Header Ads



21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில், அன்றைய காலையிலும் தொலைபேசிக்கு தகவல் வந்தது

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியால் தனக்கு தகவல் வழங்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார். 

தாக்குதலுக்கு முன்னைய நாள் ஏப்ரல் 20 ம் திகதி தனக்கு கிடைத்த வட்சப் தகவல் தொடர்பிலும் ஹேமசிறி பெர்னாண்டோ தகவல் வழங்கினார். 

தாக்குதலுக்கு முன்னைய நாள் இரவு 7.30 அல்லது அண்மித்த நேரத்தில் புலனாய்வு தலைவர் தன்னை தொலைபேசியில் அழைத்து, வட்சப்பில் தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறியதாகவும், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமானது என்றும் அவர் கூறினார். 

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு சபையை உரிய காலத்தில், உரிய வகையில் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குற்றஞ்சுமத்தினார். 

தான் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி நியமிக்கப்பட்டதாக தெரிவித்த ஹேமசிறி பெர்ணான்டோ, தான் பதவி விலகும் வரை நான்கு தடவைகள் மாத்திரமே தேசிய பாதுகாப்பு சபையை ஜனாதிபதி கூட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இவ்வாறு கூட்டப்படும் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்களுக்கு பிரதமர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டாம் என தனக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எந்தவித சுயாதீன அதிகாரங்களையும் வழங்கவில்லை எனவும், ஜனாதிபதியை சந்திப்பதற்கு கூட குறைந்தது இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினால் சில சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த அமைப்பு குறித்து பாதுகாப்பு சபையில் ஆராயப்படுவதை விடுத்து, பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷ் குறித்தே தனது பதவி காலத்தில் நடந்த நான்கு கூட்டங்களின் போதும் ஆராயப்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார். 

அதேநேரம் தாக்குதல் நடந்த அன்று காலை 7.30௮ மணியளவில் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி தன்னை தொலைபேசியில் அழைத்து, கொழும்பு நகரத்தில் மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் எத்தனை இருக்கின்றன என்று வினவியிருந்ததாகவும் கூறினார். 

அது ஏன் என்று தான் அவரிடம் வினவிய போது கத்தோலிக தேவாலயங்களுக்கு அல்ல மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக புலனாய்வுப் பிரிவின் பிரதானி கூறியதாக ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்தார். 

பின்னர் கொழும்பு நகரத்தில் உள்ள மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் தொடர்பில் அவருக்கு தகவல் வழங்கியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்தார்.

No comments

Powered by Blogger.