Header Ads



தௌஹீத் = ஏகத்துவம்; தீவிரமானதென்பது தவறான கண்ணோட்டம் -மௌலவி அப்துல் வதூத் (ஜிப்ரி)

தௌஹீத் என்ற சொற்றொடருக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தௌஹீத் என்பது இஸ்லாத்துடன் நேரடியாக தொடர்புபட்டதொன்றாகும். தௌஹீத் என்ற சொற்றொடருக்கு ஏகத்துவம், ஒருமைப்படுத்தல் என்பதே பொருளாகும். இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்துகின்றது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் மௌலவி எம்.எஸ். அப்துல் வதூத் (ஜிப்ரி)         தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்கா ணலின்போது தெரிவித்தார். 

மூட நம்பிக்கை ஒழிப்பு, தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்தல் போன்ற பிரசாரங்களில் சகோதர முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து. தௌஹீத் என்ற சொற்பதத்துக்கு பயங்கரவாத சாயம் பூசப்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம்களை விரோதிகளாகப் பார்த்து அவர்களுக்கெதிரான வன்மம் ஏனைய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில தீய சக்திகள் மேற்கொண்ட தவறான செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் அவமானப்பட்டு நிற்கின்றது. இது தொடர்பில் ஜமாஅத் அன்ஸாரஸ் சுன்னத்தில் முஹம்மதியா, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் ராபித்து அஹ்லுஸ் சுன்னா ஆகிய ஒன்றிணைந்து ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தாக இயங்கி வருகின்றது. இந்த ஐக்கிய ஜமாஅத் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்குக்கட்டுப்பட்டு இயங்கும் அமைப்பாகும் எனவும் அப்துல் வதூத் மௌலவி சுட்டிக்காட்டியுள்ளார்.  

அவருடனான நேர்காணல் விபரம் வருமாறு:- 

கேள்வி – முதலில் தெளஹீத் ஜமாஅத் பற்றி சற்று விளக்கமாக தெளிவுப்படுத்துகிறீர்களா? 

பதில் : - தௌஹீத்  என்ற அரபுப் பதத்திற்கு ஏகத்துவம், ஒருமைப்படுத்தல் என்பது பொருளாகும். இஸ்லாத்தின் இறைக் கோட்பாட்டில் தௌஹீத்  என்பது மிகவும் பிரதானமான ஓர் அம்சமாகும். இப்பிரபஞ்சத்தைப் படைத்து நிருவகிக்கின்ற அல்லாஹ் மாத்திரமே வணங்கி வழிபடத் தகுதியானவன் என்பதே தௌஹீத்  ஆகும்.  பொதுவாக முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படக்கூடிய மூடநம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் எதிர்த்து, தனி நபர் வழிபாடு, இறந்தவர்களிடம் பிரார்த்தனை புரிவது, அவர்களது பெயரில் அறுத்து பலியிடுவது, அவர்களது மண்ணறைகளை புனிதப்படுத்துவது போன்ற செயல்களை கண்டித்து வரக்கூடிய மக்கள் தௌஹீத்  வாதிகள் என்று அழைக்கப்படுவர்.  இலங்கையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்தக் கருத்துள்ள மக்கள் இருந்து வருகின்றனர். ஆனால் “தௌஹீத்  ஜமாஅத்” என்ற பெயரில் ஓர் அமைப்பாக இவர்கள் அக்காலங்களில் அடையாளப்படுத்தப்படவில்லை. 

இக்கருத்துக்களை மக்கள் மத்தியில் போதித்து வந்து அப்துல் ஹமீத் என்ற அறிஞர் குருநாகல, பறகஹதெனிய என்ற ஊரில் 1947ஆம் ஆண்டு ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னத்தில் முஹம்மதிய்யா (JASM) என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். இது இலங்கை பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும்.  இதே கருத்தை உடைய கொழும்பைச் சேர்ந்த நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் கொழும்பில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ) என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். இதுதான் இலங்கையில் முதன்முதலில் தௌஹீத்  ஜமாஅத் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து செயற்படக்கூடியவர்கள்.  இவ்விரு அமைப்புக்களும் (JASM & ACTJ) போதித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மக்கள் தத்தமது ஊர்களில் தௌஹீத்  ஜமாஅத் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். 

