Header Ads



தேர்தல் கூட்டணி பேச்சுக்களை ஆரம்பித்தார் பசில் - இன்று 3 கட்சிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடல்


எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து செயற்படுவது மற்றும் நிரந்தர வேலைத்திட்டத்திற்காக தேசிய கொள்கையை வகுப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அரசியல் கட்சிகள் முன்வைக்கும் யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்கவும் கொள்கை வகுக்கும் குழுவில் பிரதிநிதிகளை கலந்துகொள்ள செய்வது தொடர்பில் இதன் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள், அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துதல் உட்பட நாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் முடிவுக்கு எதிராகவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்காகவும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அணியாக இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான பிரதிநிதிகள், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டியூ. குணசேகர தலைமையிலான பிரதிநிதிகள், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சார்பில் அதன் பிரதிச் செயலாளர் திலக்கசிறி தலைமையிலான பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுரபிரியதர்ஷன யாப்பா, சீ.பீ. ரத்நாயக்க ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

No comments

Powered by Blogger.