஹு  முஹம்மதுர்ரஸுலுல்லாஹ்"என்று எழுத ஆரம்பித்த போது "முஹம்மத் ரஸூலுல்லாஹ்" என்பதை தவிர்க்குமாறு காபிர்கள் வேண்டினார்கள்.இந்த வேதனையை உணர்ந்த உமர் (ரலி)அவர்கள் கோபப்பட ஆரம்பித்தபோது (ஸல்)அவர்கள் அவரை நிதானப்படுத்தி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள்.ஆனால் பிற்பட்ட   காலத்தில் ஹுதைபியாவில் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் கடைபித்த பொறுமையின் நல்ல விளைவுகளை நாம் அறிகிறோம்.

இதுபோன்ற   ஒரு சோதனைமிக்க ஒரு நிலைமைதான் எங்களை நோக்கியும் இப்போது வந்திருக்கிறது.

ஆரம்பத்தில்  அவர்கள்   எமது ஹலாலை எதிர்த்தார்கள்.இப்போது அவர்கள் எமது குர்ஆனிலும் சுன்னாவிலும் கையை நுழைக்க ஆரம்பித்துள்ளார்கள்.இஸ்லாமிய மார்க்கக்  கல்விக்கு எதிராக போர்க்  கொடியை உயர்த்தி இருக்கிறார்கள்.இஸ்லாமிய  திருமண சட்டங்களை மறுக்க ஆரம்பித்துள்ளார்கள்.பர்தாவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.இஸ்லாமிய அடையாளங்களுடனும்  உணர்வுகளுடனும் வாழ முடியாத இக்கட்டான நிலையை உருவாக்க  விரும்புகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் ஹுதைபியா எமக்கு கற்றுத் தரும் பாடங்களின் பக்கம் அவதானம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

நாங்கள்  அல்லாஹ்வின் தீனை பாதுகாக்கும் தூய எண்ணத்துடன் ஏகத்துவத்தை ஏற்று சுன்னாவை பின்பற்றி ஈமானிய உணர்வுடன் வாழ முற்படுமென்றிருந்தால் நிச்சயமாக  அல்லாஹ்வின் உதவி எங்களை வந்தே  தீரும் என்பதை உங்கள் மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய குடும்ப உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டாம்.மனிதன் என்ற ரீதியில் இடம்பெற்றிருக்கும் அனைத்துத் தப்புத் தவறுகளையும் மறப்போம்.மன்னிப்போம்.

எமது கிரிங்கதெனிய மக்களிடம் நான் பின்வரும் விடயங்களை மிகத் தாழ்மையாகக் கேட்டுக்  கொள்கின்றேன்.

அல்லாஹ்வின் தீனை பாதுகாக்கும் நோக்குடன் அவனுக்காக ஒன்று படுவோம்.பிளவுகளையும்,  பிரிவினையையும் தவிர்த்துக் கொள்வோம்.அடுத்தவர்களை மதித்து  அன்புடன் நடப்போம்.எமது குடும்ப உறவுகளுடன் என்றும் இணைந்து வாழ்வோம்.

ஒற்றைமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து அல்லாஹ்வின் கயிற்றை பலமாக  பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாமியப் பெண்களே! அல்லாஹ் உங்களின் மனநிலையை தைரியப்படுத்துவானாக.அல்லாஹிடம் கையேந்துங்கள்.தூய எண்ணத்துடன் நீங்கள் மேற்கொள்ளும் பிராத்தனைகளை அல்லாஹ் அங்கீகரிக்கக் காத்திருக்கின்றான்.
இன்று இங்கு வருகை தந்துள்ள ஊர் ஜெமாத்தினர்களே.எமது இந்த மஸ்ஜிதின் நற்செய்தியை இங்கு வருகை தராதவர்களிடம் எத்தி வையுங்கள்.
வருகை தந்துள்ள ஆண்களே நீங்களும் உங்கள் பெண்மனிகளிடமும் எமது நற்செய்தியையும் உருக்கமான வேண்டுகோள்களையும் கண்டிப்பாக   எத்தி வையுங்கள் எனவும் அஷ்ஷேய்ஹ் ஹுஸைன் ஹாபிஸ் தனது பெருநாள் பேருரையின் போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.