இலங்கையில் ஒவ்வொரு ஊரிலும் தௌஹீத் வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2013/2014காலப்பகுதியில் கொழும்பில் (UTJ) United Thowheed jamath என்ற பெயரில் ஓர் அமைப்பு தோற்றம் பெற்றது. அதன் காரியாலயம் தற்போது திஹாரியில் உள்ளது.  இவர்கள் அனைவரும் நாட்டுச் சட்டங்களை மதித்து பிற மதங்களை கண்ணியப்படுத்தி வரக்கூடியவர்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக, குறிப்பாக ISIS இற்கு எதிராக செயற்படக்கூடியவர்கள். ISIS இற்கு எதிராக இவர்கள் எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.  

அதே நேரத்தில் அந்த ஊர்களிலுள்ள சடங்கு சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் ஆதரித்து, நல்லடியார்களின் அடக்கஸ்தலங்களைப் புனிதப்படுத்தி அவர்களது பெயர்களில் நேர்ச்சை செய்து காணிக்கைககள் கொடுத்து வந்த முஸ்லிம்கள் இவர்களைக் கடுமையாக எதிர்த்தனர். 

மேற்படி இரு அமைப்புக்களையும் (JASM & ACTJ) அவர்கள் சார்ந்தவர்களையும் விமர்சித்து பேசிவந்த ஒருவர்தான் இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த பி. ஜெயினுலாப்தீன்என்பவர். மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களை எதிர்ப்பதில் மேற்படி (JASM & ACTJ) ஆகிய அமைப்புகளுடன் இவர் உடன்பட்ட போதிலும் வேறு சில சமய சிந்தனைகளில் இவர்களுடன் முரண்பட்டு இவர்களை எதிர்த்து வந்தார். இவர் தமிழ் நாட்டில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் TNTJ என்ற ஓர் அமைப்பை உருவாக்கி செயற்பட்டு வந்தார். அவரது வழிகாட்டலில் 2004காலப்பகுதியில் இலங்கையில் அவரது கிளையாக உருவாக்கப்பட்டதே (SLTJ) ஸ்ரீங்கா தௌஹீத் ஜமாஅத்.  அண்மையில் SLTJ நிருவாகிகள் மத்தியில் ஏற்பட்ட நிருவாகச் சிக்கல்களினால் அவர்கள் இரண்டாகப் பிரிந்து செயற்படுகின்றனர். ஒரு குழு SLTJ என்றும் மற்றயது CTJ என்றும் இயங்குகின்றன. ஆனால் இருவரது கொள்கையும் ஒன்றே. 

தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ)  

ஸஹ்ரான் ஹாஷிம் என்பவனால் 2012காலப்பகுதியில் காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே தேசிய தௌஹீத்  ஜமாஅத் NTJ என்பது.  JASM, ACTJ, UTJ, ALTJ போன்ற அமைப்புகளோடு தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) இற்கு எந்த தொடர்பும் அப்போதும் இருக்கவில்லை. மாறாக ஸஹ்ரான் இவர்களை எதிர்த்தே வந்திருக்கின்றான்.  அதேபோன்று தேசிய தௌஹீத்  ஜமாஅத்துக்கும் ஸ்ரீலங்கா தௌஹீத்  ஜமாஅத்துக்கும், சிலோன் தௌஹீத் ஜமாஅத்துக்கும் இடையில் எமது கூட்டு அமைப்பு எந்தவிதமான தொடர்பையும் கொண்டு செயற்படவில்லை என்பதை வலியுறுத்திக்கூறி வைக்கின்றோம். 

கேள்வி – என்றாலும் கூட தௌஹீத் என்ற பெயரில் அனைத்து அமைப்புகளும் அழைக்கப்படுவதால் நாட்டில் பெரும் குழப்பநிலையையும், சந்தேகத்தையும் பரவலாகவே நோக்கமுடிகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கும் எவ்வாறு சமூகம் முகம் கொடுக்கபோகின்றது? 

