Header Ads



கொழும்பில் 68 வயது வைத்தியரை, கொலைசெய்தது 3 பாடசாலை மாணவர்களே

கொழும்பு - கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் மாவத்தையிலுள்ள வீடொன்றுக்குள் படுகொலை செய்யப்பட்டிருந்த வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

வைத்தியரின் முகத்தில் தூவப்பட்ட மிளகாய்த்தூளால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையிலேயே மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி விடயத்தை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இலக்கம் - 30, புளூமண்டல் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13 எனும் விலாசத்தை கொண்ட இரு மாடி வீட்டிலிருந்து சேவியல் ஜோசப் நெரில் சுரேஸ் குமார் பிரிட்டோ (வயது 68) என்ற ஓய்வுபெற்ற வைத்தியரின் சடலம் கடந்த மே 23ஆம் திகதியன்று மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், சம்பவம் இடம்பெற்று பத்து நாள்களுக்குப் பின், 19 வயதுடைய தெமட்டகொடையை சேர்ந்த ரமேஷ் ​ராஜ் மகேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய, கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15, 17 வயதுடைய மேலுமிரு சிறுவர்கள் கடந்த மூன்றாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மூவரும் கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்ற மற்றும் கல்வி பயில்கின்ற மாணவர்கள் என நீதிமன்றில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.