பதில் – 2019ஏப்ரல் 21இல் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பொதுவாக முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக தௌஹீத் அமைப்புக்கள் மீதும் தப்பெண்ணம் உருவாகி வருகின்றது. இதனால் தவ்ஹீத் அமைப்புக்கள் தன்னிலை விளக்கம் ஒன்றிணை வழங்கும் காலத்தின் கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன. 

“தௌஹீத்” என்றால் “ஓரிறைக் கொள்கை” என்பது அர்த்தமாகும். ஜமாஅத் என்றால் அமைப்பு, கூட்டம் என்பது பொருளாகும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்; அவனுக்கு இணை, துணை இல்லை என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடே “தௌஹீத் ” என்று கூறப்படும். அனைத்து முஸ்லிம்களும் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களே! இஸ்லாமிய பிரசார அமைப்புக்கள் தாம் முதன்மைப்படுத்தும், முன்னுரிமை கொடுக்கும் அம்சங்களுக்கு ஏற்ப தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அமைய இந்த சித்தாந்தத்திற்கு முன்னுரிமை கொடுத்து பிரசாரம் செய்யும் அமைப்புக்கள் தம்மை தௌஹீத்  ஜமாஅத்துக்கள் என அடையாளப்படுத்தி வருகின்றன. 

நிறுவன ரீதியில் 1940களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்புக்கள் பல பெயர்களில் இயங்கி வருகின்றன. சில இடங்களில் தமது ஊருடன் இணைத்தும் மற்றும் சில அமைப்புக்கள் நாட்டுடன் இணைத்தும் (உ+ம் : ஓல் சிலோன் தௌஹீத்  ஜமாஅத்) இன்னும் சில அமைப்புக்கள் வேறு பெயர்களிலும் (உ+ம் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மத்திய்யா) தம்மை அடையாளப்படுத்தியுள்ளன.  இந்த அமைப்புக்கள் நாட்டின் இறையாண்மையை மதித்து இலங்கை அரசியல் சாசனம், இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டே இந்நாட்டில் செயற்பட்டு வருகின்றன. அன்பையும், அமைதியையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளை, புனித அல்குர்ஆனையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் மையமாகக் கொண்டு இயங்கும் இவ்வமைப்புகள் நாட்டின் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியில் பாரிய பங்காற்றி வருகின்றன. 

இந்நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தம் மற்றும் வெள்ளம், வரட்சி, அசாதாரண சூழ்நிலைகளின் போது இன, மத பேதமின்றி சமூக சேவைகளை வழங்கி வந்துள்ளன.  

இன நல்லுறவைப் பேணுவதை வலியுறுத்தி வரும் இவ்வமைப்புக்கள் நாட்டில் ஏற்பட்ட இன முறுகல் சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்களைப் பொறுமைகாக்கப்போதித்து வந்துள்ளதுடன் ஏனைய சமய சமூக மக்களுடன் சமூக உறவைப் பேணி வந்துள்ளன. 

இந்த அமைப்புக்கள் இஸ்லாம் போதிக்கும் சாந்தி சமாதானத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பிரசாரம் செய்து வந்துள்ளதுடன் இஸ்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரானது என்பதைப் போதித்தும் வந்திருக்கும் அதேவேளை, ISIS போன்ற இஸ்லாமிய விரோத பயங்கரவாத அமைப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வுகள், உரைகள், மாநாடுகள், வெள்ளி தொழுகை நிகழ்ச்சிகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் நிகழ்த்தி வந்துள்ளன. 

இஸ்லாம் பிற மத தெய்வங்களை திட்டுவதைத் தடுத்துள்ளது. (அல்குர் ஆன் 6:108). பிற சமூக மக்களுடன் பண்பாடாக நடந்து கொள்ளுமாறு போதிக்கின்றது (அல்குர்ஆன் 60:08) என்பன போன்ற அடிப்படை அம்சங்களையும் போதித்து வந்துள்ளன. அத்துடன் பிற சமய ஆலயங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது தடைசெய்யப்பட்டது போன்ற நபிகளாரின் தூய போதனைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளன. 

மேலும், போதையொழிப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், சீதன ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். 

மூட நம்பிக்கை ஒழிப்பு, தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்தல் போன்ற பிரசாரங்களில் சகோதர முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இருப்பினும் இவை எமது சகோதரத்துவ வட்டத்திற்கு உட்பட்டவையே. 

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாட்டை இந்த அமைப்புக்கள் அனைத்துமே வன்மையாகக் கண்டிப்பதுடன் குற்றவாளிகள், அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று முழு மனதுடன் வேண்டிக் கொள்கின்றோம். 

அனைத்து தௌஹீத்  அமைப்புக்களுடனும் பல விடயங்களில் முரண்பட்டு வந்த தேசிய தௌஹீத்  ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் ஓர் அமைப்பில் இருந்து 2017இல் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் இந்த பயங்கரவாதச் செயற்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுவதால் தௌஹீத்  என்ற பெயரில் இயங்கிவரும் அனைத்து அமைப்புக்களும் இக்குற்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்ற தோரணையில் நோக்க முடியாது. மாறாக, தௌஹீத்  அமைப்புக்கள் ISIS என்ற அமைப்பு முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளியேறிய (கவாரிஜ்) அமைப்பு என்றும் இஸ்லாத்தின் எதிரிகள் தமது அரசியல் நலன்களை அடைந்து கொள்ள பயன்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இஸ்லாமிய எதிர்ப்பு சக்தி என்றும் பிரசாரம் செய்து வந்துள்ளனர். (இதற்கான எழுத்துமூல மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளன.)  

தவ்ஹீத் உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சம்பந்தப்பட்ட அரச தரப்புகளுக்கு இவர்கள் குறித்து ஏற்கனவே தரவுகளை வழங்கியுள்ளமை தற்கால செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளமை யாவரும் அறிந்ததே. மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் தௌஹீத் இயக்கங்கள் உட்பட இலங்கையின் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றிணைந்து 2015ஜூலை மாதம் ISIS தீவிரவாத இயக்கம் சம்பந்தமாக வெளியிட்ட கூட்டுப் பிரகடனமும் யாவரும் அறிந்ததே.   எனவே, தௌஹீத் என்ற பெயரே தீவிரவாதமானது என்ற தவறான கண்ணோட்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று சகல தரப்பினர்களையும் வினமாயகக் கேட்டுக் கொள்கின்றோம். 

இலங்கை முஸ்லிம்களும் தௌஹீத்அமைப்புக்களும் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதையும், தௌஹீத்  அமைப்புக்கள் நாட்டின் சட்ட ஒழுங்கையும் ஜனநாயக மரபையும் பேணியே இந்த நாட்டில் செயற்படும் என்றும், தீவிரவாத செயற்பாடுகளுக்கு ஒரு போதும் நாம் துணை போகமாட்டோம் என்றும் இலங்கை அரசின் தீவிரவாத ஒழிப்பு மற்றும் தடுப்புச் செயற்பாடுகளுக்கு என்றும் முழு மனதுடன் பூரணமாக ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உறுதியளிக்கின்றோம்.  நாட்டில் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழலில் இருந்து எமது தாய்நாட்டை மீட்க அனைத்து விதமான பேதங்களையும் மறந்து இலங்கையர் என்ற ஐக்கிய மனப்பான்மையுடன் செயற்பட ஒன்றுபடுவோமாக!   

நேர்காணல்  எம்.ஏ.எம். நிலாம் 

4 comments:

  1. THOUHID JAMATH, THATKOLAI JAMATH,YAHUDI, NASARAKKALINAL KIDAIKKUM
    PANATHAI, PANGU PODUVAZIL,
    PIRACHINAI.
    AZALAAL, PAMARA MAKKALAI
    EMATRUM PALA PIRIVUHAL.
    THOUHEED ENGEI.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Imthiyas ஐப் பார்த்தால் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் நயவஞ்ச ஜமாத் போன்று தோன்றுகிறது.

    ReplyDelete
  4. இம்தியாஸ் செல்வதில் எந்த தப்பும் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.